தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழைமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன.
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) செயல்பாடுகள், அதன் மதரீதியான இந்துத்துவ சார்பு நிலை காரணமாக விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும், அதனடிப்படையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துகின்ற நோக்கிலும் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) என்ற இராணுவப் பொறியாளரை முதல் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை.
உலகளவில் அடையாளம்
தற்போது நாடு முழுவதும் 3,600க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதுடன், அகழ்வாராய்ச்சிகள், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் ஆகிய பணிகளையும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை செய்து வருகிறது. பரந்த வரலாற்றைக் கொண்ட முக்கியமான சுற்றுலாத் தலமாக இந்தியாவை உலகளவில் அடையாளப்படுத்துவதில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால், பாசிச பி.ஜே.பி ஆட்சியின் கீழ் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியவையாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, பாபர் மசூதி வழக்கில் நீதிமன்றங்களின் அணுகுமுறை மற்றும் தீர்ப்பிற்குப் பிறகு தொடர்ச்சியாக இந்துமதவெறியர்களின் விருப்பத்திற்கேற்ப தொல்லியல் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
சங்கிகளுக்கு துணை போதல்…
ஷாஹி மசூதி (எதிர்) ஹரிஹர் மந்திர் வழக்கில் தொல்லியல் துறை ’ஆய்வை’ மேற்கொண்டு வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த மாதம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் ஒரு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாக ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்நிலையில், புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவிற்குக் கீழே ஒரு கோயில் இருப்பதாக சங்கிகள் அளித்த மனுவைத் தொடர்ந்து, அங்கு ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறைக்கு பாசிச பிஜேபி அரசு உத்தரவிட்டுள்ளது.
தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழைமையான இஸ்லாமிய வழி பாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந் துள்ளன. ஆனால், தொல்லியல் துறையின் அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ”உண்மையைக் கண்டறிவதே எங்கள் பணி. நாங்கள் எந்த அரசியல் அழுத்தத்தாலும் இயக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய இடங்களில் தொல்பொருள் சான்றுகளை ஆய்வு செய்து, கருதுகோள்களை நீதிமன்றங்களுக்கு வழங்குவதே எங்கள் வேலை. எங்களின் எல்லைக்குட்பட்டுத்தான் எங்கள் வேலைகள் உள்ளன” என்று ஒரு தொல்லியல் துறை அதிகாரி கூறியுள்ளார்.
மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும்
பெயர் குறிப்பிட விரும்பாத சில தொல்பொருள் துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதன் மதச்சார்பற்ற அடையாளத்தைப் பராமரிக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். மதரீதியான விசயங்களில் அது ஈடுபடக்கூடாது எனவும் கருதுகின்றனர்.
தொல்பொருள் துறையில் தனது பங்களிப்புக்காக பத்மபூஷன் விருது பெற்ற மேனாள் தொல்லியல் துறை இயக்குநரான கே.என்.தீட்சித், வரலாறு ஒரு போதும் அரசியலால் பாதிக்கப்படக் கூடாது என்ற கண்ணோட்டத்தின் தேவையை வலியுறுத்தினார். மூத்த தொல்பொருள் ஆய்வாளரும், தற்போது தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநருமான டாக்டர்.பி.ஆர்.மணி, ”இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே கருத்து மற்றும் மத மோதலைத் தவிர்க்கும் வகையில் செயல்படுவது முக்கியமானது” என்று குறிப்பிடுகிறார்.
சட்டச் சிக்கல்கள்
பாபர் மசூதி வழக்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டதாக மணி சுட்டிக் காட்டுகிறார். “பாபர் மசூதி வழக்கை விதிவிலக்கானதாகக் கருதி யிருக்க வேண்டும். ஆனால், தற்போது அனைத்து ’நீதி’மன்றங்களும் சர்ச்சைக்குரிய மதவழிபாட்டுத் தலங்களிலும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு தொல்லியல் துறைக்கு உத்தரவிடுகின்றன” என்று கூறுகிறார்.
