மனித மலத்தை அள்ளும் மனித உரிமை மீறல்கள் பக்தி என்ற பெயரில் மிகவும் சாதாரணமாக நடைபெறுகிறது அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்). 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. லட்சக்கணகான மக்கள் ஒன்றுகூடும் இந்த பகுதியில் மனித உரிமை மீறல்கள் தாரளமாக நடந்து வருகிறது.
குறிப்பாக இத்தனை லட்சம் மக்கள்கூடும் இடத்தில் அவர்கள் கழிக்கும் மலத்தை அள்ளுவதற்கு அரியானா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து 6000 தூய்மைப் பணியாளர்களை அழைத்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வால்மிகீ என்ற சமூகத்தினரை மட்டுமே இதில் ஈடுபடவேண்டும் என்று கூறி குறிப்பாக அலகாபாத் பகுதியில் கூடும் மக்கள் கழிக்கும் அசிங்கங்களை அள்ள மட்டுமே குறிபிட்ட சமூகத்தினரை இந்த தொழில் என்று சொல்லி அழைத்து வந்துள்ளனர்.
குறிப்பாக வேலையில்லாமல் இருக்கிறோமே என்று கூறி வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏற்கெனவே தூய்மைப் பணியைச் செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை தேர்ந்தெடுக்காமல் தலைமுறை தலைமுறையாக மலம் அள்ளும் தொழிலைச் செய்து வரும் சமூகத்தினரையே பொறுக்கி எடுத்து வேலையில் ஈடுபடவைத்த கொடூரம் நடந்து வருகிறது
கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடல் செய்கின்றனர். ஓய்வெடுக்க ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாதுக்களுக்கு தனி கூடாரங்கள் உள்ளன. சங்கராச்சாரியார் மற்றும் பார்ப்பன சாதுக்களுக்கும், பார்ப்பன மற்றும் உயர்ஜாதி முக்கிய நபர்களுக்கும் அதிநவீன வசதிகள் கொண்ட கூடார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மொத்தம் ஒரு லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதில் உயர்ஜாதியினர் மட்டுமே பயன்படுத்த தனிப்பட்ட சிறப்பு கழிப்பறைகள், இதர ஜாதியினர் பயன்படுத்த ஏற்கனவே பல பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக கழிப்பறைகளை இங்கே கொண்டு வந்து வைத்துள்ளனர்.
சூத்திர ஜாதியினருக்கு என்று பொதுவெளியில் பழைய தகரங்களைக் கொண்டு மறைப்பு ஏற்படுத்தி கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்ய, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த 6,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுரேஷ் வால்மீகி என்ற துப்புரவு பணியாளர் கூறுகையில், “நான் சுத்தம் செய்கிறேன், ஆனால் மக்கள் 10 நிமிடங்களில் மீண்டும் அசுத்தப்படுத்துகிறார்கள்” என்றார். நான் ஒரு கழிப்பறை குழியில் உள்ள கழிவுகளை (தற்காலிக செப்டிக் டேங்க்) மண்வெட்டி கொண்டு அள்ளி அதனை வண்டியில் ஏற்றிவிட்டு வந்து கைகளை தூய்மைப்படுத்தி விட்டு சாப்பிட அமருவேன், சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே உடனடியாக விசில் சத்தம் கேட்கும், சாப்பாட்டை பாதியில் விட்டுவிட்டு மீண்டும் கழிவுகளை அள்ள ஓடவேண்டி உள்ளது என்று வேதனையில் கூறுகிறார்.
கீதா வால்மீகி கூறுகையில், நான் அரியானா உத்தரப்பிரதேச எல்லை நகரத்தில் இருந்து மேளாவில் பணிபுரிய வருவதாகவும், கழிப்பறை சுத்தம் செய்வதற்கு ஒரு நாளைக்கு ரூ.350 கிடைப்பதாகவும் தெரிவித்தார். அதிலும் 50 ரூபாய் சூப்பர் வைசருக்கு கொடுக்கவேண்டும் என்றார்.
ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் வம்சத்தவர்கள் மலம் அள்ளும் சமூகத்தினர் என்றால், அவர்களுக்கும் அர்ச்சகர், சங்கராச்சாரி உதவியாளர்கள், குறைந்தபட்சம் ராமாயண உபாசகர்கள் மற்றும் கும்பமேளாவில் கொடுக்கப்படும் சிறப்பு பட்டமான மண்டலேஸ்வரர் ஆகும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஆனால் கைகளால் மலம் அள்ள மட்டுமே அவர்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து இங்கே அழைத்துக் கொண்டு வந்துள்ளது மிகவும் கொடூரமான மனித நேயமில்லா நடவடிக்கை ஆகும்.