“மொழித் திணிப்பு: கருநாடகத்தில் அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கி சேவைகளில் ஹிந்தியின் ஆதிக்கம்”
ஹிந்தி மட்டுமே தெரிந்த அஞ்சல் அலுவலக ஊழியர்களால் தேர்வெழுத கட்டணம் கட்டமுடியாமல் தவித்த கன்னட மாணவிகள்.
கருநாடக தலைநகர் பெங்களுர் கிளை அஞ்சலகம் ஒன்றில் கல்லூரி மாணவிகள் தேர்வுக்கான கட்டணம் செலுத்தச் சென்றுள்ளனர்.
விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஹிந்தியில் இருந்ததால் எந்த இடத்தில் என்ன எழுத வேண்டும் என தங்களுக்கான சந்தேகங்களைக் கேட்டுள்ளனர்.
வியப்பு என்ன வென்றால் கருநாடக தலைநகரில் முக்கிய பகுதியில் 12 அஞ்சல் ஊழியர்களைக் கொண்ட அந்த அஞ்சல் அலுவலகத்தில் ஒருவர் கூட கன்னடர் கிடையாது. அதுமட்டுமல்ல அங்கு அனைவருக்குமே ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்தது. சரியான ஆங்கிலமும் தெரியவில்லை.
மாணவிகளின் கேள்விக்கு பதில் கூறாமல் ஹிந்தியில் இதர் உதர் என்று உளறிக்கொட்ட நேரம் கடந்துகொண்டு இருந்த நிலையில் மாணவிகள் தங்களின் பெற்றோருக்கு தகவல் தர அவர்கள் அங்கு வந்தனர்.
தற்போது கன்னடம் அல்லது ஆங்கில படிவம் எங்களிடம் இல்லை. ஹிந்தி தெரிந்த ஒருவரிடம் கேட்டு நிரப்பிக் கொடுங்கள் என்று கூறிவிட்டு அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இது தொடர்பாக “We Dravidians” என்ற சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்திருந்தனர். வேறு என்ன செய்யமுடியும்? கடந்த ஆண்டு நவம்பரில் மைசூரு பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கடன் தொடர்பான சேவைக்குச் சென்றிருந்த முதியவரிடம் ஹிந்தியில் மட்டுமே பேசியது வங்கி நிர்வாகம். முதியவருக்கு ஹிந்தியும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது.
இந்த நிலையில் இது குறித்து தட்டிக்கேட்ட அவ்வூரைச் சேர்ந்த சில இளைஞர்கள் மீது அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.