கருஞ்சட்டை
கேள்வி: புனித நதிகளில் நீராடாமல் தலையில் மட்டும் தண்ணீர் எடுத்துத் தெளித்தல் சரியானதா?
பதில்: நமது ஹிந்து மதத்தில் எதுவுமே கட்டாய மில்லை. இயலாதவர்கள், முதியவர்கள், நோயாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதனாலேயே நீராடிய திருப்தியை அடைவதற்காக அவ்வாறு செய்கிறார்கள்.
– ‘விஜயபாரதம்‘
(ஆர்.எஸ்.எஸ். வார இதழ்)
ஆகா, அருமையான பதில்; வசமாக மாட்டிக் கொண்டுவிட்டார்கள். ஹிந்து மதத்தில் எதுவும் கட்டாயம் இல்லையாம்.
ஹிந்து மதத்தில் வேதங்கள், உபநிஷத்துகள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள், ஆக மங்கள் இத்தியாதி, இத்தியாதி சமாச்சாரங்களில் கூறப்பட்டிருப்பதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், ஹிந்து மதத்தில் எதுவும்தான் கட்டாயமில்லையே!
பார்ப்பனர்களுக்கு எது எதுவெல்லாம் வசதியாக இருக்கிறதோ, அதற்கேற்றபடி ஏற்கலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம், அப்படித்தானே!
சில கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் செல்லவேண்டும் என்பது எல்லாம்கூட இனிக் கட்டாயமில்லை என்று அடுத்துவரும் ஆர்.எஸ்.எஸ். இதழில் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஒரு சேதி தெரியுமா?
மகாமகம், கும்பமேளா என்பவை எல்லாம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் என்பதுதானே அவாள் எழுதி வைத்த சாத்திரம்!
ஆனால், காஞ்சி சங்கராச்சாரியாருக்காக கும்ப கோணம் மகாமகம் நடக்கவேண்டிய ஆண்டையே மாற்றியமைத்தது தெரியுமா?
இதுபற்றி திருவத்திபுரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் குட்டை உடைத்ததுண்டு (25.1.1956).
‘‘12 வருடத்துக்கு ஒருமுறை ஈசன் தண்ணீர் விடுவதாகக் கூறியபடி 12 வருடத்திற்கு ஒருமுறை மகாமகம் வருகிறது.முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத்துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.
ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது – இதன் காரணம் சங்கராச்சாரிக்கு இப்போது உடல்நிலை சரியில்லையாம்; அவர் அடுத்த வருடம் வரை உயிருடன் இருப்பாரோ, இருக்கமாட்டாரோ? என்ற சந்தேகத்தின்மீது, அவர் இப்போது இருக்கும்போதே கொண்டாடிட வேண்டும் என்பதற்காக, அடுத்த வருடம் கொண்டாட வேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார்களாம்.
இதன்படி ஈசன் இப்போது சங்கராச்சாரிக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார் என்று ஆகிறது. இப்படி பார்ப்பான் மனது வைத்தால், ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படியானால், கடவுளும், வெங்காயமும் எங்கே போனதோ தெரியவில்லை.‘‘ (‘விடுதலை‘, 6.2.1956) என்று பார்ப்பனப் புரட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார் தந்தை பெரியார்.
இந்த வகையில் ஹிந்து மதத்தில் எதுவும் கட்டாயமில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இதழ் ‘விஜயபாரதம்‘ எழுதியது சரிதானே!