ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நூற்றாண்டை கடந்தது!
சமஸ்கிருதக் கலாச்சாரத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது!!
தா.பழூர்,மார்ச்.5 தந்தை பெரியார் 1926 ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசு’ பத்திரிகையில் “தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தியின் ரகசியமும்” என்று கட்டுரை எழுதி புத்தகமாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புக்கு வயதே நூற்றாண்டு கண்டுள்ளது என்று தா.பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தக விற்பனை தொகை ரூ.13,440அய் ‘பெரியார் உலக’ நிதியாக தமிழர் தலைவரிடம் அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கினார்.
தா. பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 ஆம் பிறந்தநாள் விழா! மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக தா.பழூரில் 3.3.2025 அன்று மாலை 6 மணிக்கு க.சொ.க.திடலில் நடைபெற்றது. தி.மு.க. மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி.சிவங்கர் தலைமையேற்று உரையாற்றினார். நிகழ்வில் தா.பழூர் கிழக்கு ஒன்றியச் செயலாளரும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தி.மு.க. சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிந்தனைசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
வரவேற்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர்கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் பிறந்த நாள் விழா, மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவிற்காக அரியலூர் மாவட்டம் தா.பழூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவ மூர்த்தி, காப்பாளர் சி. காமராஜ், மாநில இளைஞரணி செயலாளர் அறிவன் ஆகியோர் முன்னிலையில் கழகப் பொறுப்பாளர்கள் தா.பழூர் எல்லையில் தந்தைப் பெரியார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என்று உற்சாக முழக்கமிட்டு வரவேற்பளித்தனர் . தெருவில் காத்திருந்த பொதுமக்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வணக்கம் தெரிவித்தனர்.
திமுக ஒன்றிய அலுவலகத்தின் அருகே சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், திமுக மாநில சட்டதிட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா. சந்திரசேகர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு
ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பு குறித்தும், மீனவர் பிரச்சனை பற்றியும் ,திமுக கூட்டணி கலையுமா? என்றும் கேள்விகளை செய்தியாளர்கள்தொடுத்தனர். “தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தியின் ரகசியமும்” என்ற பெரியாரின் கட்டுரை குறித்தும்,தி.மு.க கூட்டணி ஒரு கற்கோட்டை என்றும் தமிழர் தலைவர் பதில்களை அளித்தார்.
சிலைகளுக்கு மாலை
விண்ணதிரும் முழக்கங்களுடன் தா.பழூரில் ஒரே இடத்தில்அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கும், பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும், மொழிப்போர் தியாகி க.சொ. கணேசன் சிலைக்கும் தமிழர் தலைவர் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.தி.க, தி.மு.க. இலட்சியக்கொடி ஏற்றப்பட்டன.
முன்னிலை ஏற்று சிறப்பித்தவர்கள்!
கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்டக் காப்பாளர்கள் காமராஜ், மணிவண்ணன், ஜெயங்கொண்டம் தொகுதி மேற்பார்வையாளர் கலா சுந்திரமூர்த்தி, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் இராஜேந்திரன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் சேகர், தா.பழூர் ஒன்றிய தி.மு.க. செயலா ளர் தனவேல், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
நூல் வெளியீடு
திராவிடர் கழகத் தலைவர் தொகுத்து எழுதிய “சுயமரியாதை வீரர் மக்கள் தொண்டர் க.சொ.கணேசன்” என்ற நூல் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது . நூலினை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மற்றும் கழக முன்னணியினரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் பொறுப் பாளர்களும் பெற்றுக் கொண்டனர்.
பெரியார் உலகம்
தமிழர் தலைவர்கி.வீரமணி அவர்களுக்கு அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் பயனாடை அணிவித்து மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். ஆசிரியர் அவர்கள் அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் ஆடை போர்த்தி சிறப்பு செய்தார். மேடையில் நூல் வெளியிட்டு விற்பனை செய்த தொகையினை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப் பினர் கண்ணன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
திராவிட இயக்கத்தின் சிறப்பே வாரிசு அரசியல்தான்!
மேடையில் முன்னிலை வகித்துச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் பெருமக்களை விளித்துப் பேசும் போது, நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களைப் பற்றியும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்களைப் பற்றியும் கொள்கைக் குடும்பம் என்று இருவரின் தந்தையாரைப் பற்றிப் பேசி, அதே கொள்கை வழி வந்தவர்களான இவர்களை வாழ்த்தியும், ”திராவிடர் இயக்கம் வாரிசு அரசியல்தான் செய்கிறது; கொள்கை வாரிசு அரசியல்” என்று அதற்கு விளக்கமளித்தார்.
திராவிட மாடல் முதல்வரின் கொள்கைப் பிடிப்பு!
திராவிட மாடல் முதலமைச்சரின் கொள்கைப் பிடிப்பைப் பற்றிப் பேசினார். அப்போது இந்தி மொழித்திணிப்பை பள்ளிக்கல்விக்கு தரவேண்டிய நிதிக்கு நிபந்தனையாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் வைத்தபோது, ”5000 கோடி அல்ல 10000 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு அந்த நிதி வேண்டாம்” என்று சொன்னதை நினைவூட்டி தமிழ்நாடு முதல்வர் நாட்டுமக்களுக்காக நீண்டநாள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் அவர், தந்தை பெரியார் 1926 ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசு’ பத்திரிகையில் “தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தியின் ரகசியமும்” என்று கட்டுரை எழுதி அது புத்தகமாக வந்திருப்பதை சுட்டிக்காட்டி விட்டு, தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புக்கு வயதே நூற்றாண்டு கண்டுள்ளது என்னும் வரலாற்று சிறப்பை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
கட்டை விரலை வெட்டிக் கேட்டது ஏன்?
பெண்கள் முன்னேற்றத்தில் நீதிக்கட்சிக் காலத்திலிருந்து இன்றைய திராவிட மாடல் முதலமைச்சர் வரையிலும் செய்த சாதனைகளை பட்டியலிட்டார். அடுத்து பேசிய அவர், “ஆரியர் பற்றி நச்சு விதையைப் பரப்புகின்றனர். ஆரியர் என்பவர்கள் ஆசிரியர் போல கற்றுக்கொடுக்ககூடியவர்கள்” என்று தமிழ்நாடு ஆளுநர் பேசியுள்ள செய்தியை படித்துக் காட்டிவிட்டு, “துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் கேட்டது எதற்கென்று எங்களுக்குத் தெரியாதா?’’ என்று ஆளுநருக்கு கேள்விக் கணையைத் தொடுத்தார். தொடர்ந்து அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்தில் ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்பதை மக்களுக்கு படித்துக்காட்டினார். அப்படி வரும்போது ஆரியர்கள் மனுஸ்மிருதியை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டினார். மனுஸ்மிருதியில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அதிலிருக்கும் பேதங்களுக்கு எதிராக தந்தை பெரியார் ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதை நிலைநாட்டவே சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். அதைத்தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் முதல்வர் சமூகநீதி நாள் என்று தந்தை பெரியார் பிறந்தநாளை அறிவித்து சிறப்பித்தார் என்று முதலமைச்சரைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து திராவிடர் இயக்கம் நம்முடைய சுயமரியாதைக்கான இயக்கம்; கடவுளை மற மனிதனை நினை என்று சொல்லக்கூடிய இயக்கம்; அதைத்தான் இங்கே சிலைகளாக நிற்கக்கூடிய சீலர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். ஆகவே திராவிடம் என்றைக்கும் வெல்லும்’’ என்று தனது உரையை நிறைவு செய்தார்.
ஒன்றிய அரசின் மும்மொழிக்கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த உறுதிமொழியினை அனைவரும் எழுந்து நின்று ஏற்றனர்.
கலந்துகொண்டவர்கள்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்களின் வாழ்விணையர் டாக்டர் மாலதி, மகள் மதுமிதா, மகன் ஆதித்யா கண்ணன் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் இரத்தினம், இராமச்சந்திரன், அசோகன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்.செந்தில்குமார், திராவிடச் செல்வன், தியாக முருகன், தமிழரசன், முத்தமிழ்ச்செல்வன், ராசா, செல்வக்குமார், சிவக்கொழுந்து, ஆட்டோ தர்மா, சிவசக்தி, ஆண்டிமடம் செந்தில், இராமச்சந்திரன், பி.வெங்டாச்சலம், சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தி.மு.க. நகரச் செயலாளர் கண்ணன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் உள்ளூர் அனைத்துக்கட்சியைச் சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மாநாட்டைப் போல சிறப்பித்தார்கள்.