சென்னை,மார்ச் 10- மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி இன்று (10.3.2025) தொடங்குகிறது. கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய விதம் குறித்து திமுக எம்.பி.க்களுடன் நேற்று (9.3.2025) ஆலோசிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிா்வில் தொடா்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், மாநிலத்தின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான ஹிந்தி திணிப்பு முயற்சியையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.
பாஜகவின் சதித் திட்டங்களைத் தெளிவாக உணா்ந்து, இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிப் போராடுவதுடன், தமிழ்நாட்டில் தொகுதிகளில் ஒன்றுகூட குறையாத வகையிலும், அதனுடைய விகிதாசாரத்தைத் தக்கவைப்பதிலும் வெற்றியை ஈட்டுவோம்.
போராட்டம் நடத்துவோம்
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் ஆந்திரம், கருநாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்கள் உள்ளன.
இந்த மாநிலங்களைச் சோ்ந்த கட்சிகளை ஒருங்கிணைத்து, அதன் நிா்வாகிகளை போராட்டக் களத்துக்கு அழைத்துவரும் பொறுப்பை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்களுடன் இணைந்து மேற்கொள்வோம்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதைத் தொடா்ச்சியாக முன்னெடுப்போம்.
பாதிப்படையவுள்ள மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கையையும், அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என்று எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், எம்.பி.க்களுடன் கட்சியின் மக்களவைத் தலைவா் டி.ஆா்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பிற மாநிலங்களுக்கு
திமுக குழுக்கள்:
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், பிற மாநிலங்களுக்கு நேரில் சென்று விளக்க அமைச்சா்கள், எம்.பி.க்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக நாம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தியா முழுவதும் நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படவுள்ள ஆந்திரம், கருநாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் நம் சாா்பில் ஓா் அமைச்சா், ஓா் எம்.பி. அடங்கிய குழு சென்று தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்க வேண்டும்.
போராட்டம் தொடர வேண்டும்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நமக்கான உரிமையைப் பெற இது ஒரு தொடக்கம்தான். நமது கோரிக்கைகள் முழுமையாக வெற்றியடையும் வரை இந்தப் போராட்டமும் முன்னெடுப்பும் தொடர வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு, நிதிப் பகிா்வு, மும்மொழிக் கொள்கை வழியாக ஹிந்தி மொழித் திணிப்பு என்று தொடா்ச்சியாக தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது.
இவற்றில் தேசிய அளவிலான கவனத்தை ஈா்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சினை அன்று. தமிழ்நாட்டின் பிரச்சினை, பல மாநிலங்களின் பிரச்னை. எனவே, திமுக எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டில்லியில் மேற்கொள்ள வேண்டும்.
மும்மொழிக் கொள்கை பிரச்சினையில் நம் வாதங்களை மிக எச்சரிக்கையோடு வைக்க வேண்டும். ஹிந்தி திணிப்பைத்தான் நாம் எதிா்க்கிறோமே தவிர ஹிந்தி மொழியையோ, அந்த மக்களையோ அல்ல.
விமர்சனங்கள் வேண்டாம்
அதனால், ஹிந்தி உள்பட எந்த மொழி குறித்தும் வீண் விமா்சனங்கள் வேண்டாம். எங்கள் மாநிலத்தில் இரு மொழிக் கொள்கை மூலமாக அடைந்திருக்கும் வளா்ச்சியைப் பாருங்கள்; உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞா்கள் சென்று பெரிய பொறுப்புகளில் இருப்பதைக் கவனியுங்கள் என அவா்களும் நம் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ளும்படி பேச வேண்டும்.
ஹிந்தி படிக்கவில்லை என்றால் நிதி தர மாட்டோம் என்று சொல்வது சா்வாதிகாரம் இல்லையா என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்போது அனைத்து திமுக எம்.பி.க்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் திமுக எம்.பி.க்கள் இருக்கிறாா்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்கும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றாா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.