இந்தியாவில் எந்த மாநிலம் மும்மொழி கொள்கையை செயல்படுத்துகிறது? – ப.சிதம்பரம் கேள்வி

2 Min Read

சென்னை,மார்ச் 9- இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது இரு மொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை இடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுக, தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே உறுதியாக பின்பற்றப்படும் என கூறி வருகிறது. திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ப.சிதம்பரம், “மூன்று மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என சொல்லப்படும் இந்த நேரத்தில், நான் ஒரு விடயத்தை மிகவும் துணிச்சலாக சொல்வேன். இந்தியாவில் எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை.

குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஒரு மொழி கொள்கைதான் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாநிலங்களில் பொதுவான மொழியாகவும், அலுவல் மொழியாகவும், பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஹிந்திதான் இருக்கிறது.

கூடுதலாக வேறு ஒரு மொழி கற்பிக்கப்படுகிறது என்றால் அது சமஸ்கிருதம்தான். இது ஹிந்தியுடன் நெருங்கிய தொடர்புடையது. தமிழ் அல்லது தெலுங்கு பேசும் ஆசிரியர்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆங்கிலம் பேசும் ஆசிரியர்களே மிகச் சில அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர்.

தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு நடத்தும் 52 கேந்திரிய வித்யாலயாக்கள் உள்ளன. அங்கு பயிற்று மொழி ஆங்கிலம். அதோடு, ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றை இப்பள்ளிகள் கற்பிக்கின்றன. அவர்கள் தமிழ் மொழியை கூட கற்பிப்பது கிடையாது. ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாவில் மும்மொழிக் கொள்கை கிடையாது.

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் கட்சிகள் இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளது. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் உள்ளது.
இருமொழிக் கெள்கை இருப்பது நல்லது. அந்த இரு மொழிக் கொள்கையை வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும். ஆங்கிலம் வெற்றிகரமாக கற்பிக்கப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது மொழி பற்றி பேசுவதற்கு முன் ஆங்கிலத்தை வெற்றிகரமாக கற்பிப்பது முக்கியம்.” என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *