ஒப்பாரும் மிக்காருமிலா தொண்டறத்தின் தூய உருவமான நமது அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று!
திராவிடர் இயக்கத்தின் அடித்தளங்களான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற நம் வழிகாட்டும் தலைவர்களைப் போலவே, அமைதியான வகையில், விளம்பர வெளிச்சங்களைத் தவிர்த்து, வெற்று ஆரவார படாடோபங்களைப் புறக்கணித்து, தொண்டு என்றால் துணிவு; பழிக்கஞ்சாப் பணி செய்து கிடப்பது, புதைந்துள்ள போர்க்குணத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் சிங்கமென சீறிப் பாய்ந்து உரிமையை நிலைநாட்டல், இலக்கு ஒன்றைத் தவிர வேறு எதையும் நோக்கா தனித்த பார்வையோடு, அறிவு ஆசான் – தனது தலைவருக்காக (95 ஆண்டு காலம் வாழ வைப்பதற்காக) வாழ்வின் வளங்களை அர்ப்பணித்தல் – இப்படி எத்தனை எத்தனை அம்சங்களுக்கு அளவீடு என்று பொருள் கூறும் வண்ணம் தனது வாழ்வை முடித்தவர் எம் அன்னையார்!
அவருக்கு ஈடேது? இணையேது?
புகழ்வேட்கை அவர் அறியாதது
வசைப்புயல் அவரை அசைத்ததில்லை,
அவரது பிறந்த நாள் பொதுவாக மகளிருக்கு
எடுத்துக்காட்டான இலட்சிய வாழ்வுப் போதிப்பு நாள்!
படத்துக்கு மாலை சூட்டுவது முக்கியமல்ல.
பாடம் கற்று, பொதுவாழ்க்கையில் மகளிர் உரிமைகளைப்
பெற்று சுதந்திர – சமத்துவ -சரிநிகர் வாழ்தலே முக்கியம்!
வாழ்க அன்னையார் அருந்தொண்டறம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
10.3.2025