கோவை, ஜன.25- மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் இருப்பதாக அய்.அய்.டி இயக்குநர் கூறிய நிலையில், கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பில் அய்.அய்.டி இயக்குநர் காமக்கோடிக்கு அஞ்சலில் மாட்டு கோமியம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் உள்ளன என அய்.அய்.டி இயக்குநர் காமகோடி கூறி இருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அவருக்கு ஆதரவாக பா.ஜ.க வின் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
போராட்டம்
இந்த நிலையில், கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பில் அய்.அய்.டி இயக்குநர் காமகோடிக்கு அஞ்சலில் மூலம் மாட்டு கோமியம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள அஞ்சல் நிலையத்தில் பார்சலில் மாட்டு கோமியத்தை கொண்டு வந்த திராவிட தமிழர் கட்சியினர் அஞ்சல் நிலைய ஊழியர்களிடம் கொடுத்து பார்சல் அனுப்ப வேண்டும் என கூறினர்.
அதற்கு திரவ பொருட்களை பார்சலில் அனுப்ப முடியாது எனவும் கிருமிகள் பரவும் எனவும் கூறி அஞ்சல் ஊழியர் பார்சலை பெற மறுத்தார்.
ஆனால் பார்சலை அனுப்ப அனுமதி தர வேண்டும் என திராவிட தமிழ் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுமதி பெற்ற அஞ்சல் ஊழியர்கள் பார்சலை பெற்றுக் கொண்டனர்.
மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் உள்ளன என அய்.அய்.டி இயக்குநர் கூறியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அஞ்சல் நிலைய ஊழியர்கள் கிருமிகள் பரவும் எனக் கூறி மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதன் இடையே அய்.அய்.டி இயக்குநருக்கு ஆதரவாக பேசியதாக வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு மாட்டு கோமியத்துடன் விருப்பப்பட்டால் மாட்டுக் கறியையும் அனுப்புவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.