எதிரியைப் பங்காளியாகவும், பங்காளியை எதிரியாகவும்
கருதினால், அது அரசியல் உதிரிகளாகத்தான் ஆக்கும்!
ஆலங்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்!
ஆலங்குடி, பிப்.15 தங்களுடைய எதிரி யார்? என்பதை அ.தி.மு.க.வினர் நினைத்துப் பார்க்கவேண்டும். எதிரி யார்? பங்காளி யார்? என்று நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். எதிரியைப் பங்காளியாகவும், பங்காளியை எதிரியாகவும் கருதினால், அது அரசியல் உதிரிகளாகத்தான் ஆக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (14.2.2025) ஆலங்குடிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
அ.தி.மு.க.வை இயக்குவது டில்லி!
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இன்றைக்கு இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியாக இருந்திருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த இயக்கம், இன்றைக்கு ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின்னர், பல பிரிவுகள், பல குளறுபடிகள், பல அமைப்புகளாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படையில் ஒரே ஒரு காரணம்தான் – இதை இயக்குவது டில்லி.
தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க.வின் பலத்தை அழிக்கவேண்டும் என்பதற்காக அவர்கள்தான் இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம், இது ஒரு பக்கம்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.
இரண்டாவது, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதற்காகவும், திராவிட இயக்கங்களைத் தாண்டி வேறு கட்சிகளுக்கு இங்கே இடமில்லை. என்னதான் செய்தாலும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.
ஆகவேதான், ‘‘பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்’’ உருவாக்கலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண் டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வினர் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பதைவிட, மக்கள் மன்றத்தை அணுகுவது மிகவும் முக்கியம்.
ஆனால், அதேநேரத்தில், தங்களு டைய எதிரி யார்? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
எதிரி யார்? பங்காளி யார்? என்று நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
எதிரியைப் பங்காளியாகவும், பங்காளியை எதிரியாகவும் கருதினால், அது அரசியல் உதிரிகளாகத்தான் ஆக்கும்.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.