சென்னை, மார்ச் 1 தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2025) காலை பெரியார் திடலுக்கு வந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி இயக்க நூல்களை தந்து வாழ்த்து தெரிவித்தார்.
‘திராவிட மாடல்’ அரசின் தலைவராம் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2025) காலை 9 மணியளவில் பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். அவரை தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்றார். இதையடுத்து தமிழர் தலைவருடன் இணைந்து தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் நினைவிட முகப்பு வாயிலில் வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டினார். பதிலுக்கு ஆசிரியருக்கு முதலமைச்சர் இனிப்பு ஊட்டினார். பின்னர் இயக்க நூல்களை வழங்கினார். இதையடுத்து தமிழர் தலைவரிடம் விடை பெறுவதாக தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த. வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தந்தை பெரியார் நினைவிடத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தபோது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ஆ. இராசா, தமிழ்நாடு அமைச்சர் பெரு மக்கள், கே.என். நேரு, க. பொன்முடி, எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, கே.ஆர். பெரிய கருப்பன், கோவி. செழியன், மா. சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றியழகன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் புரசை ரங்கநாதன், ரவிச்சந்திரன் மற்றும் எழுத்தாளர் இமையம், ஆகியோர் உடனிருந்தனர். மேனாள் பகுதி தி.மு.க. செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி முதலமைச்சருக்கு நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
எழும்பூர் பகுதி தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் சுதாகர் முதமைச்சர் பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள் சோ. வேலு, விஜயகுமார், வட்ட செயலாளர்கள்
ஆர். பாபு, சேகர், மாமன்ற கவுன்சிலர் ராஜேஸ்வரி ஆகியோர் உள்பட பெருந்திரளான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.