அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவி யேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே மோசமான அதிரடிகளைக் காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட குடியேறியவர்களை ஏற்றி வந்த இரு விமானங்களை கொலம்பியாவில் தரையிறக்க அந்நாட்டு அதிபர் அனுமதி அளிக்கவில்லை.
”குடியேறிய மக்களை பொது விமானங்கள் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும் என்றும் ராணுவ விமானங்களில் அனுப்ப அவர்கள் குற்றவாளிகள் இல்லை” என்றும் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ தெரிவித்திருந்தார். இதன் காரணமாகக் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொலம்பிய இறக்குமதிப் பொருட்கள் மீதான 25 சதவீத வரியை அதிகரித்து பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார். பதிலுக்கு கொலம்பியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 25% ஏற்றுமதி வரி உயர்வை அறிவித்தது. இதையடுத்து, கொலம்பியா மீதான 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள கொலம்பியா நாட்டு மக்கள் அந்நாட்டிலுள்ள பணியைத் துறந்துவிட்டு, தாயகம் திரும்புமாறு அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ அழைப்பு விடுத் துள்ளார்.இதுகுறித்து இடதுசாரி அதிபரான குஸ்டாவோ தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கொலம்பியா நாட்டு மக்கள் அமெரிக்காவிலுள்ள தங்களது பணியை விட்டு விட்டு, தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும். செல்வம் உழைக்கும் மக்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கொலம்பியாவில் ஒன்றாக இணைந்து சமூக செல்வத்தைக் கட்டியெழுப்புவோம். இந்த அழைப்பை ஏற்று கொலம்பியாவிற்குத் திரும்பும் அந்நாட்டு மக்கள் அரசு அறிவித்துள்ள திட்டங்களில் இணைந்து தொழில் தொடங்கினால் குஸ்டாவோவின் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப் படும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் தங்களது விமானத்தை அனுப்பி அமெரிக்காவில் உள்ள கொலம்பிய மக்களை வரவழைத்தார். மேலும் கொலம்பியர்கள் வந்த விமானம் தன்னுடைய தலைநகர் போகடாவில் இறங்கும் போது, அதிபர் விமானத்திற்குள் சென்று தனது நாட்டு மக்களைப் பார்த்து ‘‘நீங்கள் உங்கள் சொந்த பூமிக்கு வந்துள்ளீர்கள். உங்களின் உழைப்பு இனி ஊராருக்கு தேவைப்படாது உங்களது நாட்டுக்காக நீங்கள் உழையுங்கள் – உங்களுக்கான அனைத்து வசதிகளையும் இந்த நாடு வழங்கும்’’ என்று கூறி அவர்களை உற்சாகப் படுத்தினார்.
இதற்குப் பெயர்தான் தன்மான உணர்ச்சி என்பது. அமெரிக்கா வல்லரசு நாடு – அதன் அதிபர் சகல அதிகாரங்களையும் கொண்டவர். கொலம்பியா தென் அமெரிக்காவில் உள்ள வளர்ந்து வரும் ஒரு நாடாகும்.
குடி உரிமையின்றி அமெரிக்காவில் வாழும் மக்களை அமெரிக்கா வெளியேற்றிய முறையை அந்நாட்டு அதிபர் ஏற்க மறுத்ததையும், பதிலடியாக அவர் நடந்து காட்டிய விதத்தையும் பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் சட்ட விரோதமாகக் குடியேறி யவர்கள் என்ற அடிப்படையில் இந்தியர்களை இராணுவ விமானத்தில் ஏற்றி கை கால்களில் விலங்கிட்டு, இந்தியாவில் இறக்கி விட்டதைப் பார்க்கும் போது உலகளவில் இந்தியா தலை தாழ்ந்து நிற்கும் நிலைதான்.
இதில் மற்றொரு தலையிறக்கம் என்னவென்றால் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசியதுதான்.
56 அங்குல மார்பு கொண்டது பற்றி எல்லாம் பேசி என்ன பயன்?
இதே பிரச்சினையில் கொலம்பியா எப்படி நடந்து கொண்டது – இந்தியா எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தியா வல்லரசாகப் போகிறதாம் – எப்படி இருக்கிறது?
இந்தியாவும்கொலம்பியாவும்
Leave a Comment