இடாநகர், ஜூலை 10 அருணாசல பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்கு அக்கட்சிக் கூட்டணியில் என்பிபி இடம்பெற்றுள்ளது. அக்கட்சியின் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைநகர் இடாநகரில் நேற்று (9.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பங்கா பாகே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அருணாசல பிரதேசத்துக்கு தனிச் சட்டங்கள் உள்ளன. மாநிலத்தில் பலவிதமான இனத்தவர்களும் பழங்குடிகளும் உள்ளனர். அத்துடன் இந்த மாநிலத்துக்கு வலுவான மரபு மற்றும் பாரம்பரிய அடையாளம் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க என்பிபி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பழங்குடிகளின் நடை முறை வழக்கத்துடன் பொருந்தும் வகையில், தேவையான மாற்றங்களுடன் தற்போதுள்ள மரபுசார்ந்த சட்டங்களை ஒழுங்குப்படுத்து வதில் ஒன்றிய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.