தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையா?

Viduthalai
3 Min Read

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர் ஒருவருக்குக்கூட பாதிப்பு ஏற்படாது’ என்று வீரம் பேசிய திரு.நரேந்திரமோடியின் ஆட்சியில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் அன்றாட வானிலை செய்தி போல் வெளி வருகிறது.
பாஜக ஆட்சியில் 2014 – 2024 காலத்தில் 3137 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். 2004 – 2013 காலத்தில் 2915 பேரும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003 காலப் பகுதியில் 606 பேரும் சிறைப் பிடிக்கப்பட்டனர். 2022, 2023, 2024 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய மீனவர்கள் மீது 13 தாக்குதல்களை அண்டை நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள்ளன. இலங்கை சிறைகளில் விடுவிக்கப்படாமல் தற்போது இருப்பவர்கள் 266 பேர்!
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட பாஜக ஆட்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் சில இதோ:

6.03.2017 : தங்கச்சிமடத்தை சேர்ந்த தாசன் என்பவரின் மகன் டிட்டோ (29) என்பவரின் படகில் ஜான் பிரிட்டோ, செரோன், பிரட்ஜோ, கிளிண்டன், அந்தோணி, சந்தியாகு ஆகிய 6 பேரும் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கழுத்தில் குண்டடிபட்ட பிரிட்ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செரோனுக்கு கையிலும், இடுப்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது

25.06.2021 : பாம்பனைச் சேர்ந்த லிம்பர்ட் மற்றும் காலின்ஸ், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிருபை ஆகியோருக்குச் சொந்தமான மூன்று படகுகள்மீது இலங்கைக் கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மீன் பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் அதிகமான மீனவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள் வதற்காக காயங்களோடு அங்கிருந்து பாம்பன் நோக்கி விரைந்தனர்.

02.08.2021 : கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.

21.10.2022 : கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் மரண மடைந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.

27.2.2023 : காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படை கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

10.12.2023 : நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 25 மீனவர்கள், இரண்டு விசைப் படகு களோடு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
2024ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 530 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 71 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டன

01.08.2024: மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்களின் படகினை இலங்கைக் கடற்படை யினர் தங்கள் ரோந்துப் படகின் மூலம் மோதி மூழ்கடித்தனர். இதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரைக் காணவில்லை. இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட இரு மீனவர்களை மீட்கக்கோரி மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

24.12.2024 : ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இலங்கையின் புதிய அதிபர் இந்தியா வந்து சென்ற பின்னரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்வதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

28.01.2025 அன்று நள்ளிரவு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர் கோடியக்கரைக்கு தென் கிழக்கே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி 13 மீனவர்களையும் கைது செய்தனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களுக்கு யாழ்ப்பாண மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது பிடிபட்ட மற்ற மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டனர்.

தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து, ஒன்றிய பிஜேபி அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை.
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அயல்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி னாலும், எந்த செயல்பாடும் ஒன்றிய அரசின் சார்பில் எடுக்கப்படுவதில்லை.
கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து இதற்கொரு முடிவைக் காண வேண்டியது கட்டாய கடமையாகும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *