ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு)
செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அகத்தியர் குறித்த ஆய்வரங்கு நடத்தி, புராணங்களை வரலாறு என்று நம்ப வைக்க முயற்சியை செய்து வருகிறது. இந்நிலையில் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் ‘அகஸ்தியர் ஒரு மீள்பார்வை’ என்கிற ஆய்வரங்கத்தை நடத்தியுள்ளது. அதில் சிந்துவெளி ஆய்வாளர்
ஆர்.பாலகிருஷ்ணன் நிகழ்த்திய உரை குறித்து எழுத்தாளர் அர்ஷ் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
“அகஸ்தியர் ஒருவரா, பலரா என்ற விவாதம் புராணக் கதைகளால் உந்தப்பட்டுத் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. ஒரு சாரார். அகஸ்தியர் ஒருவரே என்றும், அவர் தமிழ் இலக்கணத்தை வகுத்தவர், ‘அகத்தியம்’ எனும் முதல் இலக்கண நூலை இயற்றியவர் என்றும் நம்புகின்றனர். ஓர் இடத்தில் அவர் மருந்துகளைக் கண்டுபிடித்த முனிவராகவும், மற்றொரு இடத்தில் சித்தராகவும், வேறு சில இடங்களில் வேதங்களை இயற்றிய வராகவும் சித்தரிக்கப்படுகிறார். சிறிய முனிவராகக் கருதப்பட்டவர், பின்னர் அண்டத்தையே குடித்தவராக வர்ணிக்கப்படுகிறார்.
ஆனால் தொல்காப்பியமே மூல இலக்கண நூல் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முரண்பாடுகள் காரணமாக அகஸ்தியர் குறித்த எந்தக் கருத்தையும் நேரடியாக ஏற்றுக்கொள்வது கடினம். அவருடைய பெயரில் உள்ள நூல்களின் காலமும் சரியாகக் கணிக்கப்படவில்லை. அவரின் பெயரில் பல நூல்கள் இருந்தாலும், அவை அவரால் எழுதப்பட்டவை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.
எனவே. அகஸ்தியர் குறித்த தகவல்களை ஆய்வுகளின் அடிப்படையில்தான் அணுக வேண்டும். தொன்மக் கதைகளை வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டு, பகுத்தறிவின் அடிப்படையில் ஆராய வேண்டும். புராணங்களை உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல். அறிவியல் பார்வையில் ஆராய வேண்டும். ஆதாரங்கள் இல்லாமல் வரலாற்று நபர்களை உருவாக்குவது அறிவியலுக்கு எதிரானது’’ என ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுப்பூர்வமான வாதங்கள். அகஸ்தியர் குறித்த பல தொன்மங்களையும், வாய்மொழித் தோற்றங்களையும் வலுவிழக்கச் செய்தன என்று பதிவிட்டுள்ளார்.
(முகநூலிலிருந்து)