அரைவேக்காடுகளுக்கல்ல – உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு!

Viduthalai
7 Min Read

திராவிடர் கழகத் தலைவருக்கும் மாவீரன் பிரபாகரனுக்கும்
இடையிலான நெருக்கமும் – கருத்துப் பரிமாற்றமும்

திராவிடர் கழகத்திற்கும். தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனுக்கு மிடையிலான நெருக்கமும் பரிமாற்றமும் குறித்து 2014இல் “ஆனந்த விகடன்” மேடையில் வெளிவந்த கட்டுரை – இன்றைய அவதூறு பேர்வழிகளுக்கும், குழப்பவாதிகளுக்கும் தக்க பதிலடியாகும்.

வாசகர் கேள்விகள்
கி.வீரமணி பதில்கள்
”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?”
– கா.சரவணன், உடன்குடி.
”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பி களான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்றவர்களிடம் கலந்து கருத்து அறியத் தவற மாட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.
1986ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சார்க்’ மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்சினை தொடர்பாக சுமூகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பினார். தன் விருப்பத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடமும் தெரிவித்து, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டார் ராஜீவ். எம்.ஜி.ஆர் தமது உளவுத் துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு முழுக்கத் தேடியும் பிரபாகரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது உடல் நலம் சரியில்லாமல் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கே வந்து தமிழ்நாடு காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர், என்னைச் சந்தித்தார். ”எப்படியாவது பிரபாகரனை பெங்களூருக்கு அனுப்பி, ஜெயவர்த்தனேவைச் சந்திக்கச் செய்யுங்கள்’ என்று முதலமைச்சர் உங்களிடம் தகவல் சொல்லச் சொன்னார்’ என்றார். அந்த அதிகாரிக்கு எங்களைப் பற்றி தெரியும். அப்போது பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று உண்மையாகவே எனக்குத் தெரியாது. ‘தகவல் அனுப்ப முடிந்தால், அவசியம் சொல்லி அவரை பெங்களூருக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்’ என்றேன்.

ஆச்சர்யமாக, அதே நாளில் எனது உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு திடீரென்று வந்து நின்றார் தம்பி பிரபாகரன்! என்னால் நம்பவே முடியவில்லை. பிரபாகரனிடம் எம்.ஜி.ஆரின் ஆலோசனையைப் பற்றி சொல்லி, அவரை பெங்களூருக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதில் ஆர்வம் காட்டவே இல்லை. ஆனால் ‘நீங்கள் செல்லாவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு நல்விளைவு ஏற்படுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்கிற பேச்சு உருவாகும்’ என்றெல்லாம் அவரைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். இறுதியில், ‘அந்தச் சந்திப்பினால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உங்களைப் போன்றவர்கள் சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்’ என்றார். அவரது கணிப்புதான் பிறகு சரி என்று ஆனது!

பின்னர், புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளை தமிழ்நாடு அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்து பட்டினிப் போர் இருந்தார் பிரபாகரன். ‘பட்டினிப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் போராடுங்கள்’ என்று அறிக்கை விடுத்தேன். அதை ஏற்று பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள முன்வந்தனர் புலிகள். சென்னை இந்திரா நகரில் நடந்த பட்டினிப் போராட்டத்தைப் பழரசம் கொடுத்து நாங்கள் முடித்துவைத்தோம். ஆயுதங்களையும் திரும்பத் தரும் நிலை உடன் வந்தது.
புலிகள் இயக்கத்தின் தளபதி கிட்டு ஆற்றலும் அறிவும் பண்பும் நிறைந்தவர். ஆன்டன் பாலசிங்கமும் எங்களிடம் பல நேரங்களில் அறிவார்ந்த ஆலோசனைகளைப் பெறுவார். பேபி (சுப்பிரமணியம்), எப்போதும் அன்புடன் பழகிய அதிகம் பேசாத தம்பியின் தளகர்த்தர். இப்படி பலரும் அன்புடன் பழகியவர்கள். இதையெல்லாம் நினைவுகூர்ந்து எழுதும்போது என்னை அறியாமல் கண்கள் பனிக்கின்றன!”

– – – – –

”நீங்களும் சரி, கலைஞரும் சரி, உங்களைப் பற்றி விமர்சித்தால், ‘பார்ப்பனப் பத்திரிகை’ என்று சாடுகிறீர்கள். ஆனால், உங்களுக்குச் சாதகமான செய்திகள் அதே பத்திரிகைகளில் வந்தால், தவறாமல் அவற்றை மேற்கோள் காட்டுகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?”
– கி.முருகேசபாண்டியன், சேத்தியாத்தோப்பு.
”அது ஒன்றும் தவறு அல்லவே! பார்ப்பன ஏட்டை, ‘பார்ப்பனப் பத்திரிகை’ என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? எதிரிகளே நம் கருத்துகளை ஏற்கும்போது அதைச் சுட்டிக்காட்டி, ‘நியாயங்கள் எப்போதும் தோற்காது’ என்று நிறுவுவது எப்படித் தவறாகும்?”

