சென்னை, மார்ச் 12- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் 800 ஏக்கர் பரப்பளவில் விரைவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நுழைவு வாயில்
செங்கல்பட்டில் நேற்று (11.3.2025) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நீர் நிலைகளும், ஏரிகளும் நிறைந்து நீர் நிலைகளில் செங்கலு நீர் பூக்கள் அதிகமாக இருப்பதால் செங்கலு நீர்பட்டு என்று அழைக்கப்பட்டு இன்றைக்கு தலைநகர் சென்னையோட நுழைவு வாயிலாக இருக்க கூடிய இந்த செங்கல்பட்டு. சிற்பக் கலையும், அதனுடைய சிறப்பையும் தமிழ் கலை பெருமையை சொல்லும் மாமல்லபுரம் உள்ள மாவட்டம் இந்த செங்கல்பட்டு.
அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியில் சிறந்து கழக ஆட்சி காலத்தில் மகேந்திரா, விப்ரோ, பி.எம்.டபிள்யூ. பிலெக்டரானிக்ஸ், பாக்ஸ் கான், டெல், சாம்சங், இன்போசிஸ், டி.வி.எஸ்., சீமென்ஸ், நிதான், போர்ட், அப்பல்லோ டயர்ஸ், பல்லாவரத்தில் தமிழ்நாடு டாடா பார்மா சூட்டில்கல் தொழிற்சாலை. மறைமலைநகரில் மெட்ராஸ் மெக்னடிக் மீடியா லிமிடெட் தொழிற்சாலை 532 ஏக்கர் நிலத்தில் எம்.பி.பி.எல். புதுப்பிக்கப்பட்ட நிறுவனம், திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பளவில் எந்திரங்கள் மூலம் உப்பு உற்பத்தி தொழிற்சாலை, சிறீராம் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, சிங்கபெருமாள் கோவில் அருகே மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் எந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கிற தொழிற்சாலை இப்படி தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கான நுழைவு வாயிலை உருவாக்கியது நம்முடைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.
இயற்கை வளம், கலைப்பெருமை, தொழில் வளர்ச்சி என சிறந்து விளங்கும் இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த அரசு விழாவை மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருக்க கூடிய பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசனை மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
புதிய சிப்காட்
தமிழ்நாட்டின் தொழில் துறையில் இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். பெண்கள் முன்னேற்றம் குறித்த பெரியாரின் கனவுகளை சட்டத்தின் மூலம் நனவாக்கியவர் கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டம் 7.5.1989இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் கலைஞர். பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் கோலோச்சுகின்றனர்.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பெண்களுக்கு பொருளாதார தன்னம்பிக்கையை கொடுத்து உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது இந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 800 ஏக்கரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று திமிராக பேசுகிறார் ஒன்றிய அமைச்சர். தேசிய கல்விக்கொள்கை, தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சியையே அழித்து ஓழித்து விடும். கல்வியை தனியார் மயமாக்கும் கொள்கைதான் தேசிய கல்விக்கொள்கை. பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும்.
கல்வியில் மதவாதத்தை புகுத்த தேசிய கல்வி கொள்கை முயற்சிக்கிறது. கல்வியில் ஒன்றிய அரசின் அதிகார குவிப்புக்கு வழி வகுக்கும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.