இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ம.சிங்காரவேலர் (பிறப்பு – 18.2.1860)
சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, ஹிந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது. அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார். வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்குரைஞர் தொழில் செய்தபோதும் ஏழைகள் பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது.
அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார்.
வழக்குரைஞர் தொழிலைக் கைவிடல்
சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சபையில் வழக்குரைஞராக 1907ஆம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்குரைஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலர் எந்தச் சூழ்நிலையிலும் அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு தனது வழக்குரைஞர் தொழிலை அவர் புறக்கணித்தார்.
1922இல் மும்பையைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் சிங்காரவேலருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1922இல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923இல் அவர் ‘மே தினம்’ கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924இல் ‘கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில்’ சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.
பொதுவுடைமை இயக்கம் மக்கள் இயக்கமானது
இவ்வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம், மக்கள் இயக்கமாக மாற காரணமாக இருந்தது. கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925ஆம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேரின் தலைமையில் நடந்தது. 1927இல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.
சிங்காரவேலர் ஆற்றிய சமூகப் பணிகள்…
இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923இல் தொழிலாளர் விவசாயக் கட்சியைத் தொடங்கினார்.
1925இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
‘குடிஅரசு’ இதழில் ம.சிங்காரவேலர் அறிவியல் கட்டுரைகளை எழுதிட வாய்ப்பளித்தார். ருசியா சென்ற வந்த தந்தை பெரியார் ம.சிங்காரவேலருடன் கலந்துரையாடி ஈரோடு சமதர்ம திட்டத்தை வெளியிட்டார்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.
டாக்டர் சி.நடேசன் (மறைவு – 18.2.1937)
நீதிக்கட்சி உருவாவதற்குக் காரணமான முதல் மூவருள் முதல்வர் சி.நடேசனார்.
சென்னை மாநிலத்தில் அப்போதைய அரசியல் நிலைகளால் உயர் ஜாதியினரால் அரசுப் பணிகளிலுள்ள இதர வகுப்பார் பாதிக்கப்படுவதும், உயர் ஜாதியினர் வெள்ளையர்களோடு சேர்ந்துகொண்டு சலுகைகள் பெறுவதும் தவிர்க்க முடியாததாய்த் தொடர்ந்தன. இந்நிகழ்வுகள் நடேசனாரைப் பொதுவாழ்க்கையில் ஈடுபட வைத்தன. பாதிக்கப்படுகிற வகுப்பாருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணத்தில், ஓர் அமைப்பை உருவாக்க எண்ணம் கொண்டு 1912இல் ‘சென்னைத் திராவிடர் சங்கம்’ உருவாக்கினார்.
இவ்வமைப்பு சென்னையில் பொதுமக்களின் அமைப்பாக இயங்கிவந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. இச்சங்கம் தொடங்கப்பட்டதன் விளைவாகத்தான் நடேசனாரின் நட்பு திரு.வி.க.வுக்குக் கிடைத்ததாக அவரது வாழ்க்கைக் குறிப்பு கூறுகிறது. அரசு அலுவலகங்களில் பணியாற்றிவந்த பார்ப்பனரல்லாதார், மாலை நேரங்களில் திராவிடர் சங்கத்தில் கூடி, நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்துப் பேசித் தீர்வு கண்டனர். இது மட்டுமன்றி சிந்தனையாளர் சிங்காரவேலர், பேராசிரியர் லட்சுமி நரசு, எல்.டி.சாமிக்கண்ணு, திரு.வி.க. போன்ற அறிஞர்களின் சொற்பொழிவுகள் திராவிடர் சங்கத்தில் அடிக்கடி நடைபெறும்.
திராவிடர் இல்லம்
இப்படித் தொடங்கிய திராவிடர் சங்கத்தின் பணிகள்தான் பின்னர் நீதிக் கட்சி தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைந்தன. திராவிடர் சங்கம் நடத்தியதுபோலவே ‘திராவிடர் இல்லம்’ என்கிற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசனார் நடத்தினார். திராவிட சமூக மாணவர்களின் பிற்போக்கான நிலையைக் கண்டு வருந்திய அவர் இவ்விடுதியைத் தொடங்கினார். அங்கே ஏழை மாணவர்கள் பணம் செலுத்தாமலேயே உணவருந்தினார்கள். சர்.ஆர்.கே.சண்முகம் போன்ற பெருமக்களை நாட்டுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை திராவிடர் சங்கத்தைச் சார்ந்ததாகும். நடேசனார் காங்கிரஸ் கட்சியில் இருந்தது இல்லை. தான் தோற்றுவித்த அமைப்பின் மூலம் பார்ப்பனரல்லாதாருக்கு உழைத்துவந்தார்.
அரசியல் கட்சி உருவானது
இந்த நிலையில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு அரசியல் வடிவம் கொடுத்த பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்களும் காங்கிரசில் பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டு உழைத்துவந்தனர். அவர்களது நம்பிக்கையை காங்கிரசின் நடைமுறை தகர்த்தெறிந்தது. நடேசனார் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு திராவிடர்களின் இழிநிலையைப் போக்க தியாகராயரையும், நாயரையும் கண்டு தம் கருத்தை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, இருவரையும் கொண்டு ஓர் அரசியல் கட்சி உருவெடுக்கக் காரணமாக இருந்தார்.
தந்தை பெரியாரின் உருக்கமிகு இரங்கல்
நடேசனார் கூட்டிய மாநாடுகளும் கூட்டங்களும் எண்ணிலடங்காதவை. டாக்டர் நடேசனார் மரணமடைந்தபோது ‘குடி அரசு’ இதழில் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் குறிப்பைப் படித்துப் பார்த்தால் நடேசனாரின் கபடமற்ற தன்மையைப் புரிந்துகொள்ளலாம்:“டாக்டர் நடேச முதலியார் நலிந்தார் எனும் சேதி கேட்டு நம் நாட்டில் வருந்திடாத பார்ப்பனர் அல்லாத தமிழ் மக்கள் எவரும் இருந்திட மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு நன்றி விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவரும் நாட்டில் இருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகமற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதும் ஆகும்.”
இவ்வாறு அந்த இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.