– – – – –

”தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம், தேவை இல்லாமல் அரசியல் கட்சிகளோடு அய்க்கியமாகி இருப்பதும், தேர்தல் பிரச்சாரம் செய்வதும் அவசியமா?”
– அழகுமணி, தர்மபுரி.
”தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம், அரசியல் கட்சிகளோடு அய்க்கியமாகி இருக்கிறது என்பது சரியான பார்வை அல்ல. எங்கள் தனித்தன்மையை எப்போதும், எதிலும் காப்பாற்றியே இருக்கிறோம்.
தந்தை பெரியார் இறந்த பிறகு அவரது உடல் ராஜாஜி மண்டபத்தில் கிடத்திவைக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில் என்னிடம் செய்தியாளர்கள், ‘ஒரே ஒரு கேள்வி’ என்று துளைத்தனர். ‘தி.க. இனி இருக்காது; தி.மு.க-வில் இணையும் என்று கூறுகிறார்களே… அதுபற்றி உங்கள் பதில்?’ என்று கேட்டனர்.
அதற்கு நான், ‘தி.க. ஒருபோதும் கலையாது; எந்தக் கட்சியுடனும் இணையாது. அதனுடைய தனித்தன்மையோடு இயங்கும்’ என்றேன். அதே நிலைதான் இன்றும்; இனி என்றும்.
தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வது என்பது, தந்தை பெரியார் காலம்தொட்டுச் செய்யப்படுவதே தவிர புதிது அல்ல. காரணம், ‘ராமன் ஆண்டால் என்ன… ராவணன் ஆண்டால் என்ன?’ என்று எங்களால் இருக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை ‘சூத்திரச் சம்பூகன் தலையை வெட்டிய ராம ராஜ்ஜியத்தை மக்கள் ஆதரிக்கக் கூடாது. சீதையைப் பத்திரமாகக் காவலில் வைத்த ராவணனின் ஆட்சியைப் போன்றது வர வேண்டும்’ என்பதை மக்களுக்குக் கூறுவோம்!”

– – – – –

”அட, தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு மேல் கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு இருப்பது போரடிக்கவில்லையா? மற்ற நிற ஆடைகள் அணியத் தோன்றியதே இல்லையா?”
– பாலமுருகன், எழும்பூர்.
”தொடர்ந்து மூச்சுவிட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதால், அது போரடித்துவிடுமா என்ன? நிறத்தை விரும்பி நான் கறுப்புச் சட்டை அணிந்திருந்தால், ஒருவேளை போரடித்து இருக்கும். ஆனால் கொள்கைக்காக, லட்சியத்துக்காக அணிந்துள்ளபோது எப்படி அலுக்கும் நண்பரே? வீட்டில் உள்ளபோது சில நேரங்களில் வெள்ளை நிறச் சட்டை அணிவதும் உண்டு. மருத்துவப் பரிசோதனை சமயங்களில் கட்டா யப்படுத்தி வேறு நிற ஆடைகளை அணிவிப்பார்கள்!”

– – – – –

”தற்போதைய நிலையில் திராவிட இயக்கங்களின் சாதனைகள், வேதனைகள்… என்னென்ன?”
– குமரன் வளவன், சிங்கப்பூர்.
”திராவிட இயக்கங்கள் இல்லையெனில் தன்மான (சுயமரியாதை) உணர்வு மக்களுக்கு வந்திருக்குமா, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் உரிமையின் காற்றைச் சுவாசித்திருப்பார்களா, கல்வி, வேலைவாய்ப்புகளில் பரவலாக ஒடுக்கப்பட்ட மக்கள், வாய்ப்புகளைப் பெற்றிருப்பார்களா, தமிழ் உணர்வு- இன உணர்வு போன்றவை வெடித்துக் கிளம்பியிருக்குமா, இல்லை தமிழன் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகள் முறியடிக்கப்பட்டிருக்குமா, பெண் உரிமை சமத்துவம் வந்திருக்குமா, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை மீட்புகள் நடந்திருக்குமா? இப்படி இன்னும் சாதனைகளை ஏகமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.
வேதனைகள், இல்லாமல் இல்லை! பதவி காரணமாகப் போட்டிகளும் கட்டுப்பாடற்ற தன்மையும் தலையெடுத்தது முக்கியமானது. ஒருவருக்கொருவர் பொதுவாக உறவாடும் பண்புகூட இல்லாமல்போய்விட்டதே. துக்க வீட்டில்கூட ஒன்றாக அமர்ந்து பேசத் தயங்கும் நிலையே இன்று உள்ளது. தனிமனித விமர்சனங்களுக்கு இடம் தந்தது சகிக்கமுடியாத இன்னொரு விஷயம்!”

– – – – –

”அரசியல் கட்சிகள்தான் பிளவுபடுகின்றன என்றால், திராவிடர் கழகம் போன்ற சமுதாய இயக்கங்களும் பிளவுபடுகின்றனவே… என்ன காரணம்?”
– செந்தமிழ்ச் செல்வன், சேலம்.
”’திராவிடர் கழகம்’ பிளவுபடவில்லை. சிலர் வெளியேற்றப்பட்டவர்கள். வெளியேறியவர்கள் என்பதால் சில அணிகள் உள்ளன… அவ்வளவுதான். கட்டுப்பாடு காக்கும் சமூகப் புரட்சி இயக்கங் களில் இந்த நிலை தவிர்க்க இயலாத ஒன்றே. களைகளையும் பயிர்களையும் உழவன் ஒன்றாகக் கருதிட முடியுமா?”

– – – – –

”சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தில் குஞ்சிதம் குருசாமி, மூவலூர் ராமாமிர்தம், நீலாம்பிகை, நீலாவதி, மீனாம்பாள் சிவராஜ், பினாங்கு ஜானகி… என ஏராளமான பெண்கள் இருந்தனர். ஆனால், இப்போது உங்கள் இயக்கத்தில் மட்டும் அல்ல, பொதுவாகவே சமூக மாற்றத்துக் கான எந்த அமைப்புகளிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறதே… ஏன்?”
– பிரபாகரன் சேரன், பழநி.
”எனக்கு அப்படித் தோன்றவில்லையே! அன்றைக்கு உள்ளதுபோலவே இன்றும் ஏராளமான மகளிர், சமூக மாற்றத்துக்கு தங்களின் சேவையை அளிக்கத் தவறுவது இல்லை!
அன்றைய காலகட்டத்தில், மகளிர் பொதுவெளியில் வந்து சேவை ஆற்றுவது வியப்புடன் பார்க்கப்பட்டது. ‘திராவிடர் கழகம்’ என்ற சமூகப் புரட்சி இயக்கத்துக்கே தலைமை தாங்கி, வழிநடத்தி, ராவண லீலா நடத்தி, இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தவர் அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார். எங்கள் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் ஒரு நூலே எழுதி வெளியிட்டுள்ளாரே! திராவிடர் கழகத்தில்தானே பொருளாளர் என்ற முக்கியப் பொறுப்பில் ஒரு பெண் (மருத்துவர் பிறைநுதல் செல்வி) பொறுப்பு வகித்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
இப்போதும் பல்வேறு இயக்கங்களில் மகளிர் பங்களிப்புகள் அபரிமிதமாகவே இருக்கின்றன. ஆனால், ஊடகங்களில் அவை குறித்து விளம்பரம் போதிய அளவில் கிடைப்பது இல்லை… அவ்வளவு தான்!”

– – – – –

”சமூக நீதிக்காகப் போராடும் இயக்கங்கள், ஜாதிக் கொடுமைகளுக்கு, கவுரவக் கொலைகளுக்கு, மனிதனே மனிதக் கழிவை அகற்றுவதற்கு எதிராகப் போராடாமல் இருப்பது ஏன்?”
– கே.சுந்தரமூர்த்தி, அரவக்குறிச்சி.
”’கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதிக்கு முட்டுக்கொடுக்கும் முயற்சி நம் சமூகத்தின் சாபக்கேடு; மனிதக் கழிவை மனிதனே சுமப்பது தேசிய அவமானம். மனிதனே மனிதக் கழிவைச் சுமப்பதை எதிர்க்கும், கவுரவக் கொலையைத் தடுக்கும் அறப்போராட்டத்துக்குத் தலைமை ஏற்று ஒருமித்த கருத்துள்ளவர்களை இணைத்து திராவிடர் கழகம் போராடும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளோம். இதற்கெல்லாம் அடிப்படை, ஜாதி. அதை ஒழிக்கும் அடிப்படைப் பணிகளைப் பல வகைகளில் செய்துகொண்டுதான் இருக்கிறோம்!”

– நன்றி: ‘ஆனந்த விடகன் மேடை‘ (8.9.2014)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *