தஞ்சை கொள்கை வீரர் தோழர் ‘ஆட்டோ’ ஏகாம்பரம் மறைவு நமது வீரவணக்கம்

viduthalai
1 Min Read

தஞ்சை திராவிடர் கழகத்தில் மிகவும் சிறப்பாகப் பணியாற்றியவரும், திராவிட தொழிலாளரணி மாவட்ட செயலாளராகவும் பொறுப்பாற்றிய மானமிகு தோழர் ஏகாம்பரம் (வயது 49) இன்று (26.2.2025) அதிகாலை தஞ்சையில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமும், துயரமும் அடைந்தோம்.

சில காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து நேற்று (25.2.2025) மாலை இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

சிறந்த கொள்கை வீரர்; ‘ஆட்டோ’ ஏகாம்பரம் என்று பல தோழர்களிடையேயும் அன்புடன் அழைக்கப்பட்டவர். அவரது பண்பான, அணுகுமுறை காரணமாக பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை இயக்கத்தில் இணைய வைத்த கழகப் போராளி.

அவரது ஆட்டோவில் பயணித்த ஒருவர் ஒரு லட்ச ரூபாயை அந்த ஆட்டோவில் விட்டுவிட்டுச் சென்ற நிலையில் உடனடியாக அதனை தஞ்சை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறந்த நாணயமிக்க நல்லவர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதற்காக அவரைப் பாராட்டினார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய பண்பு நலன்.

நாளை (27.2.2025) மருத்துவக் கல்லூரி மாணவர்களது கல்விக்குப் பயன்படும் வகையில் இவரது உடல் கொடையாக வழங்கப்படுகிறது.
துயரத்தால் துன்புறும் அவரது வாழ்விணையர் திருமதி பாக்கியம், இரு மகள்கள் பொறியாளர் முல்லை, சட்டக்கல்லூரி மாணவி விடுதலை அரசி மற்றும் குடும்பத்தாருக்கு நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு நமது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொள்கை வீரர் ஏகாம்பரத்திற்கு நமது வீரவணக்கம்.

26.2.2025

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *