உறவுகள் என்பதற்கு வெறும் ‘குருதி உறவுகள்’ மட்டுமே என்ற குறுகிய பொருள் கொண்டு, குடும்பம் என்பதும் அதன் கூட்டுத் தொகையே என்று கருதிடாமல், காலத்தை வென்ற நமது நாகரிகம், பண்பாடு பறை சாற்றும் வழியில் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்!
மானுடப் பரப்பை உறவுக்கு எல்லை என்று கருதி, நடந்து வந்த நமது வரலாற்றில், ‘யாதும் ஊரே – யாவரும் கேளிர் (உறவுகள்) என்ற விரிகடல் போன்ற உறவுகள்பற்றி எண்ணிய பெருமிதம், மானுட சமுத்திரத்தின் அலைஅலையாக என்றும் உள்ளன.
கொள்கை லட்சிய உறவுகள் மிகவும் கெட்டியானவை அல்லவா – ரத்த உறவை விட!
பள்ளி – கல்லூரி மாணவப் பருவ தோழமையும், நட்பும் – பலமான உறவுகளாக – அந்தந்த படிப்பு நிறுவனம்; தனது வகுப்புத் தோழர்களாகவோ அல்லது அந்த கல்விக் கூடத்தில் சம கால படிப்புத் தோழர்களாகவோ இருந்து பழகியவர்களது உறவும் மிகவும் நெகிழ்ச்சிதரும் உறவாகும்!
கொள்கை உறவுகளும், நிறுவனங்கள், தொண்டற பிணைப்பு உறவுகள் எல்லாமும்கூட என்றும் எளிதில் மறக்க முடியாத – மறைந்து போகாத ஏற்றமிகு உறவுகள்! மகிழ்ச்சி ஊற்றுகள்.
இந்த வாரத்தில் அதுபோன்ற கொள்கை உறவுகள் பற்றிய தகவல்களும், கல்விக்கூட நட்பு உறவுகளின் பாசமும் மற்றும் குருதி உறவுகளின் சந்திப்பும் நமக்கு புது உற்சாகம் – ஊக்கத்தையும் தந்து பணிச் சுமைகளின் அழுத்தங்களிலிருந்து ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்‘ என்று நம்மை இளைப்பாற்றிக் கொள்ளப் (Relax) பயன்படுகிறது!
நமது கொள்கை உறவுகளில் என்றும் மறக்க முடியாத நட்புறவாளர்கள் – மகத்தான பகுத்தறிவுப் பெரும் புலவர் மா. நன்னன் அவர்கள் தமிழ் தந்த தகத்தகாய ஒளி – அவர் பகுத்தறிவுக் கதிர்களோடு தனது வாழ்நாளை இலக்கண வரையறை போன்று நடத்திய – எடுத்துக்காட்டானவர்.
அவரது குடும்பத்தினரும் அவரது பகுத்தறிவுக் கொள்கை வழியே பிசிறு தட்டாமல் நடை போட்டுக் கொண்டுள்ளவர்கள்.
அய்யா நன்னன் என்ற ஒப்பீட்டிற்கரிய சுயமரியாதைக் காரரின் வாழ்விணையர் திருமதி பார்வதி அம்மையார் அவர்கள் முதுமை காரணமாக (வயது 95) சற்று உடல் நலம் குன்றிய – தளர்ந்து இருந்த நிலை, அந்த உறவுகளைப் பார்க்க – நலம் விசாரித்து மகிழ நானும், வாழ்விணையர் மோகனாவும், அன்புராஜூவும் சென்றோம். கண்டு உரையாடி மகிழ்ந்தோம்.
புலவர் நன்னன் அய்யா குடும்பச் செல்வங்களான பகுத்தறிவு விழுதுகள் – திருமதி வேண்மாள், அவ்வை எங்களை அன்புடன் வரவேற்றனர். சிறிது நேரம் பேசித் திரும்பினோம்.
வயதின் ‘முதுமை’ தெரியவில்லை பார்வதி அம்மா அவர்களுக்கு; ’முதிர்ச்சி’ தான் பளிச் சென்று தென்பட்டது.
‘‘நல்ல குடும்பம் நன்னன் குடும்பம்; என்றும் மற்றவர்களை நல்வழிப்படுத்தும் பகுத்தறிவுப் பல்கலைக் கழகம்’’ என்பதை உரையாடல் உறவுடனும், உண்மையுடனும் உணர்த்தியது.
நல்ல உணவை சுவைத்துச் சாப்பிடுவதை விட அதிக சுவை, நல்ல கலந்துரையாடலுடன் மகிழ்ந்து திரும்புதலும்!
ஒருவகை புத்துணர்வு ஏற்படுகிறது! மாதம் ஒரு முறையாவது இப்படி பார்த்துப் பழகிட வேண்டிய பழம் பெரும் உறவுகளுடன் கலந்து பேசி, மகிழ்ச்சியில் திளைத்துத் திரும்பும் போது, களைப்பும், சலிப்பும் எங்கோ ஓடி மறைந்து, புதுத் தெம்பு ஏற்படுகிறது.
கைம்மாறு கருதி, எதிர்பார்த்து கைகுலுக்கும் லாப – நட்டக் கணக்கு உறவுகள் வானவில் போன்று தோன்றி, சில மணி நேரத்தில் மறையும்.
இத்தகைய கொள்கை உறவுகளோ, அசைக்க முடியாத வேர் கொண்ட விழுதுகள் தரும் உறவுகளாயிற்றே! உற்சாகம் – இரு தரப்புக்கும் அல்லவா!