அண்ணனே அறிவின் காட்டே!
அருந்தமிழ் பொங்கும் ஊற்றே!
கன்னலின் தேனின் கூட்டாய்க்
காதெலாம் இனித்த பேச்சே!
எண்ணரும் ஈகம் ஏற்றே
இழிவிருள் ஒழித்த கீற்றே!
தென்னவர் உரிமைப் பாட்டே!
திராவிடத் தென்றல் காற்றே!
கண்ணியம் கட்டுப் பாடு
கடமைகள் கற்றுத் தந்த
மன்னனாய் உன்னைப் பெற்றே
மாண்பினை நாங்கள் உற்றோம்!
இன்தமிழ் நாடு கண்டாய்!
இருமொழிக் கொள்கை தந்தாய்
தன்மரி யாதை காத்த
திருமணம் செல்லும் என்றாய்!
பொற்றமிழ் பேசக் கூசும்
போக்கினை மாற்றி வைத்து
நற்றமிழ் நடன மாடும்
நாவினால் நாட்டை வென்றாய்!
பற்றிய நெருப்பை போலே
பாரெலாம் தமிழில் பேசச்
சொற்றிறம் கற்றுத் தந்த
சூத்திரம் நீயே அண்ணா!
சட்டையில் பொத்தான் கூடச்
சரியாக மாட்டா தானாய்க்
கிட்டிய உணவை உண்டு
கீழ்படுத் துறங்கி னாலும்
மட்டிலா மகிழ்வைக் கொண்ட
மாற்றிலா எளிமைத் தங்கம்!
எட்டினாய் இமய உச்சி
எளிமையை இதய முற்றே!
கண்ணிமை இழந்த கண்ணாய்க்
கதிரொளி ஒழிந்த வானாய்ப்
பண்ணொலி மறந்த யாழாய்ப்
பலந்தனைத் துறந்த தோளாய்
இன்தமிழ் மறவர் கூட்டம்
இளைத்ததுன் இழப்பி னாலே!
அண்ணனே விரைந்து நீயும்
அகன்றதேன் எம்மின் கேடாய்?
கொத்தளம் கோட்டை எங்கும்
கொற்றவன் உன்றன் கொள்கை
முத்திரை ஆகத் தங்கும்
முன்வரும் துணையாய் என்றும்!
இத்தரை உள்ள மட்டும்
இன்தமிழ் மறையா மட்டும்
புத்தரைப் போலே நீயும்
புகழுடன் வாழ்வாய் அண்ணா!
– செல்வ மீனாட்சி சுந்தரம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்