தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்று சாதனைகள் விளக்கம்!!
திண்டுக்கல், ஜன.28 தந்தை பெரியார் 51 வது நினைவு நாள், தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தும், ‘திராவிட மாடல்‘ அரசின் வரலாற்று சாதனைகளை விளக்கி 24.01.2025 அன்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டருகே திராவிடர் கழகம் சார்பில் எழுச்சிமிகு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு. ஆனந்த முனிராசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் த.கருணாநிதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மயிலை. நா.கிருஷ்ணன், மாவட்ட துணைச் செய லாளர் இரா.ஜெயபிரகாஷ், மாநகர தலை வர் அ.மாணிக்கம், மாவட்ட இளை ஞரணி தலைவர் இரா.சக்தி சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.வல்லரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வைக்கம் போராட்டம் குறித்து…
பழனி மாவட்ட செயலாளர் பொன்.அருண்குமார், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் உரையினை தொடர்ந்து, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் R.சச்சிதானந்தம் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் குறித்து உரையாற்றினார்.
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு
பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளருமான I.P.செந்தில் குமார், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம் 10) நூலினை வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் R. சச்சிதானந்தம், கழகத் துணைப் பொதுசெயலாளர் சே.மெ.மதிவதனி, திண்டுக்கல் மாநகராட்சி மேயரும், திமுக மாநகர துணை செயலா ளருமான இளமதி ஜோதி பிரகாஷ், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேய ரும், திமுக மாநகர செயலாளருமான
ச. ராஜப்பா, திமுக மாவட்ட அவைத்தலைவர் மூ.காமாட்சி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.நாகராசன், பிலால் உசேன், மார்க்ரேட் மேரி, மாவட்டமாணவரணி அமைப்பாளர் கி.பிரபாகரன், மாநகராட்சி வடக்கு பகுதிச் செயலாளர் ஆனந்த ஜோதி, கிழக்கு பகுதிச் செயலாளர் ராஜேந்திர குமார் மற்றும் தோழர்கள் 25 புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.
‘‘அண்ணா மறைந்தார், அண்ணா வாழ்க!’’
அவரது உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட இந்த நூல் பல்வேறு தகவல்களை கொண்டுள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நூல்களைப் படிக்கும் போது, ஆசிரியர் அவர்கள் உரையாற்றுவது போல் இருக்கும். பேரறிஞர் அண்ணா மறைவுற்றபோது பெரியார் அவர்கள் அண்ணாவிற்கு இரங்கல் தெரிவித்து ‘‘அண்ணா மறைந்தார், அண்ணா வாழ்க’’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டார்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் தமிழக முதலமைச்சர் தளபதி ஆகியோர் தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள்.
நாங்கள் பயணிக்கும் பாதையை தீர்மானிப்பது பெரியார் திடல் தான் என்று பிரகடனப்படுத்தினார். கலைஞர் அவர்கள் எட்டாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நமது முதலமைச்சர் கல்லூரி வரை படிப்பதற்கு சிரமப்படக்கூடாது என்று மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறார் என்று கூறி ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை விளக்கி உரை யாற்றினார்.
கழகத் துணைப் பொதுச் செயலா ளர் சே.மெ.மதிவதனி தனது உரை யில், பல்வேறு கட்டங்களாக நடை பெற்ற வைக்கம் போராட்டத்தில், போராட்டக்காரர்களால் வெற்றி பெற முடியவில்லை. தந்தை பெரியார் அவர்க ளுக்குக் கடிதம் எழுதுகின்றனர் .
கடிதத்தைப் படித்த தந்தை பெரியார் அவர்கள் மொழி தெரியாத மக்களை சந்திக்க கேரளா செல்கிறார். அங்கு சென்றவுடன், மன்னர் தந்தை பெரியாரிடம் பேசி திருப்பி அனுப்பி விடலாம் என்று கருதுகிறார். ஏனென்றால் மன்னர் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தந்தை பெரியார் வீட்டில் தான் தங்குவார்கள். அவ்வளவு வசதி படைத்தவர் தந்தை பெரியார்.
இது பெரியார் மண்
1928 இல் வருமான வரி செலுத்திய குடும்பம். வைக்கம் போராட்டத்தில் வெற்றி பெற்றவர் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் 3000 பேர் கைதாகிறார்கள். அதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் வட மாநிலங்கள் கலவர பூமியாக உள்ளது. ஆனால், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். இங்கு தி.மு.க சார்பில் வருகை தந்த தோழர்களில் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் எந்த வித சண்டை சச்சரவுகள் இல்லை. காரணம் இது பெரியார் மண் என்பதால் தான் என்று பல்வேறு செய்திகளை எடுத்துக்காட்டி சிறப்புரையாற்றினார்.
நிறைவாக மாநகர செயலாளர் தி.க. செல்வம் நன்றி கூறினார்.
வேடசந்தூர் ஆ.ராமகிருஷ்ணன், பழனி சு.அழகர்சாமி, த.பாக்கியராசு, கோ.சரவணன், காஞ்சிதுரை, ச.பொன்ராஜ், V.ராமசாமி, ராஜ்குமார், பொ.நாகலட்சுமி, பொ.சித்தார்த்தன், க. நரசிங்கன், க.சதாசிவன்,K.G.S ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்களும், திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.