சென்னை,ஜன.28- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இலக்கு நேற்று (27.1.2025) எட்டப் பட்டது.
எளிதாகப்
புரிந்து கொள்ள…
புத்தகங்கள், கரும் பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல்- கற்பித்தல் நிகழ்வின் ஓா் உச்சமாக உரைகள், படங்கள், ஒலி மற்றும் ஒளி போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று மாணவா்கள் பாடப் பொருள்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை அமைக்கும் பணி தமிழ்நாடு அரசின் சாா்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.
இதையடுத்து முதல்கட்டமாக அரியலூா், கடலூா், நாகப்பட்டினம், சேலம், திருவாரூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 493 அரசு தொடக்கப் பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களில் இந்த பணியை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 22,931-ஆவது திறன்மிகு வகுப்பறையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி நேற்று (27.1.2025) நிறுவினாா்.
இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு ரூ.455.32 கோடி. இதன் மூலம் 11.76 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்.
இதேபோன்று அரசுப் பள்ளிகளில் 8,209 உயா் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ. 519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான பணிகளும் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
இவ்விரு திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 43 லட்சத்து 89,382 மாணவா்கள் பயன்பெறுவா்.
இதற்கான நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெருமையின் அடையாளம்
‘அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்’ என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.
அந்தப் பணி சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவு பெற்றதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னிடம் தெரிவித்தாா்.
நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயா்கல்வி நிறுவனங்களில் நமது மாணவா்கள் இடம்பெற உதவும் மாதிரிப் பள்ளிகள் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்.
அரசுப் பள்ளிகள் நமது பெருமையின் அடையாளம் என்பதை உரக்கச் சொல்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.