வருகின்ற 2032ஆம் ஆண்டு 2024 YR4 எனும் விண்கல் பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஆனால் இதன் இப்போதைய பாதை மாறி வருகிறது. இதனால், இது பூமியைத் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
‘டக் வீட்’ (Duck weed) என்பது குளங்களில் வளரும் ஒரு விதமான பாசி. இதை தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உணவாக உண்பர். இதில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது. தற்போது அய்ரோப்பாவிலும் இந்த உணவு பிரபலமாகி வருகிறது.
இளைஞர்களிடையே, உணவுமுறை (Diet), உடற்பயிற்சிக்கான செயலிகள் இன்று பிரபலமாகி வருகின்றன. இவற்றால் பலர் பயனடைகிறார்கள். இந்தச் செயலிகளால் தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற தீவிர மன அழுத்தத்திற்கு பயனர்கள் சிலர் ஆளாவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃப்ளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் எகிப்து நாட்டில் முற்றிலும் வித்தியாசமான ஒரு படிமத்தைத் தொல்லியலாளர் கண்டெடுத்தனர். இது 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினத்துடையது. இது இன்றைய கழுதைப் புலியைப் போன்றது.