அரிய மருத்துவ சாதனை கை மறு இணைப்பு அறுவை சிகிச்சை சென்னை பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

viduthalai
1 Min Read

சென்னை,பிப்.8- மரம் வெட்டும் இயந்திரத்தில் இடதுகை மணிக்கட்டு வெட்டப்பட்ட இளைஞருக்கு 8 மணி நேரம் நடந்த கை மறுஇணைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்தனர்.

அறுவை சிகிச்சை

செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 26). சோழிங்கநல்லூரில் கடந்த 5ஆம் தேதி இயந்திரம் மூலம் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாக இயந்திரம் பட்டதில், அவரது இடதுகை மணிக்கட்டில் ஆழமாக வெட்டப்பட்டது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மணிக்கட்டில் வெட்டுக்காயம் ஆழமாக இருந்தது. ரத்தநாளங்கள் மற்றும் தசைநார்கள் முழுவதுமாக வெட்டப்பட்ட நிலையில், அனைத்து கை விரல்களும் அசைவற்றுக் காணப்பட்டன. மேலும் எக்ஸ்ரே பரிசோதனையில் இடதுகை எலும்பு (ரேடியல்) முறிவு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, மயக்கவியல் துறை மருத்துவர்கள் பாலாஜி, சுபாசினி, ஷெரின், மிருதுளா ஆகியோர் மயக்கம் கொடுத்தனர். தொடர்ந்து, எலும்பு முறிவு அறுவை சிகிச்சைத்துறை மருத்துவர்கள் முத்தழகன், சுஹாஸ் ஷெட்டி, மதன்குமார் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

பின்னர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத்துறை தலைவர் சுகுமார் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஸ்வரி, வளர்மதி, தேவி யுவராஜ், பிரியங்கா, பவித்ரா, அபிநயா கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் வெட்டப்பட்டிருந்த ரத்தநாளங்கள், தசைநார்கள், நரம்புகளை இணைத்து, உயிரற்ற கைவிரல்களுக்கு புத்துயிர் கொடுத்தனர்.

டீன் பாராட்டு: அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் கைவிரல்களின் ரத்த ஓட்டம் சீரானது. 8 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவர் குணமடைந்து வருகிறார். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை மருத்துவமனை டீன் தேரணிராஜன், கணக்காணிப்பாளர் செ.செல்வகுமார், ஆர்எம்ஓ.கள் பி.உமாபதி, கே.அறவாழி ஆகியோர் பாராட்டினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *