“தலைவருக்கான திறமையை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபித்துவிட்டார். அவருக்கும் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்று கழகத்தினர் பாராட்டுகின்றனர்” என்று “தி எகனாமிக் டைம்ஸ்” ஆங்கில நாளேடு தனது சிறப்புக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
“தி எகனாமிக் டைம்ஸ்” ஆங்கில நாளிதழில் (29.8.2019) தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.கழகத் தலைவராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக முன்னோக்கி அடியெடுத்து வைக்கிறார் ஸ்டாலின்” என்ற தலைப்பில் வெளியாகி உள்ள அந்தக் கட்டுரை வருமாறு:-
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டபோது அவரது முதலாவது உரை என்பது பொறுப்புக்கு வந்தது போல் இல்லாமல், உறுதிமொழிகளை வழங்கும் நிலையில் இருந்தது. ‘நான் கலைஞரைப் போல் இல்லை; ஆனால் எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவைக் கொண்டவன்’ என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
தி.மு.க. தலைவராக ஸ்டாலின் உயர்ந்தது கழகத் தொண்டர்களை மிகவும் உற்சாகம் அடையச் செய்தது.
கடந்த ஓராண்டில், தமிழகத்தின் மிகப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றவராகவும். பா.ஜ.க. அலை வீசாமல் இருக்க கடுமையான முயற்சி மேற்கொண்டவராகவும் ஸ்டாலின் திகழ்கிறார். மொழித் திணிப்பு, காஷ்மீரின் தகுதி நீக்கம் உள்ளிட்டவை தமிழகத்தில் அவருக்குச் சாதகமாக உள்ளன.
ஸ்டாலின் அவர்களின் அரசியல் சாதுர்யத்தைப் பார்க்கும்போது அவரது தந்தையின் சாயல் தென்படுவதைப் பார்க்க முடிவதாக தி.மு.க. கட்சித் தொண்டர்களும், கூட்டணித் தலைவர்களும் அரசியல் ஆலோசகர்களும் தெரிவிக்கிறார்கள்.
ஒரு அரசியல்வாதி என்கிற முறையில், கடந்த 8 ஆண்டு காலமாக வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த தி.மு.க.வை, தனது பிரச்சாரத்தின் மூலம் தடுத்து வெற்றிப் பாதையில் நிறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
2019 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி, தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் ஒரு தொகுதி தவிர்த்து இதர அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் மகத்தான வெலற்றி கண்டது. அந்த தேர்தலில் பா.ஜ.க. மோசமாக செயல்பட்ட ஒரு சில மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருக்கும் நிலை ஏற்பட்டது.
‘மோடிக்கு எதிரான அலை’ தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக மாறி மகத்தான வெற்றியை அளித்துள்ளது.
2019இல் தி.மு.க. பெற்ற வெற்றி என்பது 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற தோல்விகளுக்குப் பின்னர் கிடைத்துள்ளதாகும். குறிப்பாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் பல்வேறு வித்தியாசங்களில் பெற்ற தோல்விக்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.விற்கு அவரால் வெற்றி கிடைத்துள்ளது.
அவர் தி.மு.க. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனே, தன்னை அதற்கேற்ப நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்தார். அவ்வாறே செவ்வனே திறம்பட செயல்பட்டு அதை நிறைவேற்றினார் என்று மாநிலங்களவைக் கழகக் குழுத் தலைவரும், மு.க.ஸ்டாலின் அவர்களின் நீண்ட நாள் நண்பருமான திருச்சி சிவா குறிப்பிட்டார்.
அவரது கட்சிக்காரர்களைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே உள்ள கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராகத் தான் இருக்கிறார். ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது தந்தையாருக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து பலரும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், எந்த ஒரு வேறுபாடும் காணமுடியாது என்பதுதான் எனது பதிலாக இருக்கும்.
முக்கிய உதாரணமாகச் சொல்ல வேண்டுமேயானால், காஷ்மீர் பிரச்சினையில் கைதாகி வீட்டுச் சிறைகளில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுடெல்லியில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்கிற அவரது அறிவிப்பைக் குறிப்பிடலாம். இந்த விஷயத்தில் கலைஞர் அவர்களும் அதைத் தான் செய்திருப்பார் என்று பெயர் சொல்ல விரும்பாத தி.மு.க. முன்னணித் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த தேர்தல்களில் தினகரன் மற்றும் அரசியல்வாதியாக மாறிய நடிகர் கமலஹாசன் ஆகியோர் தி.மு.க.வுக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய நிலையில் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நடைபெற இருக்கும். 2021 சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடக் கூடிய நடிகர் ரஜினிகாந்தைத் தவிர்த்துப் பார்த்தால், தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும்தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ‘தி எகனாமிக் டைம்ஸ்’இல் கட்டுரை வெளியாகி உள்ளது.