* ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் நமது முதலமைச்சர் உழைப்பதும் –
நீடு வாழ்வதும் அவருக்காக அல்ல – நாட்டுக்காக!
* ‘திராவிட மாடல்’ ஆட்சியால் பயன் பெறாத ஒரே ஒருவர் உண்டா?
நமது முதலமைச்சரின் தலைமை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – இந்தியாவுக்கே தேவைப்படும் தகைசான்ற தலைமை!
234 தொகுதிகளிலும் வெற்றி காத்திருக்கிறது
சென்னை, மார்ச் 1 நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் உழைப்பதும் – வாழ்வதும் அவருக்காக அல்ல – நாட்டு மக்களுக்காக – இந்தியாவுக்கே தேவைப்படும் தலைமை அவருடையது – நடக்க விருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி காத்திருக்கிறது – அவரை வாழ்த்துவதில் தாய்க்கழகம் பெருமை கொள்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முதலமைச்சர் பிறந்த நாள் விழா:
தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
நேற்று (28.2.2025) மாலை சென்னை கொட்டி வாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இந்தியாவின் ஒப்பற்ற முதலமைச்சர் – முதல மைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடிய முதலமைச்சர். சரித்திரத்தினுடைய பொன்னேடுகளை இணைக்காமல், பொன்னேடுகளான சரித்திரத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் என்ற பெருமைக்குரிய எங்கள் ஈடு இணையற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே,
முதலமைச்சரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு இந்தப் பகுதியிலே சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பது, “படை பெருத்ததால் பார் சிறுத்ததோ!” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, 23 தலைவர்கள் பேசக்கூடிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கி, ஒரு நல்ல எழுச்சியை முதல் நாளே ஏற்படுத்தியிருக்கக் கூடிய அருமை அமைச்சர் மாண்புமிகு மா.சு. அவர்களே,
இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்புக்குரிய சகோதரர் துரைமுருகன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக் கூடிய கூட்டணிக் கட்சித் தலைவர்களே,
தாய்க்கழகம் வாழ்த்துகிறது!
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, செயல்வீரர்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் மற்றவர்கள் வாழ்த்துவதற்கும், திராவிடர் கழகமான நாங்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வாழ்த்துச் சொல்வதற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு.
என்ன அந்த வேறுபாடு என்று சொன்னால், மற்ற வர்கள் தோழமைக் கட்சிகள். ஆனால், திராவிடர் கழகம் தாய்க் கழகம். எனவே, தாய்க்கழகம் வாழ்த்தும்போது, நாங்கள் பூரிப்படைகின்றோம்.
எனவே, அந்தப் பூரிப்பினால், நிறைய வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால், சொல்வதற்கு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. ஏனென்றால், சிலர் தப்புக் கணக்குப் போட்டார்கள்.
வெற்றிடம் அல்ல – கற்றிடம்!
கலைஞர் அவர்கள் உடலால் மறைந்து, உணர்வால் நிறைந்த அந்தக் காலகட்டத்தில், இனி தமிழ்நாடு வெற்றி டம் என்று சொன்னார்கள். அப்போதே தாய்க்கழகத்தின் சார்பில் நாங்கள் தெளிவாகச் சொன்னோம்; அட புரியாத பைத்தியக்காரர்களே, தமிழ்நாடு ஒருபோதும் வெற்றிடம் ஆகாது. அதிலும் திராவிட மண் இது; பெரியார் மண்; பகுத்தறிவு மண் இது. இன உணர்ச்சி மிக்க பகுத்தறிவுத் தமிழ் மண்.
உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தபோதும், இங்கே வந்து உரையாற்றிய நம்முடைய அருமைச் சகோதரர் வைகோ அவர்கள் சொன்னதுபோல, தமிழ்நாடு என்று பெயர் பெற்ற இந்தத் தமிழ்நாட்டிலே ஒருபோதும் வெற்றிடம் உருவாக்க விடமாட்டோம். திராவிட இயக்கம் ஆழ்ந்திருக்கின்ற கற்கோட்டை இருக்கிறது.
அன்றைக்குத் தமிழ்நாடு கற்றிடம் என்று காட்டிய முதலமைச்சரைத்தான் இன்றைக்கு வாழ்த்துவதற்காக நாம் எல்லோரும் வந்திருக்கின்றோம்.
