சென்னை,ஜன.29- மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்பு கொடையால், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்தபோதும், மூளைச்சாவு அடைந்தார்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசுந்தரி (52), என்பவர் அதிகபடியான வியர்வை வெளியேறுதல், நினைவின்மை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் மூளை தசையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்பட்டு, நினைவற்ற தன்மையில் இருப்பது கண்டறியப்பட்டது. அவரும், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
இவர்களின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க, இருவரின் குடும்பத்தினரும் முன்வந்தனர். இதையடுத்து, நான்கு சிறுநீரகங்கள், இரண்டு கல்லீரல்கள், இரண்டு கணையங்கள், இதய வால்வுகள், ஒரு சிறுகுடல், வயிற்றுப்பகுதி, நான்கு கண்விழிப்படலங்கள் எடுக்கப்பட்டன.
இதில், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கல்லீரல்கள், இரண்டு கண் விழிப்படலம் ஆகியவை, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆறு பேருக்கு பொருத்தப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ராமச்சந்திரா மருத்துவமனையின் உறுப்பு மாற்றுத்துறை பேராசிரியர் நடராஜன் கூறியதாவது:
மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டு மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடம் இருந்து உடல் உறுப்புகளை கொடையாக பெற்று, ஆறு பேருக்கு பொருத்தியுள்ளோம்.
இப்பணியில், 30 மூத்த மருத்துவர்கள்; 30 இளைய மருத்துவர்கள் இணைந்து பணியாற்றினர்.
இதனால், இயல்பாக நடக்கும் அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை. இதில் ஆறு பேர் பயனடைந்த நிலையில், மற்ற உறுப்புகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.