சத்தியமங்கலம், மார்ச் 12- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் கோவை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்கள் வசந்தம் இராமச்சந்திரன் மற்றும் அரங்கநாயகி அம்மையார் நினைவாக கடந்த 9ஆம் தேதி சத்திய மங்கலம் அருகே உள்ள புதுப்பீர் கடவு ஊராட்சி பட்டரமங்கலத்தில் பொது மருத்துவ முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமிற்கான துவக்க விழாவில் பட்டர மங்கலத்தைச் சார்ந்த கல்லூரி மாணவி தர்சினி வரவேற் புரையாற்றினார். பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மரு.கவுதமன் மற்றும் தலைவர் மரு.மீனாம்பாள் ஆகியோர் தலைமையில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை மற்றும் தி.மு.க. மருத்துவர் அணி மாவட்ட துணை செயலாளர் மரு.வெற்றி செல்வி ஆகியோர் முன்னிலையில் கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சென்னியப்பன் மற்றும் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சூர்யா ஆகியோர் முகாமினை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.
144 பேர் பயன்
மரு.கவுதமன், மரு.மீனாம்பாள், மரு.நமிதா, மரு.சகிலா மற்றும் மரு.வெற்றி செல்வி ஆகியோர் தலைமையில் நடை பெற்ற பொது மருத்துவ முகாமில் 112 பேரும், திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் பெண்கள் நலமய்ய மருத்துவர் ராசாத்தி மற்றும் மருத்துவக் குழுவினர் தலைமையில் நடைபெற்ற மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையில் 32 பேரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேரா.இராஜேஷ், பேரா.பிரியதர்சினி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர்கள் காமாட்சி, ஹெலன் மற்றும் செவிலிய மாணவி மோனிகா ஆகியோர் பொதுமக்களுக்கு குருதி அழுத்தம், குருதி சர்க்கரை போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பெரியார் மருத்துவக் குழுமம், அம்பத் தூர் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பட்டரமங்கலம் கிளை மற்றும் கோபி மாவட்டம் இணைந்து நடத்திய இம் முகாமில் மாணவி ஜோதிகா நன்றி கூறினார்.