இந்த அரங்கத்தில் இருப்பவர்கள்தான் அவரை வாழ்த்துகிறார்கள் என்று நினைக்காதீர்கள்; உலகம் முழுவதும் இருக்கின்ற அத்துணை உணர்வாளர்களும் அவரை வாழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எல்லா நாடுகளிலும், புலம்பெயர்ந்தவர்கள் மட்டு மல்ல, அந்த நிலத்தில் வாழக்கூடியவர்கள் கூட, அவர்கள் மாற்றார்களாக இருக்கலாம்; வேற்றார்கள் அல்ல. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, சிறப்பான பெருமைக்குரியவர்களும் வாழ்த்துகிறார்கள்.
இங்கே உரையாற்றியவர்கள் எல்லாம் ஒவ்வொரு அம்சத்தை எடுத்துச் சொன்னார்கள்.
உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!!
உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அவரை பாராட்டிப் பக்குவப்படுத்தினார். நம்முடைய பெரு மைக்குரிய, என்றென்றைக்கும் தமிழ்நாட்டை, நவீன தமிழ்நாடாக, புது தமிழ்நாடாக ஆக்கிய மானமிகு சுயமரியாதைக்காரரான நம்முடைய கலைஞர் அவர்கள்.
ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, அதேபோல, ஆளுங்கட்சித் தலைவராக இருந்து ஆட்சியை அவர்கள் நடத்துகின்ற மாட்சி இருக்கிறதே, அது வெறும் காட்சியல்ல நண்பர்களே, இந்த இனத்தின் மீட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய அளவிற்கு ஓர் எழுச்சியை உண்டாக்கி, ஒரு வரலாற்றை அவர்கள் நாளும் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சாதனைளையெல்லாம் இங்கே சொன்னார்கள். சாதனை, சாதனை, சாதனை என மிகப்பெரிய அள விற்கு. மூச்சு விடுவதற்கு முன்னால், முன்னூறு சாதனை என்று.
‘திராவிட மாடல்’ அரசால்
பலன் பெறாதவர்கள் உண்டா?
ஒரே ஒரு செய்தியைச் சொல்கிறோம், ஏன் தாய்க்கழகம் பூரிக்கின்றது என்று சொன்னால், அவரால், அவரது ஆட்சியால், அவரது ஆளுமையால் எத்தனை சோதனைகள், எத்தனை சிக்கல்கள் அவருக்குக் கொடுக்கப்பட்ட நிலையிலும்கூட, அந்த நிலையிலும், அவரது திட்டத்தால், பயன்பெறாதவர்கள் மாணவர்களோ, தாய்மார்களோ, குழந்தைகளோ, பெரிய வர்களோ, முதியவர்களோ யாராவது – ஒரு வீடாவது உண்டா? இந்தக் கேள்வியை கேளுங்கள். தெருத் தெருவாகச் சென்று கேளுங்கள்.
இந்த ஆட்சியினுடைய பலனை பெறாதவர்கள் ஒரு வீட்டில் உள்ளவர்கள் என்று யாராவது உண்டா? அது பா.ஜ.க.வினராக இருந்தாலும், அவருடைய வீட்டிற்கும் அந்தப் பலன் கிடைக்கிறது. மாறுபட்டவர்களாக இருந்தாலும் அந்தப் பலன் கிடைக்கிறது.
இதுதான் திராவிட மாடல் ஆட்சி நண்பர்களே! திராவிட மாடல் ஆட்சியினுடைய பெருமை என்ன வென்று சொன்னால், இதுதான் அந்தப் பெருமை. இது சாதாரணப் பெருமை அல்ல.
இந்த ஆட்சியை மிரட்டலாம் என்று நினைக்காதீர்கள். இங்கே நண்பர்கள் சொன்னார்கள்; அத்துணைத் தலைவர்களும் சுட்டிக்காட்டினார்கள்.
என்னென்ன திட்டங்களையெல்லாம் அவர்கள் வைத்துக்கொண்டு நமக்கு வஞ்சகம் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
நிதி மறுப்பு, நீதி மறுப்பு. மற்றவர்களைவிட்டு குறுக்குசால் ஓட்டுவது – போட்டி அரசாங்கத்தை நடத்துவது என்று ஆயிரம் இடையூறுகளை அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘‘தடைக்கற்கள் ஆயிரம் உண்டென்றாலும்,
அதனைத் தாங்கும் தடந்தோள்கள்
எங்களிடத்தில் இருக்கின்றது’’ என்பதைக் காட்டக்கூடிய உணர்வை எங்களுடைய முதலமைச்சர் நாள்தோறும் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னுங்கேட்டால், கலைஞர் அவர்கள் இருந்த போது, கலைஞருடைய கடிதங்கள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது சென்னையில்.
அதனை வெளியிடக்கூடிய வாய்ப்பையும், பேசக்கூடிய வாய்ப்பையும் எனக்குக் கொடுத்தார்கள்.
அப்போது நான் ஒரு கருத்தைச் சொன்னேன். தாய்க் கழகத்தினுடைய கருத்து அது என்றேன்.
முழுக் கலைஞரை
எப்பொழுது பார்க்க முடியும்?
அது என்னவென்றால், கலைஞர் அவர்களை நீங்கள் பலரும் பாராட்டுகிறீர்கள். அந்தப் பாராட்டைக் கண்டு தாய்க்கழகம் பூரிக்கிறது. ஆனால், ஒன்றே ஒன்று, கலைஞரைப் பற்றி பே:சுகின்ற நேரத்தில், ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் – முழுக் கலைஞரை எப்போது பார்க்க முடியும்? என்று சொன்னால், கலைஞர் முதலமைச்சராக இருக்கும்பொழுது முழுக் கலைஞரைப் பார்க்க முடியாது. எத்தனையோ சாதனைகளை அவர் செய்திருக்கிறார். ஆனால், அதையும் தாண்டி, அவரை எதிர்த்துப் பாருங்கள். பெரியார் குருகுலத்தில் அவர் படித்ததினுடைய விளைவு – அவருக்கு எதிர்ப்புக் கிளம்பும்போதுதான், முழுக்கலைஞர் வெளியே வருகிறார். அப்போதுதான் மிகத் தெளிவாக அனைவரும் அவரைப் புரிந்துகொள்ளலாம்.
பதவி நாற்காலி தேடிவரும் –
தேடிப் போவதல்ல!
அதையே இப்போது பன்மடங்கு பெருக்கிச் சொல்லக்கூடிய ஒருவராகத்தான் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் இருக்கிறார்.
நம்முடைய முதலமைச்சருக்கு என்ன தனித்தன்மை? முதலமைச்சராக யாரைத் தேர்ந்தெடுத்தாலும், பதவி நாற்காலி சரியாக இருக்கிறதா? என்று நாற்காலி பக்கமே திரும்பிக் கொண்டிருக்கின்ற காலகட்டம் இது. ஆனால், அந்தப் பதவி நாற்காலி தானே வரவேண்டுமே தவிர, அந்தப் பதவி நாற்காலியை நாங்கள் தேடிச் செல்லமாட்டோம்; அதனை மக்கள் தருவார்கள் என்று சொல்லக்கூடிய உணர்வை அவர்கள் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.
அதன் காரணமாகத்தான், இன்றைக்கு எதிர்ப்புகள் வருகின்ற நேரத்தில், முழுமை யாக அதனைத் துணிந்து எதிர்க்கின்ற இந்தியா வினுடைய முதுகெலும்புள்ள முதலமைச்சர்களில் முதல்வராக எங்களுடைய முதலமைச்சர் இருக்கிறார்; அது அவரை வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
ஏனென்றால், எதிரிகளை களத்தில் சந்திக்கின்ற பொழுது, அவருக்கு வயது 72 அல்ல. அவருக்கு 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்; இன்னும் பல ஆண்டுகள் அவர் வாழவேண்டும் என்று நினைக்கின்றோம்.
வயதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, காலண்டர் வயது – ஆண்டுக் கணக்கு. இன்னொரு வயது இருக்கி றதே, அது ஆண்டுக் கணக்கல்ல; முழுக்க முழுக்க உணர்வு கணக்கு – உழைப்புக் கணக்கு. அந்த வகையிலே அவருக்கு வயது 27 தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருடைய ஒவ்வொரு அறிக்கையும், ஒவ்வொரு செயல்பாடும் இருக்கின்றன. காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது, ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கின்றார். அதுமட்டுமல்ல, சாதாரண, எளிய தோழனின் தேனீர்க் கடையில் அமர்ந்து தேனீர் சாப்பிடுகிறார். இருட்டுக்கடை அல்வா கடை வரை சென்று, அவர்கள் பூரிப்படையக் கூடிய அளவிற்கு இருக்கிறார்.
எனவேதான், இருட்டுக்கடை அல்வா சுவைக்கின்ற ஒன்று – திருட்டுத்தனமான பல வேலைகளை இந்த ஆட்சிக்கு எதிராக செய்யலாம் என்று நினைப்ப வர்களுக்கும், அவர்களுக்கும் சேர்த்து விடியலை உண்டாக்கக் கூடிய அளவிற்கு, எங்கள் முதலமைச்சர், ஆற்றல்மிகுந்த முதலமைச்சர் அவர்கள் செய்கிறார்.
செம்மொழியானது எப்போது?
எம் மொழி செம்மொழி – அதனை அறிவித்தது திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்ற, ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியில் சிறப்பாக செய்தார்கள். அதனை நாங்கள் செய்திருக்கின்றோம் – அதற்குப் பிறகு எதற்கு மும்மொழி?
57 ஆண்டுகளாக இந்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒன்றைப் பார்த்து சவால் விடு கிறார்கள். மும்மொழியை நீங்கள் அமுல்படுத்தா விட்டால், 5 ஆயிரம் கோடி ரூபாய் உங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள். மற்ற முதல மைச்சர்களாக இருந்தால், அய்யோ, 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுமே? என்று நினைக்கலாம்.
ஆனால், இந்த இயக்கம், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் – கொள்கையால் கட்டப்பட்டு இருக்கின்ற இந்த அணியில், ஓட்டை போடலாம் என்று நினைக்கிறீர்கள் – யாராலும் ஓட்டை போட முடியாது; இங்கே அருமைச் சகோதரர் திருமாவளவன் உள்பட பலரும் மிக அருமையான தெளிவான கருத்துகளைச் சொன்னார்கள். இங்கே சமூகநீதி தழைக்க வேண்டுமானால், இந்த ஆட்சியும், உங்களுடைய ஆயுளும் நீடிக்கவேண்டும் என்று அழகாகச் சொன்னார்கள்.
இது வெறும் பதவிக் கூட்டணியல்ல நண்பர்களே, இந்தக் கூட்டணியை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள். இது வடநாடு அல்ல. கட்சியைப் பிளப்பது – சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது – அரசியல் சடுகுடு நடத்துவதெல்லாம் தமிழ் மண்ணிலே ஒருபோதும் நடக்காது. இங்கே காவிக்கு வேலையில்லை. நிச்சயமாக அவர்களை விரட்டியடிக்கக் கூடிய பெரியார் மண் என்பதைக் காட்டுகிறோம்.
முதலமைச்சர் அவர்கள் எப்படிப்பட்ட ஈர்ப்புள்ள ஒரு செய்தியை அறிவிக்கிறார்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்து சொன்னாலும், களத்திலே வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும், தமிழ்நாட்டில் என்ன நிலை?
234 தொகுதிகளிலும்….
மும்மொழி திட்டம் என்று சொல்கிறீர்களே, நம்முடைய இன எதிரிகளைப் பார்த்துக் கேட்கிறோம் – ‘‘நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். சுவரில் எழுதப்பட்டிருக்கின்ற எழுத்தைப் படிக்கவேண்டும். அப்படி படிக்கத் தவறினால், உங்களுக்கு இப்போதிருக்கின்ற அடையாளம்கூட இருக்காது. இப்போது இருக்கின்ற நான்கு சட்டப்பேரவை உறுப்பி னர்களைக்கூட மீண்டும் பெற முடியாது என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
200 இடங்கள்தான் எங்கள் இலக்கு – முதலமைச்சர் சொல்கிறார் என்றால், அது 200 மட்டுமல்ல – 234 இடங்களைத் தருவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதற்கு உதவி செய்து – எங்கள் வயலான திராவிட வயலுக்கு நீங்கள் உரம் பாய்ச்சுகிறீர்கள். உங்களுடைய எதிர்ப்பு எங்களுக்கு உரம் பாய்ச்சுக் கூடிய அளவில் இருக்கிறது.’’
அதற்கு ஒரு சிறிய உதாரணம் – மொழி எங்கள் உயிர் என்று சொல்லுகின்ற நேரத்தில், புரட்சிக்கவிஞர் சொன்னார்.
5 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால், உடனே உங்களுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டு முதல மைச்சர் தலையை ஆட்டுவார் என்று நினைத்தீர்களா?
புரட்சிக்கவிஞரின் அந்த ஒரு வரி!
இங்கே தலைவர்கள் அழகாகச் சொன்னார்கள். ‘‘நீ 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்கள் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’’ என்று நம்மு டைய முதலமைச்சரை சொல்ல வைத்த உணர்வு எது?
அது குருகுலப் பாடம்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலில்,
‘‘தாயின்மேல் ஆணை!
தந்தைமேல் ஆணை!
தமிழகம்மேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:
நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமை நத்துவாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!
“தமக்கொரு தீமை” என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!
மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!’’
என்று பாடியிருப்பார்.
இதில், ஒரு வரி வரும். அது என்னவென்றால்,
‘‘எமை நத்துவாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!”
இந்த உணர்வில், இளைஞரணி காலத்திலிருந்து அவர் வளர்க்கப்பட்டவர். மிசா காலத்தை அவர் பார்த்தவர். பல்வேறு காலகட்டங்களை சந்தித்தவர். பக்குவப்பட்டவர்; பதப்படுத்தப்பட்ட ஒரு கருவி.
எதிர்ப்பிலே நீச்சலடித்து, எதிர்நீச்சலடித்து அதில் வெற்றி பெறுவதுதான் அவருடைய பணி என்ற அளவிற்கு, இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு பணியை அவர் ஆற்றி வருகின்றார்.
அதனுடைய விளைவு என்ன?
ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் எஜமானர்களா?
டில்லியில் இருக்கின்ற ஒன்றிய பா.ஜ.க.வினர் என்ன எஜமானர்களா? அவர்கள் என்ன பழைய காலத்து சக்கரவர்த்திகளா? நாமெல்லாம் அவர்களுக்குக் கப்பம் கட்டக்கூடிய சிற்றரசர்களா?
எனவேதான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 72 வயது என்ற கட்டத்திற்கு வருவதற்கு முன்னால் இருப்பதைவிட, இப்போது பல பரிமாணங்கள் உண்டு. அந்தப் பல பரிமாணங்களில் புதிய ஆற்றல் என்ன தெரியுமா?
உரிமைக்கு அரண் என்ற அளவிற்கு வந்திருக்கி றார்கள்.
உழைப்பு மட்டுமல்ல நண்பர்களே, உரிமைக்கு அரணாக இருக்கிறார்கள்.
கலைஞர் சொன்னார், ‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்று.
அந்த உரிமைக் குரல் கொடுக்கும்போது, ஆட்சிகள் எல்லாம் சாதாரணம். மக்கள் அந்த உணர்வுகளைப் பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாடு என்ன பெரியார் மண்ணா? என்று கேட்கக்ககூடியவர்களுக்கு, அந்த மண்ணாங்கட்டி களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம்.
மும்மொழித் திட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்கிறதே – தமிழ்நாட்டில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இருக்கிறது. ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் அல்லாமல் வேறு கட்சிகளும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. மும்மொழித் திட்டம் வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்காவது துணிவு இருக்கிறதா? என்றால் கிடையாது, காவிகளைத் தவிர.
அன்று அண்ணா சொன்னது என்ன?
அண்ணா அன்றே சொன்னார், ‘‘இதில் கை வைக்கவேண்டும் என்று நினைத்தால், யாராலும் முடியாது. ஏனென்றால், அச்சம் உங்களை உலுக்கும். அந்த அச்சம் உங்களை உலுக்குகின்ற வரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள். திராவிடம்தான் இந்த நாட்டை ஆளுகிறது என்று பொருள்’’ என்றார்.
அன்றைக்கு அண்ணா அவர்கள் சொன்னதை, எங்கள் முதலமைச்சர் இன்றைக்குத் தெளிவாக்கிக் கொண்டிருக்கின்றார்.
எனவேதான், தமிழ் எங்கள் உயிர் என்று சொல்லு கிறபோது, தமிழ் எங்கள் செம்மொழி என்று சொல்லுகிற போது, மற்றவர்களுக்கு இடமே இல்லை என்று சொல்பவர்களாகிய நாம், மற்றவர்கள் வாழக்கூடாது என்று சொல்கிறோமா, என்றால் இல்லையே!
‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’
பெரியாருடைய பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் ஆக்கிய நேரத்தில் ஓர் உறுதிமொழியை எடுக்க வைத்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
அதில், பெரியாருடைய வாசகத்தையே பயன்படுத்தி னார். ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று.
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொல்லும்போது, யார் மீதும் வெறுப்பு கிடையாது. எல்லோருக்கும் எல்லாம் – இப்படிப்பட்ட ஓர் ஆட்சி நாளும் சாதனைகளுக்குமேல் சாதனைகளை செய்து வருகின்ற நேரத்தில், இதனை உருட்டிப் பார்க்கலாம்; மிரட்டிப் பார்க்கலாம்; நிதி நெருக்கடியை உண்டாக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இங்கே ஒன்றியத்திலிருந்து வந்து நிதி ஆணைய உறுப்பினர்கள் வருகிறார்கள்; திராவிட மாடல் ஆட்சி யைப் பாராட்டிப் பேசுகிறார்கள். ஆகா, தமிழ்நாட்டின் ஆட்சி மிக அற்புதம் என்று சொல்கிறார்கள்.
இந்த ஆட்சி உரிமைக்காக இருக்கக்கூடிய ஆட்சியே தவிர, வெறும் காட்சிக்காக இருக்கக்கூடிய ஆட்சியல்ல.
எனவே, இந்த நாட்டின் உரிமை அரணாக எங்கள் முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள்.
அந்த அரண் பாதுகாக்கப்படவேண்டும். அந்த அரண், எங்களால் பாதுகாக்கப்படக்கூடிய அரணாக இருக்கும்.
எனவேதான், அகழியைத் தாண்டித்தான், அர ணுக்குள் போக முடியும். அகழிகளாக நாங்கள் இருப்போம்.
தொகுதிகளின் இடங்களைக் குறைப்போம்; எண்ணிக்கையைக் குறைப்போம்; அதன் மூலமாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் குரல்வளையை நெரிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்தால்…
நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் எழுந்த வுடன் என்ன நிலைமை? திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் எழுந்து நின்றாலே, எதிரிகள் அஞ்சுகிறார்கள்.
அதன் காரணமாகத்தான், இவர்களுக்கு வேலை யில்லாமல் செய்யவேண்டும் என்று ஒன்றிய அரசு நினைத்த நேரத்தில், உடனடியாக வருமுன்னர் காப்போம் என்ற அளவிற்கு,
‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’
என்று வள்ளுவர் சொன்னதைப்போல, உடனடியாக முதலமைச்சர் அவர்கள் அத்துணைப் பேரையும் அழைத்து கருத்தைக் கேட்கிறார்.
தனக்கு மாறுபட்டவர்களா, ஒத்துழையாமை இயக்கம் நடத்துபவர்களா என்றெல்லாம் பார்க்காமல், அவர்களுடைய கருத்தையும் கேட்கிறார்.
நம்முடைய தமிழ்நாட்டினுடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக, மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி யிருக்கிறார் என்று தெரிந்தவுடன், கோவைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதிகளைக் குறைப்பதாக இல்லை என்று சொல்கிறார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியூர் சுற்றுப்பய ணத்தின்போது, செய்தியாளர்கள் என்னிடம் கேட்டார்கள். ‘‘தொகுதிகளைக் குறைக்கின்ற திட்டம் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று.
அப்போது நான் சொன்னேன், இது எங்களுடைய முதலமைச்சர் அவர்களுடைய முன்னோக்கு மட்டுமல்ல – போரில்லாமல் வெற்றி காணுகின்ற ஒரே முதலமைச்சர் – போர்ச் சங்கு ஊதியவுடன் வெற்றி கண்டார் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸின் அஜெண்டா?
இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ்.சினுடைய குணாதி சங்களை நாங்கள் உணர்ந்தவர்கள். ஓப்பன் அஜெண்டா – ஹிட்டன் அஜெண்டா.
‘‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல்’’ அவர்களுக்கு வாடிக்கை.
ஆகவேதான், என்ன செய்யவேண்டுமோ, அதனை உரிய காலத்தில், தேவையான நேரத்தில் செய்யக்கூடிய நீங்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.
நூறாண்டு வாழவேண்டும் என்று சொல்வது இப்போது சாதாரணம். ஏனென்றால், அறிவியல் அந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றது.
தஞ்சைவாணன் கோவை என்று ஓர் இலக்கியம் இருக்கிறது. அதில் ஒரு வார்த்தை இருக்கிறது.
‘‘வாணன் புகழ்க்கெல்லை
வாழ்த்துவோர் நாவெல்லை’’ என்று சொன்னார்.
ஆனால், நம்முடைய புரட்சிக்கவிஞர் இராவண னைப்பற்றி எழுதுகிறபோது,
‘‘அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்’’ என்று.
அதுபோல, உங்கள் சாதனைகள், உங்களுடைய வேகங்கள், உங்களுடைய விவேகங்கள், உங்களுடைய திறன்கள் இவை அத்துணையையும் அய்யிரண்டு திசைமுகத்தும் தெரிந்து கொண்டிருக்கின்றது.
புரட்சிக்கவிஞரிடம், திசை எட்டு தானே, அய்யி ரண்டு திசை என்றால் 10 திசை என்று ஆகிறதே எப்படி என்று? கேட்டபோது,
அதற்கு விளக்கம் சொல்லி, 10 திசையும் புகழ் இருப்பதினால்தான், ராவணனை, 10 தலை ராவணன் என்று சொன்னார்கள் என்றார்.
எனவேதான், வான்வெளிப் பயணம் செல்கின்ற நம்முடைய விஞ்ஞானி – அவரும் உங்களைப் பாராட்டி, வாழ்த்துகிறார்.
‘‘அய்யிரண்டும் திசைமுகத்தும் தம் புகழை வைத்தோன்’’ என்று சொல்லக்கூடிய பெருமையை உண்டாக்கியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு அரணாக இருப்பது, உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது உங்கள் சாதனை மட்டுமல்ல – உங்களுக்காக ஈர்ப்பிலே இருக்கக்கூடிய இளம் தளிர்கள்கூட அன்போடு அழைக்கின்றன.
நாற்பதுக்கு நாற்பது வெற்றி!
தாய்மார்கள் எல்லாம் அன்போடு அழைக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த பாச உணர்வோடு வருகிறார்கள்.
யாரைப் பார்த்து வருகிறார்கள்?
நம்முடைய பிரதமர் மோடி, தேர்தலின்போது, ரோடு ஷோவிலிருந்து காட் ஷோ வரை நடத்தினார். ஆனால், என்ன நடந்தது?
40-க்கும் 40- நமக்கு என்று நம் முதலமைச்சர் சொன்னதுதான் நடந்தது.
எனவே, தமிழ்நாட்டில் உங்கள் கணக்குப் பலிக்காது.
தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது.
தமிழ்நாட்டில் உங்கள் சரக்கு விற்பனையாகாது.
உங்களுடைய கடையைக் கட்டிக் கொள்ளுங்கள்; நடையைக் கட்டுங்கள்; வீண் வம்புகளில் ஈடுபடாதீர்கள். அப்படி நீங்கள் வீண் வம்புகளில் ஈடுபட்டால், உங்களுடைய அடித்தளம், உங்களுடைய இயக்கம் – எத்தனை புண் நாக்குகளை நீங்கள் அனுப்பி வைத்தாலும்கூட, அதனால் பயனில்லை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம்.
எங்கள் முதலமைச்சர் ஒன்றும் பேசவேண்டாம்; அதற்கு அவசியமில்லை. அவர் மக்களிடத்தில் சென்று பார்க்கும்போது, மக்கள் அவரைப் பார்க்கும்போதே, தெளிவாக வெற்றி உறுதி என்ற நிலைதான்.
அவர் நீடு வாழ வேண்டும் – யாருக்காக? அவருக்காக அல்ல!
இன்னும் உழைக்கவேண்டும் யாருக்காக? அவருக்காக அல்ல! அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று சொல்வது, உங்களுக்காக அல்ல – எங்களுக்காக என்றுகூட சொல்லமாட்டோம்.
நமக்காக, நாட்டுக்காக, இனத்திற்காக, மொழிக்காக, மாநில உரிமைகளுக்காக!
எனவே, உரிமையின் அரணே!
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
என்று தாய்க்கழகம் பூரிப்போடு வாழ்த்துகிறது!
என்றைக்கும் தாயினுடைய உணர்வுகளை வார்த்தை களால் வர்ணிக்க முடியாது.
வருக, கருத்துகளைத் தருக!
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!
நிச்சயம் திராவிடம் வெல்லும் – அதை நாளைய வரலாறு சொல்லும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.
தலைவர்கள் வாழ்த்துரை
விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.காதர்மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா, கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
மேலும் மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஜி.எம்.சிறீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி நிறுவனத் தலைவர் சு.க.முருகவேல் ராஜ், மஜக தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், தமிழ்மாநில தேசிய லீக் பொதுச்செயாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிர்வாகி பி.என். அம்மாசி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், சென்னை தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாலவாக்கம் த.விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக விழாவில் கலந்துகொண்டனர்.