சென்னை, மார்ச் 16- ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வருவதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை, நிலமெடுப்பு செய்வதில், மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக, அ.தி.மு.க., – எம்.பி., தம்பிதுரை தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக, 2,197.02 எக்டேர் நிலங்களை கையகப்படுத்த, ஏற்கெனவே அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான 17 ரயில்வே திட்டங்களுக்கு தேவையான, 1,253.11 எக்டேர் நிலத்தில், 1,144.84 எக்டேர் நிலம் எடுக்கப்பட்டு, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை — திண்டிவனம் புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்கு, 229.23 எக்டேர் நிலம் எடுக்க செய்ய அனுமதி வழங்கப்பட்டும், ரயில்வே துறையால் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தில், கதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முனையம் அமைக்க, 12.38 எக்டேர் நிலத்திற்கு நிர்வாக அனுமதி, 2022இல் வழங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் ரயில்வே துறையால் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
ரயில் பாதை அமையஉள்ள அரசு புறம்போக்கு நிலங்களை பொறுத்தவரையில், எந்த தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, அரசு நிலங்கள் ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை வழங்குவதில், தமிழ்நாடு வருவாய் துறையால் தாமதம் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்ப பம்பு மோட்டர் உற்பத்திக்கான உயர்திறன் மய்யம் அமைக்கப்படும்
தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு
சென்னை, மார்ச் 16- பம்பு மோட்டார் தொழில் துறை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், உயர் தொழில்நுட்ப பம்பு மோட்டார் உற்பத்திக்கான ‘உயர்திறன் மய்யம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு நிதி அமைச்சர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-2026அய் பாராட்டி அதன் தலைவர்
கே.வி.கார்த்திக் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
பம்பு உற்பத்தியில் கோவை தனித்துவமான இடத்தைப் பெறுகிறது. நாட்டின் முதல் பம்பு 1926 ஆம் ஆண்டு கோவையில் உற்பத்தி செய்யப்பட்டது. பம்பு உற்பத்தியின் நூற்றாண்டை போற்றும் விதமாக, இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்றும், அடுத்து 25 ஆண்டுகளுக்குக்கான இத்தொழிலின் பாதையை இது உருவாக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த மய்யம் எண்ணெய், எரிவாயு, சுரங்கம், எரிசக்தி துறைகளில் பயன்படும் பம்புகளை வடிவமைக்க உதவி செய்யும். உலக பம்பு வர்த்தகத்தில் சம நிலையில் உள்ள நமது நாடு, உயர்நிலையை அடைய இந்த அறிவிப்பு உதவும், கோயம்புத்தூர் உலக பம்பு நகரமாக உருவாக முதல்படியக இந்த மையம் இருக்கும் எனவும் தெரிவித்தார்
ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை, மார்ச் 16- சென்னையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல்வர்
எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் மருத்துவர் கே.சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு ஒருவகை காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையை அவரது குடும்பத்தினர் தொடங்கினர். அவரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள் மற்றும் முதியோருக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகள் இந்த அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மருத்துவர் சூர்யாவின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை பெரியமேடு ஸ்டிரிங்கர் தெருவில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தங்கியிருக்கும் மூதாட்டிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன்படி 30-க்கும் மேற்பட்டோருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சுகாதார கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எல்.அய்.சி. பயிற்சி மய்ய மேனாள் முதல்வர் எம்.கே.கருப்பையா, எல்.அய்.சி. புரசை கிளை மேலாளர், வளர்ச்சி அதிகாரி அய்யாசாமி, ஓய்வு பெற்ற சிறை கண்காணிப்பாளர் மணி, சமூக செயற்பாட்டாளர்கள் அரும்பாக்கம் கே.வாசுகிநாதன் மற்றும் பூர்ணசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.