மாணவர்களின் கல்விக்கான நிதியை விடுவிக்க, மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்லி மிரட்டும் பாசிஸ்ட்டுகளின் திட்டத்தை வீழ்த்த, ஓரணியில் நின்று எதிர்ப்போம்!
சென்னை, பிப். 19– தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கத் துடிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணி சார்பில், சென்னையில் நேற்று (18.2.2025) மாலை நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று எழுச்சிமிக்க உரையாற்றினார்.
அப்போது அவர், “நம் மாணவர்களின் கல்விக்கான நிதியை விடுவிக்க, மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்லி மிரட்டும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் இந்த அராஜகப் போக்கு தமிழ் மண்ணில் இன்னொரு ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு அறப்போருக்குத் தான் வழிவகுக்கும். நம் மாணவர்களின் கல்வியின் மீதும் – உயிருக்கு நிகரான தமிழ்மொழி மீதும் கை வைக்க நினைக்கும் பாசிஸ்ட்டுகளின் திட்டத்தை வீழ்த்த, கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஓரணியில் நின்று எதிர்ப்போம்” என அழைப்பு விடுத்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எழுச்சியுரை வருமாறு:
மொழி, கல்வி மற்றும் நிதி உரிமையைக் காக்க இன்று உணர்ச்சிப் பெருக்கோடு இங்கு கூடி இருக்கின்ற உங்கள் அத்தனைப் பேருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் துணை முதலமைச்சராக கலந்துகொள்ளவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சராக கலந்து கொள்ளவில்லை. இளைஞர் அணிச் செயலாளராக கலந்துகொள்ளவில்லை. சாதாரண ஒரு தி.மு.க தொண்டனாக, சுயமரியாதையுள்ள தொண்டர்களில் ஒருவனாக, தமிழர்களில் ஒருவனாக கலந்துகொள்கிறேன்.
அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்
இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது. தமிழர்கள் நாம் எப்போதுமே அன்புக்குதான் கட்டுப்படுவோம். எந்தக் காலத்திலும் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம், அஞ்ச மாட்டோம். இது ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசுக்கு புரியவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மிகப்பெரிய அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தை, தலைநகர் சென்னையில் நடத்திக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய அரசின் பாசிசப் போக்கைக் கண்டித்து, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே மேடையில் கூடியிருக்கிறோம்.
இங்கு எனக்கு முன்பு கண்டன உரை ஆற்றிய இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களுக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை
எதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம்? சமீபத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று எந்தவொரு திட்டமும் தீட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு என்கிற நம் மாநிலத்தில் பெயர் ஒருமுறை கூட உச்சரிக்கப்படவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் `ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்டது. ஃபெங்கல் புயல் பாதிப்புக்கு 6 ஆயிரத்து 675 கோடி ரூபாயை நம் முதலமைச்சர் அவர்கள் நிவாரணமாக ஒன்றிய அரசிடம் வலியுறுத்திக் கேட்டார். ஆனால், ஒன்றிய அரசு வெறும் 950 கோடி ரூபாயை மட்டும்தான் தந்தது. அதுவும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்துதான் தந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசு மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைத்தான் தந்தார்கள்.
2 ஆயிரத்து 190 கோடி ரூபாய்
ஒன்றிய அரசு தங்கள் கஜானாவில் இருந்து ஒரு பைசாவைக் கூட தமிழ்நாடு அரசிற்குக் கொடுக்கவில்லை. இப்போது ஹிந்தியை ஏற்காத காரணத்தால், தமிழ்நாட்டின் கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய 2 ஆயிரத்து 190 கோடி ரூபாயைக் கொடுக்காமல் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதை பிரித்துக் கொடுத்திருக்கிறது. அத்துடன் ஒருபடி மேலே சென்று, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர முடியும் என்று வெளிப்படையாகவே ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டி இருக்கிறார். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு காசைக் கேட்கவில்லை. கேட்கிற மாதிரி கேட்டால்தான் அவர்கள் காதில் விழும். நாங்கள் ஒன்றும் உங்களிடம் பிச்சையோ, கடனோ கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் கட்டிய வரிப்பணத்திலிருந்து எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். எங்களுக்கு சேர வேண்டிய நிதி உரிமையைக் கொடுங்கள் என்று உரிமையோடு கேட்கிறோம்.
மிரட்டிப் பணிய வைக்க முடியாது
ஒன்றிய அரசுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசையும் சரி, தமிழ்நாட்டு மக்களையும் சரி, நீங்கள் ஒரு போதும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. இது திராவிட மண். தந்தை பெரியார் மண். அறிஞர் அண்ணாவால் – முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்டு, நம் முதலமைச்சர் அவர்களால் வழிநடத்தப்படுகிற சுயமரியாதை மண் என்பதை, இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக ஒன்றிய அரசுக்கு மீண்டும், மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய போராட்டங்கள் எல்லாமே, 2 முக்கியமான விஷயத்துக்காகத்தான் நடந்தன. ஒன்று கல்விக்காக, மற்றொன்று ஹிந்தித் திணிப்புக்கு எதிராக நடந்தது.
இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து
இன்றைக்கு நம் கல்விக்கும், இருமொழிக் கொள்கைக்கும் ஆபத்து வந்து இருக்கிறது. ஹிந்தியை நாம் ஏற்றுக்கொண்டு ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக கத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஹிந்தியை தமிழ்நாட்டிற்குள் திணித்து, தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை, தனித்துவத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதன் மூலமாக, தமிழர்களை, இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடலாம் என்று பாசிச பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.
இன்றைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பேர் வெளிநாடுகளில் மென்பொருள் பொறியாளர்களாக, மருத்துவர்களாக, உலகத்தின் பல்வேறு மூலைகளில் வேலை செய்கிறார்கள். இஸ்ரோவின் தலைவர்களாக, திட்ட இயக்குநர்களாக, விஞ்ஞானிகளாக உலகம் முழுவதும் பெருமையோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களில் 99% பேர் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளியில் அரசு பாடத்திட்டத்தை இருமொழிக் கல்வியில் கற்றவர்கள்தான்.
மொழி – இன உணர்வே முக்கியம்
இன்றைக்கு கல்வியில் தமிழ்நாடு எவ்வளவோ சாதனைகளைச் செய்துகொண்டு இருக்கிறது. அதற்கு ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை ஊக்கப்படுத்தக்கூட வேண்டாம், நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் நியாயமாகத் தர வேண்டிய நிதியைக் கொடுத்தாலே போதும். நமக்கு வர வேண்டிய நிதி உரிமையைக் கேட்டால், பா.ஜ.க–வைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
தமிழ்நாடு அரசு, இந்தியா கூட்டணி அரசியலுக்காகத்தான் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார். நான் அவருக்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எங்களுக்கு அரசியல் எல்லாம் இரண்டாவதுதான். முதலில் எங்களின் மொழி உணர்வும், இன உணர்வும்தான் எங்களுக்கு முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்துவும் நடராசனும் அரசியலுக்காக உயிரை விடவில்லை. தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் உயிரைக் கொடுத் தார்கள். கீழப்பழுர் சின்னச்சாமி அரசியலுக்காக சாகவில்லை. ஹிந்தித் திணிப்பை எதிர்த்துத்தான் தனக்குத் தானே ‘தீயை’ வைத்துக்கொண்டு இறந்தவர்கள் எங்கள் தமிழ்நாட்டுகாரர்கள். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இறந்து இருக்கிறார்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு, உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் அடிப்பணிவோம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அது உங்கள் கனவில்கூட ஒரு போதும் நடக்காது.
தாய்மொழியையே இழந்தன
இன்றைக்கு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார், “பிற மாநிலங்கள் எல்லாம் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்ற போது, தமிழ்நாடு மட்டும் ஏன் பிரச்சினைக்கு வருகிறது?” என்று கேட்கிறார். ஹிந்தியை ஏற்றுக்கொண்ட பல மாநிலங்கள், இன்றைக்கு தங்களுடைய தாய்மொழியையே இழந்து நிற்பதை, நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். உதாரணத்திற்கு ராஜஸ்தானின் தாய்மொழி ராஜஸ்தானி. இப்படிப் பல மாநிலங்களுக்கு தாய்மொழிகள் இருக்கின்றன. ராஜஸ்தானுக்கு ராஜஸ்தானி, பீகார் மாநிலத்திற்கு பீஹாரி, அரியானாவில் ஹரியான்வி, உத்தரப் பிரதேசத்தின் தாய்மொழி போஜ்புரி, இந்த மொழிகள் எல்லாம் இன்றைக்கு அழிந்துபோய் இருக்கின்றன.
இதற்குக் காரணம் அங்கு எல்லாம் ஹிந்தி நுழைந்ததுதான். ராஜஸ்தானி, பீஹாரி, போஜ்புரி, ஹரியான்வி மொழிகளை எல்லாம் ஹிந்தி மெதுவாக நுழைந்து விழுங்கிவிட்டது. அந்த மாநில மக்கள் ஹிந்தியைப் படிக்கிறார்கள். ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆனால், அவர்களின் தாய்மொழியை மூன்றாவது மொழி மாதிரிதான் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதைத்தான் மற்ற மாநிலங்கள் ஹிந்தியை ஏற்றுக்கொண்டு இருக்கிறது, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு இருக்கிறது என்று நம் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நாமும் ஹிந்தியை ஏற்றுக்கொண்டோம் என்றால், நம் தாய்மொழி தமிழ் மொழியை விரைவில் இழந்துவிடுவோம். இதைவிட, தமிழ்நாட்டுக்கு ஒரு தீங்கினை – துரோகத்தை யாராலும் செய்ய முடியாது. இதற்கு முன்பு ஆட்சி செய்த அடிமைகள் வேண்டுமென்றால், நீங்கள் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவார்கள். நிதி வேண்டும் என்றால் எந்த இடத்திலும் கையெழுத்துப் போடுவார்கள்.
சுயமரியாதை மிக்க திராவிட மாடல் அரசு
பாசிஸ்ட்டுகள் நீட்டிய காகிதத்தில் எல்லாம் கையெழுத்துப் போட இது ஒன்றும் அடிமை அரசு அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மகத்தான தலைவரால் வழிநடத் தப்படுகின்ற சுயமரியாதை உள்ள திராவிட மாடல் அரசு.
அதனால்தான் சொல்கிறேன், நம் தமிழ்நாடு அரசு என்றைக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்காது. தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கை மட்டுமே இருக்கும் என்று நம் முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஆகவே, எங்களின் மீது மீண்டும் ஹிந்தியைத் திணிக்க முயற்சி செய்யாதீர்கள். தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள் என்று நியாயமாகத்தான் கேட்கிறோம். நீங்கள் கொடுப்பதை விட்டுவிட்டு, இப்படியே மிரட்டிக்கொண்டு இருந்தீர்கள் என்றால், இனிமேல் தமிழர்கள் நாங்கள் எப்படி `முடிவு எடுக்கிறோம்’ என்பது தெரியும். அந்த நிலைமைக்கு எங்களைத் தள்ளிவிட்டு விடாதீர்கள் என்பதை மட்டும், இங்கு எச்சரிக்கையாகக் கூறிக்கொள்கிறேன்.
இன்னொரு மொழிப்போர்
நாங்கள் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கிறோம், ஜனநாயகத்தை மதிக்கிறோம். அதனால்தான், எங்கள் உரிமைக்காக ஜனநாயக வழியில் இன்றைக்குக் குரல் கொடுக்கிறோம். நமது இந்தக் குரல் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் செவிகளில் விழ வேண்டும். நம் உரிமைகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். இல்லை என்றால், தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. இன்றைக்கு நாம் எதிர்கொள்கின்ற பிரச்சினை அரசின் பிரச்சினை மட்டும் கிடையாது, தி.மு.க.–வின் பிரச்சினை கிடையாது, வெறும் பள்ளிக்கல்வித்துறையின் பிரச்சினை கிடையாது. ஒவ்வொரு தமிழ்நாட்டு மாணவனின் பிரச்சினை, எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. தமிழ் மொழி சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆகவே, இந்த ஆர்ப்பாட்டம் நம் பிள்ளைகளுக்கான ஆர்ப்பாட்டம், நம் மாணவர்களுக்கான ஆர்ப்பாட்டம், நம் உரிமைக்கான ஆர்ப்பாட்டம். இந்த நேரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் ஒரு வேண்டுகோள்.
ஓரணியில் நின்று எதிர்ப்போம்
இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதோ, அவதூறு பரப்புவதையோ தயவுசெய்து கைவிட்டு விட்டு எங்களுடன் இணைந்து நீங்களும் குரல் கொடுங்கள், வீதிக்கு வாருங்கள். கட்சிப்பெயரில் அண்ணாவையும், திராவிடத்தை யும் வைத்துக்கொண்டு தயவுசெய்து ஒதுங்கி நிற்காதீர்கள், வேடிக்கைப் பார்க்காதீர்கள். கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் சில கண்ணுக்குத் தெரியாத நன்மைகள் இருக்கின்றன என்று இன்றைக்கு சிலர் சொல்கிறார்கள்.
ஒன்றிய அரசே கொண்டு வரும் போது, பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டபோது தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள்.
இதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் 1960–களிலேயே ஒரு பதில் சொல்லி இருக்கிறார். “மாடியில் இருந்து பூக்களும், குப்பைகளும் கொட்டப்படலாம். உயர்ந்த இடத்தில் இருந்து விழுகிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும், எல்லோரும் ஏற்பார்கள் என்று நினைக்கக் கூடாது’’ என அண்ணா அன்றைக்குச் சொன்னார். அது இன்றைக்கும் பொருந்தும். ஒன்றிய அரசு உயர்ந்த இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, புதியக் கல்வி கொள்கையை, மும்மொழிக் கொள்கை எனும் குப்பையை நம்மீது கொட்டப் பார்க்கிறது. அதை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களால் அனுமதிக்க முடியாது. 1938–இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 2 பேர் உயிரை நாம் பலி கொடுத்தோம். 1965இல் நடந்த மொழிப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள். இப்போது 2025இல் மீண்டும் ஹிந்தியைத் திணிக்க வருகிறார்கள். நாங்கள் 100 பேர் அல்ல ஆயிரக்கணக்கானோர் உயிரைக் கொடுத்து, தமிழைக் காக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆகவே, இதில் தயவுசெய்து உங்கள் அரசியலை நுழைக்காதீர்கள்.
தமிழ்நாடு தழுவிய போராட்டம்
எங்கள் குழந்தைகளின் கல்வியோடும், தமிழ் மொழி யோடும் மட்டும் விளையாடாதீர்கள். எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக, குழந்தைகளின் கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டுக் குழந்தைகளின் கல்விக்கான நிதி உரிமையைக் கேட்டு, இன்றைக்கு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். நிதி வழங்கவில்லை என்றால், தலைவரின் அனுமதியுடன் சொல்கிறேன் விரைவில் மிகப்பெரிய போராட்டக் களமாக இது மாறும். இன்றைக்கு சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். விரைவில் தமிழ்நாடு தழுவிய போராட்டமாக மாறுவதும், மாறாததும் பாசிச பா.ஜ.க. அரசின் கைகளில் இருக்கிறது. ஒன்றிய பிரதமர் மோடி அவர்களே சென்ற முறை, நீங்கள் தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயற்சித்தபோது தமிழ்நாட்டு மக்கள் உங்களை `கோ பேக் மோடி’ என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். மீண்டும் அதை தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தீர்கள் என்றால், இந்த முறை `கோ பேக் மோடி’ கிடையாது, `கெட் அவுட் மோடி’ என்று சொல்லி உங்களைத் தமிழர்கள் துரத்துவார்கள்.
எனவே, இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும். மீண்டும் ஒன்றிய அரசிடம் நான் சொல்வதெல்லாம் இது வெறும் ஆர்ப்பாட்டம்தான், இதன் முடிவும், தொடர்ச்சியும் உங்களின் கைகளில் இருக்கிறது என்பதை கூறிக்கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர்களுக்கும், கலந்துகொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த அனைத்து இயக்கத்தின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்து, வாய்ப்பளித்த நம்முடைய கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சிமிக்கஉரையாற்றினார்.