சென்னை, மார்ச் 7- “MKS72 – மக்கள் முதல்வரின் மனித நேய விழா – 2025” – 73 தொடர் கொண்டாட்ட நிகழ்வுகளின் பன்னிரெண்டாம் நிகழ்வாக “மனிதநேயம் – 12. களம் கண்டு வணங்கும் திராவிடம் – கதிர் கண்டு வணங்கும் தமிழினம்!” என்கின்ற தலைப்பில் மாபெரும் பொதுக் கூட்டம் 4.3.2025 அன்று மாலை 6.30 மணி யளவில் அயன்புரம் போர்ச்சியஸ் சாலை (ஜாயிண்ட் ஆபிஸ் அருகில்) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை கிழக்கு மாவட்டம் – வில்லிவாக்கம் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு பகுதி தி.மு.க. செயலாளர் சிட்கோ வே.வாசு தலைமை வகித்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில்…
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அமைச் சருமான பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் அ.வெற்றிஅழகன் ஆகி யோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உரையாற்றினர்.
வில்லிவாக்கம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதி வி.சபாபதி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
புகழரங்கத்தின் நிறைவாக தமிழர் தலைவர் சிறப்புரை
புகழரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உரையாற்றுகையில், இங்கே ஒருவர் ஒரு கட்சியை அழிப்பேன் என்று ஆவேசப் படுகிறார். வரும் 2026ஆம் ஆண்டுத் தேர்தலில் அக்கட்சியை – தி.மு.க.வை தேர்தல் களத்தில் சந்திப்பேன் என்று சொல் அல்லது அதனைத் தேர்தலில் தோற்கடித்துக் காட்டுவேன் என்றாவது சொல், அதை விடுத்து கட்சியை அழிப்பேன் என்று சொல்வதும், அறிவாலயத்தின் செங்கல்லை உருவுவேன் என்று ஆத்திரப்படுவதும் அண்ணாமலையிடம் நிலை கொண்டுள்ள பாசிச வெறியைப் பறைசாற்றுமே தவிர அது அரசியல் பண்படாக முடியுமா?
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்படியானால்தான் நிதி தருவோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார். சட்டத்தில் இட மில்லை என்றும் சொல்லுகிறார். எந்தச் சட்டத்தில் அவ்வாறு உள்ளது என்று அமைச்சரால் சொல்ல முடியுமா? என வினாக்களை எழுப்பினார்.
எம்.எச்.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமது உரையில் குறிப்பிட்டதாவது:
நம்முடைய முதலமைச்சர் சங் பரிவார் கூட்டத்துக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றார். எம்.கே.ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே அந்தக் கூட்டத்தினருக்குக் குலை நடுங்குகின்றது.
வள்ளுவருக்குத் காவி உடுத்தினார்கள், தமிழுக்கு நிதி ஒதுக்குவார்களா? ஆனால், சமஸ்கிருதத்திற்குத் தாராள நிதி ஒதுக்கி வட இந்தியர்களது மொழி, பண்பாட்டை தென்னிந்தியாவில் திணிக்கப் பார்க்கின்றனர்.
கோட்சே அரசியலைப் பின்பற்றுபவர்கள் காந்தியடிகளைப் பின்பற்ற மாட்டார்கள். அவர்களுடைய சூழச்சித் திட்டங்களை முறியடிப்பதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் படையணியில் ஒன்று சேர்ந்து போராடுவோம், சாதனை படைப்போம் என்றார்.
தமிழர் தலைவர்
நிறைவாக சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:
போர்க்கள நாயகர் நமது முதலமைச்ச ருக்கு 72 வயது. அதில் ஓராண்டை முன்கூட்டியே சேர்த்து 73 நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் பி.கே.சேகர்பாபு செயல்மிகு ஆற்றலாளர் ஆவார். எதிலும் முத்திரை பதிக்கக்கூடிய முத்தாய்ப்பான ஒருவர்.
வரலாறு அறிவார்களா?
ஹிந்தி எதிர்ப்புப் போர் எப்போது ஆரம்பம் ஆனது? 1926ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டில், ‘தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தியின் இரகசியமும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஹிந்தி எதிர்ப்பு ஏன் என்பதைப் பற்றி விளக்கியுள்ளார்.
1937ஆம் ஆண்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது என்றாலும் கூட 1926இல் அதனைப் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறியவர் தந்தை பெரியார். இந்த வரலாறுகளைப் பற்றி தெரியாத புதுப்புது ஆள்கள் எல்லாம் ஹிந்திப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதற்குப் புறப்படுகின்றனர்.
“எம் மொழி செம்மொழி” என்று ஆக்கியவர் முத்தமிழறிஞரி கலைஞர். அது மிகப் பெரிய சாதனையாகும்.
சாதனை – சாதனை என்று நித்தமும் சாதனைகளைச் செய்யக் கூடிய ஆட்சியாக இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி உள்ளது.
நம்முடைய முதலமைச்சர் அவர் கள் தொடங்கி வைத்த பெரியார் நகர் (கொளத்தூர்) பெரியார் அரசு மருத்து வமனையினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களோடு சென்று பார்த்த போது வியக்கும் அளவுக்கு அந்த மருத்துவமனை அமைந்துள்ளது. பன்னாட்டுத் தரமுடைய அனைத்து மருத்துவ வசதிகளோடு அம்மருத்துவமனை இருக்கின்றது.
அதேபோன்று ஏழை – எளிய மாண வர்கள், பணிபுரிகின்றவர்கள், குறிப்பாகப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ‘முதல்வன் படைப்பகம்!’ அனைத்து வசதிகளுடன் சிறப்பாக அமைக் கப்பட்டுள்ளது.
கற்கோட்டையை அசைக்க முடியுமா?
இந்தக் கூட்டணியை அசைத்துப் பார்க்கலாமா என்று முயற்சிக்கிறார்கள். இது கற்கோட்டை. ஒரு கல்லைக்கூட அசைக்க முடியாது. இது கொள்கைக் கூட்டணி. பதவிக்கானது அல்ல. அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்காமல் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்துப் பார்க்கக் கூடிய அற்புதமான ஆட்சி நடந்துகொண்டுள்ளது. அதனைக் காப்போம் என்று தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.
உறுதிமொழி
நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கவனத்தின் பேரில், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை பலவும் ஒரு நாளைக்குள்ளாகவே நிறைவேற்றித் தரப்படுகின்ற நல்லதொரு நடைமுறை நிலவுவதாக உதாரணங்களுடன் குறிப்பிட்டு, ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மொழிப் பாதுகாப்பு உறுதிமொழியைக் கூறினார். பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த கழகத் தோழர்களும், பொதுமக்களும் அதனை அப்படியே திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றிஅழகன், பகுதி தி.மு.க. செயலாளர் வே.வாசு ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தமிழர் தலைவருக்குப் புத்தகம் வழங்கினார்.
பங்கேற்றோர்
சட்டமன்ற திமுக மேனாள் உறுப்பினர் ப.ரங்கநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சி.பாசுகர், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு, கொடுங்கையூர் அமைப்பாளர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், கொளத்தூர் ச.இராசேந்திரன், மங்களபுரம் கழக அமைப்பாளர் எம்.டில்லிபாபு உள்ளிட்ட கழகத் தோழர்களும், தி.மு.க. நிர்வாகிகளும், ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளைச் சேர்ந்த தோழர்களும், எராளமான மகளிரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இறுதியாக 96 வட்ட தி.மு.க. செயலாளர் எ.வேதா நன்றி கூறினார்.