இடிக்கப்பட்ட கோயிலின் மீது ஞானவாபி மசூதி கட்டப்பட்டதா என்பதை ஆய்வு செய்த குழுவை வழிநடத்திய அலோக் திரிபாதி சில்சார் “நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க இந்த ஆய்வு செய்யப் பட்டுள்ளது. சட்ட சிக்கல்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறுகிறார்.
ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அகழ்வாராய்ச்சிகள் குறித்து தொல்லியல் துறைக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. எந்தவொரு இடத்திலும் நடத்தப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பொருட்டே நடத்தப்படும். இந்தியாவின் கட்டமைப்பு என்பது பல்வேறு வரலாற்று அடுக்குகளைக் கொண்டது. அகழ்வாராய்ச்சிகள் இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சில அதிகாரிகள் பொறுப் புணர்வோடு தெரிவிக்கின்றனர்.
முன்னுரிமை அளிக்கவில்லை
ராக்கிகரி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலோ ஹரப்பா மற்றும் சிந்து சமவெளி நாகரிகங்களின் பிற தலங்களிலோ அகழ்வாராய்ச்சி களுக்கு தொல்லியல் துறை ஏன் முன்னுரிமை அளிக்க வில்லை என்று பல தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்றாசிரியர்களும் மிக முக்கியமான கேள்வியை எழுப்புகின்றனர். கடந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் காணாமல் போயுள்ளதாக கலாச்சார அமைச்சகமே ஒப்புக் கொண்டுள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
”உண்மையில், இஸ்லாமியக் கட்டமைப்புகளுக்கு அடியில் கோயில்கள் இருந்தன என்பதை நிரூபிக்க மட்டுமே தற்போது அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன, இது எங்கே சென்று முடியும்? உலக பாரம்பரிய தலமான குதுப் மினார் 27 கோயில்களின் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளன. இங்கும் வரலாற்றை மறுபரிசீலனை செய்ய நாம் தயாரா?” என்று ஒரு நிபுணர் கேட்கிறார்.
உண்மையில், இஸ்லாம் அல்லது இந்து மதம் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியத் துணைக் கண்டம் ஒரு வளமான புத்த வரலாற்றைக் கொண்டிருந்தது. பூரியில் உள்ள ஜகந்நாதர் கோயில் போன்ற குறிப்பிடத்தக்க இடங்கள் பவுத்த மற்றும் சமண மதத் தளங்களின் மீது கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
தவறான நோக்கம்
‘‘தொல்பொருள் சான்றுகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் முந்தைய காலத்தைச் சேர்ந்தவற்றைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு வரலாற்றுக் கட்டமைப்பையும் நாம் தொடர்ந்து தோண்டிப் பார்க்க முடியுமா? வரலாற்றை இன்றைய நிலையில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ஒரு வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
“பிரச்சினை ஆய்வுகள் அல்ல, மாறாக அவற்றின் பின்னணியில் உள்ள நோக்கங்கள்” என்று வரலாற்றா சிரியர் ஸ்வப்னா லிடில் கூறுகிறார். மேலும் “தொல் பொருள் அகழ்வாராய்ச்சி அல்லது எந்தவொரு அறிவியல் ஆய்வின் நோக்கமும், நமது அறிவை மேம்படுத்துவதும், அந்த இடத்தையும் வரலாற்றையும் புரிந்து கொள்வதும் ஆகும். இது எப்போதும் திறந்த மனதுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், இந்த ஆய்வுகள் முன்முடிவுகளுடன் செய்யப்படும்போது அது சிக்கலாகிவிடும்” என்றும் லிடில் கூறுகிறார்.
பாசிசத்துக்கு சேவையா?
பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமர் கோவிலைக் கட்டிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, நாடு முழுவதும் மசூதிகள் இருக்கும் இடங்களில் அகழாய்வுகள் நடத்த நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. நீதிமன்றங்கள், தொல்லியல் துறை உள்ளிட்ட ஒட்டுமொத்தக் கட்ட மைப்பும் பாசிச கும்பலுக்குச் சேவை செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு விட்டன என்பதையே மேற்கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
நன்றி: ‘வினவு’ இணையதளம்