பகுத்தறிவுக்கே முதலிடம்

2 Min Read

நாங்கள் கூறும் கருத்துகளை ஒவ்வொருவரும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகளை யும், பார்ப்பனர்களின் சாஸ்திர புராணப் புரட்டுகளையும் அம்பலமாக்கும் – நாங்கள் வெளியிடும் ஆராய்ச்சிப் புத்தகங்களைப் படித்து அவற்றில் கண்டவற்றை தங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருக்கும், நண்பர்கள் யாவருக்கும் எடுத்துக் கூற வேண்டும். பிறகுதான் எங்களிடம் உள்ள உண்மைகளையும் பார்ப்பனர்களின் புராண, ஆபாசங்களையும் பெரும் பான்மையான மக்கள் தெரிந்து கொள்ள முடியுமே அல்லாது, நான் செய்யும் ஓரிரு பிரசாரங்களின் மூலம் எல்லோரும் உணர்ந்து கொள்வதென்பது முடியாது. அப்படி நாங்கள் வெளியிடும் புத்தகங்கள் மற்றவர்களைப் போன்று சினிமாக் கதைகளைக் கொண்டதும் காதல் நிகழ்ச்சிகளைக் கொண்டதுமான புத்தகங்கள் அல்ல.
ஆதி முதற்கொண்டே நான் வெளியிடும் இயக்க சம்பந்த மான புத்தகங்கள் யாவும் மக்களிடம் உண்மையைப் புகட்டவும், ஆரியர்களின் பித்தலாட்டங்களை உணரும்படி செய்யவும், இழிநிலையைப் போக்கி மனிதனை மனிதனாக வாழச் செய்ய வேண்டிய கருத்துகளைக் கொண்டவைகள். இதற்கென்றே பிறருடைய தயவை எதிர்பார்க்காது, மற்றவர்களின் அச்சகத்தின் உதவியில்லாது இப்புத்தகங்களை அச்சடித்து வெளியிட்டு வருகிறேன். ஆனால், இதுபோன்ற புத்தகங்களை வேறு அச்சு இயந்திரசாலைகளில் பதிப்பிப்பதென்பது முடியாத காரியம். அரசாங்கத்தின் உதவியையும், ஆதரவையும் , சலுகையையும் எதிர்பார்க்கும் எவரும் என்னுடைய புத்தகங்கள் ஒன்றையாவது பதிப்பிக்க முடியாது என்பது திண்ணம். நான் அரசாங்கத்தின் உதவியை நாடாத வனாகவும் பார்ப்பனர்களின் எதிரியாகவும் இருப்பதால் தான் இவற்றை வெளியிட முடிகிறது. குறிப்பாக இராமாயணத்தின் ஊழலைப் பற்றிப் பேச வேண்டுமானால் எட்டு நாட்கள் வரையிலும் பேசினாலும் அதில் உள்ள அவ்வளவு ஆபாசங்களையும் எடுத்துரைப்பதற்கு காலம் போதாது.

எனவேதான், அதன் ஆபாசங்கள் அத்தனையும் ஒன்று திரட்டி, அவற்றை “இராமாயண பாத்திரங்கள்” என்ற புத்தக ரூபமாக வெளியிட்டு வருகிறேன். இதனால் இராமாயணத்தை கடவுள் சரித்திரம் என்றும் இறைவனின் அவதாரக் கதை யென்றும் பார்ப்பனர்கள் புகுத்தப்பட்ட புரட்டுகளை நம் மக்கள் அநேகம் பேர்கள் உணர்ந்து திருந்திக் கொள்ள முடிகிறது.

(20.3.1955 அன்று பென்னாகரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)
‘விடுதலை’ 23.3.1955

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *