பூவிருந்தவல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, பிப்.14 பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் நாடு அரசு நேற்று (13.2.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

சுரங்கப்பாதை

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ. நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் ரூ.63,246 கோடி மதிப்பில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, மொத்தம் 42.6 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

வழித்தடம் 3-இல் மாதவரம் – கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் – தரமணி ஆகிய 2 பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித் தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது.

இதனிடையே, ‘அடையாறு’ என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், கடந்த 2023 ஜூன் மாதம் சுரங்கம் தோண்டும் பணியை கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையத் திலிருந்து தொடங்கியது. அடையாறு ஆற்றின் கீழ் சுமார் 40 முதல் 50 அடி ஆழத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு அடையாறு ஆற்றுக்கு கீழ் செல்லும் வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடை யாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் இயந்திரம் நேற்று (13.2.2025) வெளிவந்தது.

இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து பணிகளையும் உரிய காலத்தில் முடிக்க வேண டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, சிறப்பு முயற்சிகள் துறை செயலர் க.கோபால், மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பூவிருந்தவல்லி – போரூர்

மெட்ரோ பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதி வில், ‘இந்த 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூவிருந்தவல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இப்பணிகள் முழுமை யாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகர பொதுப் போக்குவரத்து இணைப்பில் சென்னை புதிய தர அளவுகோல் களை நிர்ணயிக்கும். கோவை, மதுரை நகரங் களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *