ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜன.27- ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை தனுஷ் கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தது.
இந்த நிலையில், கைது செய்யப் பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடு வித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (26.01.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது; 25.01.2025 அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை (தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள்) தனுஷ்கோடி அருகே அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பதற்றம்
இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதோடு அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது. எனவே நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.
எனவே, இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.