கேள்வி 1: முத்தமிழ் அறிஞர் கலைஞரை தெலுங்கர் என சில தமிழ் தேசியம் பேசும் பைத்தியங்கள் பிதற்றி வரும் நிலையில், அதற்கு முட்டுக் கொடுப்பதை போல் தமிழிசை சவுந்தர்ராஜன், முதலமைச்சருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளதை மிக லாவகமாக ஆட்கொண்டு, “.எனக்கு தெலுங்கு தெரியாது; நான் படித்ததும் இல்லை. சகோதரி தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ஹிந்தி இடம்பெறவில்லை. தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட தெலங்கானாவில் ஆளுநராக பணியாற்றிய போது தெலுங்கினை அறிந்து கொண்டிருக்கிறார். இதில் இருந்தே மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியது இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்” என விளக்கம் தந்து ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் மகன் என்பதை நிரூபித்துள்ளாரே மாண்புமிகு மு.க.ஸ்டாலின்?
– மன்னை சித்து , மன்னார்குடி – 1.
பதில் 1: கொள்கை உணர்வு என்ற பாலூட்டி வளர்க்கப்பட்டவர் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர். மேலும், திராவிட இயக்கத்தில் இளைஞராக இருந்தே கொள்கைப் பாசறையை அமைத்தவர். இப்படி பதிலடி கொடுப்பது, இயல்புதானே!
மேலும் முதுகெலும்பான தன்மான உணர்வு அவரது குருதி ஓட்டமாயிற்றே!
– – –
கேள்வி 2: கல்வியை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, “மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா” என்று தமிழ்நாடு அரசிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுள்ளதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
– பா. நிர்மலா, குன்றத்தூர்.
பதில் 2: வடபுலத்து ஆர்.எஸ்.எஸ். வித்தைகளுக்கு இது ஒரு பம்மாத்துக் குரல்; அவ்வளவுதான். தமிழில் சொல்லிக்கொடுக்கும் முயற்சி பற்றி முன்பே வேண்டிய முன் ஆயத்தங்கள் தயாராகி உள்ளன; ஆனால், திணிப்பு கூடாது என்பதையும் பார்க்க வேண்டுமே தமிழ்நாடு அரசு. ஆடு நனைவதற்காக ஓநாய் அழ வேண்டாம்!
– – –
கேள்வி 3: பெண்களை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை அளிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் பேசியிருப்பது ஏற்புடையதா?
– செல்வி பாபு, மதுரை.
பதில் 3: ஆட்சி தங்களிடம் சிக்கிவிட்ட ஒரே காரணத்திற்காக கண்டபடி பேசுவது, இந்த நவீன எதேச்சதிகார ராஜாக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது! – உலகம் நகைக்குமே என்ற கவலையே இல்லாமல்!
– – –
கேள்வி 4: தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தற்போது 129ஆக இருக்கும் தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கை 103 ஆகக் குறையும் என்றும், தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே! இழப்பிலிருந்து மீளுவது எப்படி?
– ஜெ.ராதாகிருட்டிணன், கூடுவாஞ்சேரி.
பதில் 4: அதனால்தான் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துப் போராடுகிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர்.
– – –
கேள்வி 5: மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களின் தயாரிப்புப் பொருட்களை பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு செல்லலாம் என்றும், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 நகரங்களில் ‘தோழி’ விடுதிகள் அமைக்கப்படும் என்றும் மகளிர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை பெண்கள் முன்னேற்றத்தில் முதலமைச்சருக்கு இருக்கும் அதீத அக்கறை என்று எடுத்துக்கொள்ளலாமா?
– ச. சாந்தி, நாமக்கல்.
பதில் 5: அதை உலகமே அறியும். மகளிர் சுயவாழ்வு – சுதந்திரமாக சொந்தக் காலில் நிற்பது கலைஞர் காலத்தில் தொடங்கி, இவரது ஆட்சியில் மேலும் வெகு சிறப்புடன் வளருவதன் மற்றொரு வெளிப்பாடு இது!
– – –
கேள்வி 6: இந்திய ஒன்றியத்தில் அதிக அளவாக தமிழ்நாட்டில் 42 சதவீத பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று முதல் இடத்தில் இருப்பதற்கு, திராவிடக் கட்சிகள் உருவாக்கிய அடித்தளம்தான் காரணம் என்று சென்னை கல்லூரியில் நடைபெற்ற மகளிர் நாள் விழா ஒன்றில் மக்களவை உறுப்பினர் கனிமொழி பெருமிதத்துடன் பேசியது இன எதிரிகளுக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் அல்லவா?
– சரஸ்வதி ரவி, பெருங்களத்தூர்.
பதில் 6: மனுதர்மவாதிகளுக்கு மகளிர் முன்னேற்றம், சுதந்திரம் எட்டிக் காயாகவே எப்போதும் இருக்குமே!
“சூத்திரர்களும் பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள்” என்று கீதை கூறுவது தானே அவாளின் கொள்கை?
– – –
கேள்வி 7: “அறிஞர் அண்ணா இன்று உயிரோடு இருந்திருந்தால் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து இருப்பார்” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாரே?
– மன்னை சித்து , மன்னார்குடி – 1.
பதில் 7: மகா மகா கேவலம் – வெட்கக்கேடு. அவர் இவ்வளவு கீழிறக்கத்திற்குச் செல்வது அவருக்கு ஒன்றிய அரசு ஏற்படுத்திய பல சிக்கல்களிலிருந்து மீள வேறு வழி தெரியாததுதான் காரணமோ?
– – –
கேள்வி 8: “நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ஒன்றிய பா.ஜனதா அரசுக்கு எதிராக இந்தியாவைத் திரட்டுவோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவேசமாகப் பேசியிருப்பதற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்குமா?
– இரா. கண்மணி, காஞ்சிபுரம்.
பதில் 8: ஜனநாயகத்தில் கேளாக் காது நிரந்தரமாகாது! இதனை மறக்கலாமா?
– – –
கேள்வி 9: “முரண்களைக் கடந்து பெரியாரை இன்றும் தமிழ்நாடு போற்றுவதற்குரிய காரணங்களை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
– சு. சண்முகம், மணிமங்கலம்.
பதில் 9: வரவேற்க வேண்டியதுதான்! தமிழ்நாட்டில் பெரியார் இல்லாத “அரசியல்” ஏது?
– – –
கேள்வி 10: புதியதாக பூமி போன்ற ஒரு கோள் (சூப்பர் எர்த் – HD20794d) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் செய்திகள் வலம் வருகின்றனவே – இது அறிவியல் வளர்ச்சியின் ஒரு மைல்கல் எனலாமா?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 10: அறிவியல் வளர்ச்சி என்பதில் என்ன சந்தேகம்? ஆனால், நமது புராண இதிகாசங்களில் உள்ள “ஈரேழு பதினான்கு லோகங்களை முதலிலேயே நாம் கண்டுபிடித்து விட்டோம்” என்று உளறும் மேதாவிகள் உள்ள நாடாயிற்றே இந்த பாரத புண்ணிய பூமி!