மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
மதுரை, பிப்.27 தொகுதி மறுவரையறைபற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் அனைத்துக் கட்சிக் கூட்ட அறிவிப்பு வந்த மாத்திரத்திலேயே தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது – போர்த் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்கு அடையாளமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
இன்று (27.2.2025) மதுரைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன?
செய்தியாளர்: ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தர முடியும் என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. இதற்கடுத்து தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன?
தமிழர் தலைவர்: மக்கள் மன்றத்தின் முன் இந்த அநீதியை, அக்கிரமத்தைப் போதிய அளவில் கொண்டு செல்லவேண்டும். தமிழ்நாடு அரசு மட்டுமல்ல; ஒன்றிய அரசின் செயல் தவறு என்று உணருகின்ற அனைத்து ஜனநாயக அமைப்புகளும், அது அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, அல்லது சமூக அமைப்புகளாக இருந்தாலும் சரி ஒன்றாக இணைந்து அதனை எதிர்த்தாக வேண்டும்.
ஏனென்றால், ஜனநாயகத்தில் கட்சிகள் மாறலாம்; ஆட்சிகள் மாறலாம். ஆனால், தத்துவங்களுக்கும், அடிப்படைக் கொள்கைகளுக்கும், உரிமைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. இன்றைக்கு இவர்கள்; நாளைக்கு அவர்கள் என்ற அளவில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
வருமுன்னர் காக்கக்கூடிய அரசு ‘திராவிட மாடல்’ அரசு!
ஆகவேதான், அனைவரும் ஒன்றிணைந்து முதலில் உறுதியாக எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும். அடுத்தபடியாக என்னென்ன செய்யவேண்டுமோ, அவற்றை வருமுன்னர் காக்கக்கூடிய அளவிற்கு, திட்ட மிடக்கூடிய நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிச்சயமாக வேண்டிய ஏற்பாடுகளை செய்வார்.
அடுத்தகட்டம் மிகத் தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘‘வரி கொடோம்!” என்று சொல்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்றுகூட கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு
மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்!
ஆகவே, மக்களைத் தயாரித்தல் முக்கியம். எந்த அரசாக இருந்தாலும், எவ்வளவு பலம் வாய்ந்த அரசாக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆணவ அரசாக இருந்தாலும், அதற்குத் தக்க பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள் – 2026 ஆம் ஆண்டு என்பதும் மிகத் தொலைவில் இல்லை.
போர் அறிவிப்பதற்கு முன் வெற்றி பெற்ற தளபதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
செய்தியாளர்: தொகுதி மறுவரையில் தமிழ்நாட் டிற்கான தொகுதிகள் குறைக்கப்படாது என்று நேற்று (26.2.2025) உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி யிருக்கிறார். அதேநேரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மார்ச் 5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருக்கிறாரே, இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று, போர் அறிவிப்பதற்கு முன் வெற்றி பெற்ற தளபதியாக முதலமைச்சரைப் பார்க்கலாம்.
அதேநேரத்தில், இவர்கள் (ஒன்றிய அரசு) கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்றவர்களா என்று பார்க்கின்றபோது, மீண்டும் எச்சரிக்கையான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா
உறுதியான வாக்குறுதியைத் தரவேண்டும்!
இப்படி சொல்லியிருக்கின்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், உறுதியான வாக்குறுதியைத் தரவேண்டும்.
ஏனென்றால், அவர் அப்படி வாக்குறுதியை தந்தாரா? பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதையே அவர் நாடாளுமன்றத்திலோ அல்லது அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
ஆனால், பொதுக்கூட்டத்தில் பேசுகின்ற பேச்சுக்கி டையே சொன்னதாக மட்டும் அந்த வாக்குறுதி இருக்கக் கூடாது.
என்றாலும், இப்போது இதுபோன்று அவர் சொல்லக்கூடிய அவசியம் வந்திருக்கிறது!
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நம்முடைய முதலமைச்சர் ஏற்பாடு செய்து, எல்லோரையும் அழைத்த நேரத்தில்தான், இதை அமித்ஷா சொல்லி யிருக்கிறார் என்றால், அவர் இக்கட்டான நிலையை உணர்ந்திருக்கிறார்கள்.
எனவே, அதற்குப் பதில் என்ன கிடைக்கும் தமிழ்நாட்டில் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார் என்றுதான் பொருள்.
ஆகவே, போர் தொடங்குவதற்கு முன்பே, போர்ச் சங்கு ஊதியவுடனேயே வெற்றி பெற்ற தளபதியை பாராட்டவேண்டும்.
அதேநேரத்தில், முதலமைச்சர் அவர்களுடைய முன்னோக்கு என்பது,
‘‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’’
என்று சொல்லக்கூடிய அளவிற்கு செயல்படுவது நல்லது.
எப்போதுமே புயல் வருவதற்கு முன் தேவையான ஆயத்த நடவடிக்கைகளை செய்கிறார்கள். முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது.
ஆயத்த நிலையில் தயாராக இருப்பது எப்போதும் நல்லது. ஏனென்றால், ஒன்றிய அரசு, பல நேரங்களில் சொன்னவற்றை அப்படியே காப்பாற்றி இருக்கின்றதா, என்றால் கேள்விக்குறிதான்.
இருந்தாலும், அமித்ஷா அப்படி சொல்லியிருக்கின்ற காரணத்தினால், அதனை அதிகாரப்பூர்வமான அளவில் உறுதி செய்யவேண்டும்.
முதலமைச்சருக்கு வாழ்த்துகள்!
போரில்லாமல் வெற்றி கண்டிருக்கக் கூடிய, போர்ச் சங்கு ஊதியவுடன் வெற்றி கண்டிருக்கக் கூடிய முதல மைச்சருக்கு வாழ்த்துகள்!
தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுவதற்கான
வாய்ப்பு இருக்கிறதா?
செய்தியாளர்: மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல், தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியை தரமாட்டோம் என்று சொன்ன ஒன்றிய அரசை எதிர்த்து, ஹிந்தித் திணிப்பிற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
முந்தைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கும், இன்றைய ஹிந்தி எதிர்ப்பு நிகழ்வுகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். முன்பு, தமிழ்நாட்டில் மட்டும் நடந்தது. இன்றைக்குக் கருநாடகத்திலும் நடக்கலாம்; அதேபோல, பஞ்சாபிலும் நடக்கலாம்; மேற்கு வங்கத்தி லும் நடக்கலாம்.
ஆனால், உங்களைப் போன்ற ஊடகத்தினர், ஒரு பக்கத்தில் நடப்பதை மட்டும் பார்த்து, இன்னொரு பக்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், மாவட்டத்திற்கு ஒரு செய்தி; தாலுகாவிற்கு ஒரு செய்தி என்று ஆக்கிய காரணத்தினால், அங்கே நடப்பது இங்கே தெரியவில்லை; இங்கே நடப்பது அங்கே தெரியவில்லை.
ஹிந்தித் திணிப்பில் பல மொழிகள் அழியக்கூடிய மிகவும் ஆபத்தான நிலை!
எனவேதான், ஆங்காங்கே உணர்ச்சிப்பூர்வமாக நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும். ஹிந்தித் திணிப்பில் பல மொழிகள் அழியக்கூடிய மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன என்று.
உதாரணமாக, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், ஏற்கெனவே இருந்த உருது மொழியை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.
இப்படி ஆங்காங்கே மேகங்கள் திரண்டிருக்கின்றன; மேகங்களைப் பொறுத்துதான் மழை வருமா? அல்லது இடி இடிக்குமா? என்று தெரியும்.
ஒப்பனைக்காரர்களைப் பற்றி நாங்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை!
செய்தியாளர்: தமிழ்நாட்டில் 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது. 2026 ஆம் ஆண்டும் அதுபோன்ற நிலைதான் ஏற்படும் என்று த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பேசியிருக்கிறாரே? அதுபோன்ற சூழ்நிலைதான் இப்போது இருக்கிறதா?
தமிழர் தலைவர்: வசன கர்த்தாக்கள் எழுதிக் கொடுக்கும் வசனங்களைப் பேசும் ஒப்பனைக்காரர்களைப் பற்றி நாங்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை.
ஏனென்றால், ஒப்பனையைப் பூசிக் கொள்கிறவர்கள், 24 மணிநேரமும் ஒப்பனையை பூசிக் கொண்டிருக்க முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அதனை அவர்கள் கலைத்தாகவேண்டும்.
ஆகவே, ஒப்பனை வசனங்களுக்கு மிக அதிகமான முக்கியத்துவத்தை உங்களைப் போன்ற ஊடகங்கள் தருகின்றார்களே தவிர, எங்களைப் போன்றவர்கள், அனுபவவாதிகள், பொதுத் தொண்டில் நீண்ட கால மாக இருக்கின்றவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
‘‘Working from the Home” என்று சொல்லுகின்ற வேலைத் திட்டம் இருக்கிறதே, இதுவரையில் அது தனி நபர்களிடம் மட்டும்தான் இருந்தது. இப்போது சில கட்சித் தலைவர்கள் ‘‘Working from the Home” என்று நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடைசிவரையில் இருக்கவேண்டியது ‘‘Home” தான்.
யூகங்கள் அரசியலில் வெற்றிகளாக வராது!
செய்தியாளர்: தவிர்க்க முடியாத கட்சியாக நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. இருக்கிறது என்று பிரச்சாரங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றதே?
தமிழர் தலைவர்: முன்பு, ஒரு சூப்பர் ஸ்டார், கட்சி தொடங்கி, முதலமைச்சராவார் என்று ஜோசியம் சொன்ன ஜோசியர்கள் எல்லாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.
கட்சியைத் தொடங்கி நேரிடையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லலாம். அதற்காக யாரை வேண்டுமானாலும் பிடிக்கலாம்.
ஆனால், மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா? என்பதுதான் கேள்வி.
ரசிகர் மன்றங்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது.
பாசிசமா? பாயாசமா? என்றெல்லாம் கேட்கிறார். ஆகவேதான், எப்பொழுதும் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அதனால்தான் தொடக்கத்திலேயே சொன்னேன், ஒப்பனைவாதிகள் எழுதிக் கொடுக்கின்ற வசனங்களைப் பேசக்கூடியவர்களாக இருக்கின்ற வரையில், எங்களைப் போன்றவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை.
தேவையான நேரத்தில், தேவைப்பட்டால் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுப்போம். ஏனென்றால், அரசியல் என்ற ஓர் ஆழமான நீரோட்டத்தில் அதில் எப்பொழுது சுழல் ஏற்படும் என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
இதைவிட மிக அதிகமான செல்வாக்கு உடைய வர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து, அவர்களால் காலூன்ற முடியவில்லை என்பதை பழைய வரலாறு காட்டியிருக்கிறது.
எனவே, 2026 மிகத் தெளிவாக அதைக் காட்டும்!
தி.மு.க.வைப் பொறுத்தவரையில், 200 இடங்களில் வெற்றி பெறும் என்று சொல்கிறார்கள். 200 இடங்களோடு நீங்கள் நிறுத்திவிடாதீர்கள்; இன்னும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுங்கள் என்ற வாய்ப்பை இப்போது ஒன்றிய அரசு ஹிந்தித் திணிப்பின் மூலமாக, மொழிப் பிரச்சினையின்மூலமாக, நிதி மறுப்பின் மூலமாக, மற்ற மற்ற நியாய மறுப்பின் மூலமாக ஒவ்வொரு நாளும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, தி.மு.க.வின் ஆட்சியைப்பற்றி அவர்கள் பேசப் பேச, வசை பாட, வசை பாட அவையெல்லாம் தி.மு.க.வினுடைய வளர்ச்சிக்கு, ஆட்சியினுடைய நீடிப்புக்கு நல்ல உரங்களாகப் பயன்பட்டு, பயிர்கள் செழுமையாக இருக்கும் என்பதை 2026 ஆம் ஆண்டு நீங்ளெல்லாம் காண்பீர்கள்.
நான், என்னுடைய அனுபவ அடிப்படையில் தெளிவாகச் சொல்கிறேன்!
ஏனென்றால், பல தேர்தல்களை நாங்கள் பார்த்தவர்கள். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், முதல் தேர்தல் ஆரம்பித்து, சென்ற தேர்தல் வரையில் அறிந்த வன் என்ற அனுபவ அடிப்படையில் நான் தெளிவாகச் சொல்கிறேன்.
ஆகவே, அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு, இப்போது சொல்வதை சில பேர் ஏற்காமல்கூட இருக்க லாம்.
ஆனால், , நிச்சயமாக யூகங்கள் அரசியலில் வெற்றி களாக வராது.
தி.மு.க.வினுடைய வரலாறு!
‘‘ஆசைகள் குறைவாக இருந்தால் பறக்கலாம்” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
எவ்வளவுக்கெவ்வளவு தி.மு.க.வின்மீது பாய்கி றார்களோ, அந்தப் பந்தை அவர்கள் வேகமாக அடிக்க அடிக்க, அது மேலே உயரும். அதுதான் தி.மு.க.வி னுடைய வரலாறு.
திராவிட இயக்கத்தினுடைய வரலாறு என்பது இருக்கிறதே, எதிர்ப்பு எங்கே இருக்கிறதோ, அங்கேதான் முதிர்ப்பு, வேகமான வளர்ச்சி என்று இருக்கும்.
அதைத்தான் இப்போது நாட்டிலே செய்து கொண்டி ருக்கின்றார்கள்.
தி.மு.க.விற்கு,
அதனுடைய கொள்கைப் பலம்,
சாதனைப் பலம்,
வரலாற்றுப் பலம்,
மக்கள் பலம் எல்லாமே இருக்கின்றன.
அந்தப் பலம் போதும். யார் சாபம் கொடுத்தாலும், அதைப்பற்றிக் கவலையில்லை.
நேற்றுகூட தேச விரோதக் கட்சி தி.முக.. என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு ஓம் மேத்தா இல்லை; ஆனால், தி.மு.க. இருக்கிறது!
இப்படித்தான், நெருக்கடி காலக் கட்டத்தின்போது, ஓம் மேத்தா என்பவர் தமிழ்நாட்டிற்கு வந்து, ‘‘தி.மு.க. இனிமேல் இருக்குமா? திராவிட இயக்கங்கள் இருக்குமா?” என்றெல்லாம் கேட்டார்.
இன்றைக்கு ஓம் மேத்தா இல்லை. ஆனால், தி.மு.க. இருக்கிறது. திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது – ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இங்கே வந்து பிரச்சாரம் செய்தார். பிரதமர் மோடி அ.தி.மு.க.விற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.
பிறகு, அவர்களோடு கூட்டணி சேரவேண்டும் என்று இன்றைக்குத் துடியாய்த் துடிக்கிறார்கள். அ.தி.மு.க., பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர யோசித்தாலும்கூட, இல்லை இல்லை கட்டாயமாக நீங்கள் கூட்டணி சேரவேண்டும் என்று சாம, பேத, தாண, தண்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழ்நாடு பெரியார் மண்ணாக, திராவிட மண்ணாக இருக்கின்ற காரணத்தினால்…
இவற்றையெல்லாம் செய்தாலும்கூட, எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும், தி.மு.க. அதனுடைய கொள்கை பலத்தால், தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணியாக இருக்கின்ற காரணத்தினால், தமிழ்நாடு பெரியார் மண்ணாக, திராவிட மண்ணாக இருக்கின்ற காரணத்தினால், என்றைக்கும் தி.மு.க. வளருமே தவிர, ஒருபோதும் தேயாது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்,
ஆதவன் மறைவதில்லை!
‘‘ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறை வதில்லை” என்ற பாட்டிற்கு ஏற்ப, நிச்சயமாக சூரியனை மறைக்க முடியாது. சூரியனின் ஒளி தேவை – இலைகள் வளர்வதற்குக்கூட சூரிய ஒளி தேவை.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.