தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமூகநீதிப் பார்வை!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக் கும் இந்தக் கால கட்டத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ‘திராவிட மாடல்’ அரசு பொறுப்பேற்றது முதலே உயர்கல்விக்கென தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. “பெருந்தலைவர் காமராசர் காலம், பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்பதைப் போல – முத்தமிழறிஞர் கலைஞரின் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம் என்பதைப் போல – எனது தலைமையிலான ஆட்சியின் காலம், உயர்கல்வியின் பொற்காலம் ஆகவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசியதைச் செயல்படுத்தத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆற்றிவரும் பணிகள் அனைவருக்கும் முன்மாதிரியானவை.
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி!
தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான அனைத்து வசதிகளையும் கடந்த நூறாண்டில் நாம் உருவாக்கியிருக்கிறோம். அதனால் தான் இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு நிறுவனங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. அரசு நிதியில் நடத்தப்படும் நிறுவனங்களில் இந்தியாவிலேயே அண்ணா பல்கலைக்கழகம் தான் முதலிடம் பெற்றுள்ளது. ஒன்றிய அளவில் வெளியிடப்படும் இப் பட்டியலில் (NIRF) தமிழ்நாட்டுப் பல்துறைக் கல்வி நிறுவனங்களும் மிகச் சிறப்பான இடங்களைப் பெறுகின்றன,
மாணவர்களிலும் அனைத்துத் தரப்பினரும் இதனால் பயனடைய வேண்டும் என்னும் நோக்கில், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியனவும், அவர்களைத் திறம்பட உருவாக்கும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேற்படிப்புக்கு வெளி நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான கவனம்
மேற்படிப்புக்கு வெளிநாட் டுக்குச் செல்லுதல் என்பது பெரும் கனவாக இருந்த சூழலில், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்காக (SC/ST) 2002-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தில் இருந்த கட்டுப்பாடுகளைச் சீர்செய்து, அதற்கான வாய்ப்பையும் விரிவுபடுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியுள்ளது தற்போது ஆளும் தி.மு.க. அரசு!
அயல்நாட்டுப் படிப்பு களுக்கான தகுதித் தேர்வுகளுக்குப் பயிற்சியளித்தல், வெளிநாட்டில் பயில உதவித் தொகை வழங்குதல் என்று இரு படிநிலைகளில் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்தின் மூலம் 2002 முதல் 2021 வரையான 19 ஆண்டுகளில் நான்கு மாணவர்கள் மட்டுமே பயன்பெற்றிருந்தனர். இதனால் இத் திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்று சிலரால் சொல்லப்பட்ட நிலையில், 2021-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின், ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் பயன்பெறவும், தகுதித் தேர்வுகளுக்கு 500 மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் ஆணையிடப்பட்டது. அதன்படி, 2021-2022, 2022-2023 ஆகிய ஆண்டுகளில் தலா 9 மாணவர்கள் பயன்பெற்ற நிலையில், 2023-2024 ஆம் ஆண்டில் 54 பேர் பயன்பெற்றுள்ளனர் என்பது மிக முக்கியமான பாய்ச்சலாகும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கும்….
இதன் அடுத்த கட்ட வெற்றியாக அயல்நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித் தொகைத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்களுக்கும் விரிவுபடுத்துதல் அவசிய மாகும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர் – கல்வி, சமூக நிலைகளில் இன்னும் எட்ட வேண்டிய இலக்குகள் ஏராளமாக இருக்கின்றன. பொருளாதாரத்தில் இன்னும் மேம்பாடு அடையாத நிலையில், அயல்நாடு சென்று உயர்கல்வி பெறுவதென்பது எட்டாக் கனியாகவே இருந்துவருகிறது.
கேரளம், கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையோரும் இது போன்ற திட்டத்தினால் பயன்பெறுகின்றனர்.
தமிழ்நாட்டிலும் இவ் வாய்ப்பைப் பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்குவதன் மூலம் உயர்கல்வியில் உச்சநிலை எய்துதல் என்ற ‘திராவிட மாடல்’ அரசின் இலக்கு விரைவில் எட்டப்படும்.
மேற்படிப்புக்கான நிதியைக் குறைத்த ஒன்றிய பிஜேபி அரசு!
கடந்த 11 ஆண்டுகளில் மேற்படிப்புகளுக்கான பல நிதி உதவிகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு குறைத்துவிட்டது; சிலவற்றுக்கு அதீதக் கட்டுப்பாடுகளை உருவாக்கி பயனாளர்களைக் குறைத்துவிட்டது. சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்குக் குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கிவந்த பாதோ பர்தேஷ் திட்டத்தை 2022 ஆம் ஆண்டு நிறுத்தியே விட்டது பா.ஜ.க. அரசு!
ஒன்றிய அரசின் அயல்நாட்டு உயர்கல்வி நிதியுதவித் திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்னும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர் எவரும் அயல்நாடுகளில் உயர்கல்வி பெறுவதற்கான நிதியுதவி பெற வழியே இல்லாத நிலை இப்போது இருக்கிறது.
இதனை மாற்றி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாண வர்களுக்கும் அயல்நாட்டு உயர்கல்வி பெற நிதியுதவி வழங்கிட திட்டம் வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான திட்டத்தின் படி, முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பிக்க 40 வயதும், மற்ற மேற்படிப்புகளுக்கு 35 வயதும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில் முதல் தலைமுறையாகக் கற்றுத் தேறிவரும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கு, மேல்படிப்பு குறித்த புரிதலும், வழிகாட்டலும் கிடைப்பதற்குக் கூடுதல் காலம் எடுக்கும். எனவேதான், கருநாடகாவில் 38 வயதும், ஜார்க்கண்டில் 40 வயதும் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தகைய முடிவைத் தமிழ்நாடு அரசும் எடுத்து வயதுவரம்பை நீட்டிப்பதும், இத் திட்டத்தின் மூலம் இன்னும் பலர் பயன்பெறுவதற்கு வழிவகுக்கும்.
கடுமையான நிதி நெருக்கடி நிலையிலும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினை
கடுமையான நிதி நெருக்கடிகளுக்கிடையிலும், கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது செலவு அல்ல – மக்கள் வளத்திற்கான முதலீடே என்ற உணர்வோடு தான் நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பல புதுமையான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அந்தப் பட்டியலில் இந்தச் சாதனையும் இடம்பெற வேண்டும் என்று விரும்பியே, தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், உரிமையோடு இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
10.3.2025