19.08.1928- குடிஅரசிலிருந்து…
தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும் உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அக்கோயில்களின் நிபந்தனைகள் மக்கள் சுயமரியாதைக்கு இடையூறாகவும் உயர்வு-தாழ்வு கற்பிப்பதற்கு ஆதாரமாகவும் இருப்பதால் இவைகளுக்கு ஆதாரமான சகலத்தையும் ஒழிக்க வேண்டுமென்றே கருதி இதைச் செய்யத் தூண்டுகின்றோமேயல்லாது சாமி என்று ஒன்று இருந்தால் அங்குதான் இருக்கக் கூடுமென்றோ அந்த கல்லுச்சாமிக்கு பக்கத்தில் போவதால் அதிக லாபம் கிடைக்குமென்றோ நினைத்திருக்கும் படியான அவ்வளவு முட்டாள்தனத்துடன் நாம் கோவிலில் எல்லோருக்கும் சம உரிமைக் கேட்கவில்லை.