செய்திச் சுருக்கம்

viduthalai
3 Min Read

கூவம் ஆற்றில் கட்டட கழிவுகள் – தடுக்க உத்தரவு

சென்னையில் பருவமழைக் காலங்களில் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க கூவம் ஆற்றில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். கழிவுகள் கொட்டப்படாமல் இருப்பதை நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும். கூவம் ஆற்று பகுதியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தொழில் முனைவோருக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், 3 நாள்கள், தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி வரும் ஜன5ரி 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திலும், 86681 02600, 70101 43022 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவக் கல்லூரி விதிமுறைகளில் தளர்வு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கு தேவையான தகுதிக்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் தளர்த்தியுள்ளது. இது தொடர்பான வரைவை வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துகளையும் தேசிய மருத்துவ ஆணையம் கோரியுள்ளது.

திருநங்கைகளுக்கு நல்வாழ்வு வாரியம்

திருநங்கைகளுக்கு நல்வாழ்வு வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இருக்கும் மாநிலங்கள் அனைத்தும் அடுத்த மூன்று வாரத்தில் தங்களது நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒரு மாநிலத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டில் ஆகியோர் இது தொடர்பான வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

தமிழ்நாட்டில் பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் (ஆர்பிஎஸ்கே) கீழ் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் 4.60 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், பதின் பருவத்தினருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் 15ஆவது காலாண்டு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். தகுதியுடைய நபர்கள் இதற்கான விண்ணப்பப் படிவங்களை https://chennai.nic.in எனும் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து ஒளிப்படம் மற்றும் சுயக் கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 5.45க்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.1, புதுத்தெரு, ஜிசிசி வணிக வளாகம் முதல் மாடி, ஆலந்தூர், சென்னை- 600016 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுநர்களை சிறப்பிக்க அறிவுறுத்தல்

ஜனவரி 24ஆம் தேதி உலகெங்கும் ஓட்டுநர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வேளையில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் அச்சாணியாகத் திகழும் ஓட்டுநர்களின் பங்களிப்பைப் பாராட்டி, ‘பாதுகாப்பாகப் பேருந்தை இயக்கியதற்கு நன்றி’ என தெரிவித்து அவர்களுக்கு பூங்கொத்து வழங்க வேண்டும். மேலும், ‘பாதுகாப்பாக பேருந்தை இயக்க உற்ற துணையாக இருந்ததற்கு நன்றி’ என நடத்துநரிடமும் தெரிவித்து, அவர்களுக்கு பேனாவை பரிசளித்து சிறப்பிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை சார்பில் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *