கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. 27.02.2025 நள்ளிரவு 12 மணிக்கு முடிவிற்கு வந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மொத்தம் 470 விபத்துகள் நடந்துள்ளன.
109 பேர் உயிரிழப்புக்கு பதில் அளிப்பது யார்?
இதில் 143 விபத்துகள் கும்பமேளாவிற்குச் சென்றவர்கள், சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி மொத்தம் 109 பேர் இறந்துள்ளனர்.
கருநாடகா, பீகார், மத்தியப் பிரதேசம், அரியானா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மகாராட்டிரா, குஜராத், உத்தராகண்ட் ஆகிய இந்த மாநிலங்களில் இருந்து கும்பமேளாவிற்குச் சென்றவர்கள் அல்லது திரும்பிக் கொண்டிருந்தவர்கள்தான் இந்த விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்த விபத்து உயிரிழப்புகளுக்கு யார் பதில் அளிப்பார்கள்? பொதுவாக சில விபத்துக்கான காரணங்களின்படி அரசு உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு நிதி உதவி வழங்குவார்கள்.
எடுத்துக்கட்டாக கடந்த 24.2.2025 அன்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற போது அவர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கிக்கொண்டது, இதில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்குத் தமிழ்நாடு அரசு நிதி உதவி அளித்துள்ளது.
உண்மை வெளிவருமா?
ஒன்றிய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் கடந்த அக்டோபர் மாதம் முதலே மகாகும்பமேளா குறித்து விளம்பரம் செய்து வந்தன. ரூ.17,000 கோடி செலவில் என்று ஓர் அமைச்சரும், ரூ.7 ஆயிரம் கோடி செலவில் என்று மற்றொரு அமைச்சரும் இப்படி கும்பமேளாவின் வசதிக்காகப் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்தோம் என்று வாய்க்கு வந்தவாறு சொல்லி வந்தார்கள்.
உண்மையில் இப்படி ஒதுக்கீடு செய்த பணத்தில் எத்தனை ஆயிரம் கோடிகள் எந்த வகையில் செலவழிக்கப்பட்டுள்ளது என்று எந்தக் காலத்திலும் உண்மை வெளிவரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் மக்கள் அது தொடர்பாகக் கேள்வி கேட்கப் போவதுமில்லை.
அப்படி இருக்க பாஜக ஒன்றிய மற்றும் உ.பி. சாமியார் அரசுக்கு இதைப் பற்றி எந்தக் கவலையுமில்லை.
பல ஆயிரம் கோடிகள் செலவழித்தோம் என்று கூறும் இவர்கள் கும்பமேளாவிற்கு வந்து செல்வோரின் வசதிக்காகத்தான் இதைச் செலவழித்திருப்பார்கள்.
அப்படி என்றால் இவர்களின் 5 மாத தொடர் விளம்பரம் காரணமாகக் கும்பமேளாவிற்கு வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும் விபத்தில் அல்லது இதர காரணங்களில் இறப்பவர் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச மற்றும் ஒன்றிய அரசு பொறுப்பேற்று இறந்தவர்களின்
குடும்பத்தாருக்கு நிதி உதவி செய்யவேண்டும் அல்லவா!
ஆனால், அப்படிச் செய்வார்களா என்றால் அதுதான் இல்லை.
உடல்களை குப்பைகளைப் போன்று புல்டோசர்களைக் கொண்டு அள்ளிய கொடூரம்
29.01.2025, மவுனி அமாவாசை அன்று கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு பலியானோரின். உடல்களை புல்டோசர்கள் கொண்டு அள்ளிப் போடும் காணொலிகள் இன்றும் சமூகவலைதளங்களில் இருக்கின்றன.
ஆனால், அரசு சொல்லும் உயிரிழந்தவர் கணக்கு முதலில் 30, பிறகு தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியோ 41 பேர் உயிரிழந்தனர் என்கிறது.
ஆனால் நேரடி சாட்சிகள்படி சங்கமக் கரையில் பல பிணங்கள் கிடந்ததாகவும், அவற்றை உடனடியாக புல்டோசர்கள் மூலம் அள்ளிப் போட்டதாகவும் கூறினார்கள்.
மனிதக் கால்
இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று வைத்துக்கொண்டாலும், இந்தக் கோர நிகழ்வு நடந்து முடிந்த 3 நாள் கழித்து உயிரிழந்தவர்களின் உடைமைகளை ஓர் இடத்தில் அள்ளிப்போட்டு வைத்திருந்தனர். அந்த உடைமைகளுக்கு இடையே மனிதக்கால் ஒன்றை நாய் கவ்விக்கொண்டு இருந்தது, தூய்மைப்பணியாளர்கள் சென்று பார்த்த போது கூட்ட நெரிசலில் உயிரிழந்த இளைஞரின் உடலை அங்கே புல்டோசர்கள் மூலம் அள்ளும் போது இந்தக் கால் விடுபட்டது என்று தெரியவந்தது.
சாமியார் அரசின் மவுனம்
இப்படி இறந்தவர்களின் உறவுகளுக்கு நிதி உதவி வழங்கினார்களா? என்பதைவிட உயிரிழந்தவர்கள் குறித்த எந்த ஒரு விவரமும்கூட வெளியிடப்படவில்லை என்பது எத்தகைய கொடுமை! காசர்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கூறும் போது, “எனது மாமியார், மனைவி மற்றும் மனைவியின் சகோதரி இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர்” என்று கூறுகிறார். ஆனால் அரசோ இது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டனர். அதாவது அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் – நாளை வரலாம் ஆகவே உங்களுக்கு அரசு சார்பில் எதுவுமே கிடைக்காது என்று மறைமுகமாகக் கூறியுள்ளது.
அங்கு இறந்தவர்களின் உறவுகளுக்கே நிதி உதவியைத் தர மாநில அரசு மறுக்கும் போது கும்பமேளாவிற்குச் சென்று – திரும்பும்போது விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மட்டும் எப்படி நிதி கிடைக்கும்?
ரூ.12 ஆயிரம் கோடி விரயமாம்!
கும்பமேளாவினால் ரயில்வேத் துறைக்கு குறைந்த பட்சம் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வரை விரயம் ஏற்பட்டதாகத் தனியார் அமைப்புகள் தெரிவிக்கின்றன. ரயில் பெட்டிகள் சேதம், ரயில்கள் ரத்து, தாமதம் மற்றும் மாற்றுப் பாதையில் ரயில்கள் திருப்பி விடப்படுதல் போன்ற காரணங்களால் இழப்பு ஏற்பட்டதாகச் சான்றுகளோடு கூறியுள்ளனர்.
தலைநகர் புதுடில்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவிற்குச் செல்ல நின்ற கூட்டம் திடீரென கும்பமேளாவிற்குச் செல்லவேண்டிய ரயில் வேறு நடைமேடையில் வருவதாகக் கூறிய உடன் கூட்டம் அனைத்தும் வேறு நடைமேடைக்குச் சென்ற போது நடந்த நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்பிற்கும் உத்தரப் பிரதேச அரசு பதில் கூறவேண்டும். ஆனால், மவுனம் சாதிக்கிறது.
ரூ.17,000 கோடி என்ன ஆனது?
அப்படி என்றால் கும்பமேளாவிற்காக ஒதுக்கிய ரூ.17,000 கோடிகள் எதற்கு? வெறும் எல்.ஈ.டி. பல்பும் உயர்ஜாதியினருக்காக வசதியான கக்கூஸ் கட்ட மட்டும் தானா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும்பும்.
இதை எல்லாம் கேட்கும் துணிச்சல் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உண்டு – எங்கோ நடக்கும் அவலங்களுக்கு நாம் ஏன் கேட்கவேண்டும் என்றால் நாம் கொடுக்கும் வரியில் 80 காசுகள் அவர்கள் எடுத்துக்கொண்டு வெறும் 20 காசு நமக்குத் தருகிறார்கள். அந்த 80 காசுகள் இப்படி யாரோ சில வடக்கு காவிக்கூட்டங்களின் வயிற்றில் அறுத்துக் கட்டப் பயன்படுகிறது என்பதால்தான்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழரும் கேள்வி கேட்கின்றனர்.
பதில் சொல்லுமா ஒன்றிய மற்றும் உத்தரப் பிரதேச சாமியார் முதலமைச்சர் தலைமையில் உள்ள அரசுகள்?