விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது தொடர் கதையா?

Viduthalai
2 Min Read

பஞ்சாப்-அரியானா எல்லையில் 50 நாள்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) 19.1.2025 அன்று மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து, அவருக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 121 விவசாயிகளும் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை அன்றே முடித்துக்கொண்டனர்.
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டில்லியை நோக்கி அவர்கள் மேற்கொண்ட பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப்-அரியானா எல்லையான கநவுரி பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு நவம்பர் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் தல்லேவால் ஈடுபட்டு வந்தார். அவரை மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதி நவாப் சிங் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் அமைத்து உத்தரவிட்டார். இந்தக் குழு தல்லேவாலை கடந்த ஜனவரி 6-ஆம் தேதி போராட்டக் களத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடா்ந்து, ஒன்றிய அரசு சார்பில் ஒன்றிய வேளாண் அமைச்சக இணைச் செயலர் ப்ரியரஞ்சன் தலைமையிலான குழு, தல்லேவால் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்), கிஸான் மஸ்தூர் மோர்ச்சா (கேஎம்எம்) ஆகிய விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்தனர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் மீது பிப்ரவரி 14-ஆம் தேதி சண்டீகரில் பேச்சுவார்த்தை நடத்த அவா்கள் அழைப்பு விடுத்தனா். இதற்கான கடிதத்தையும் அவர்களிடம் வழங்கினா்.

இதை ஏற்றுக்கொண்டு ஜக்ஜீத் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். கடந்தாண்டு எஸ்கேஎம் மற்றும் கேஎம்எம் ஆகிய சங்கங்களிடம் ஒன்றிய அமைச்சர்கள் நான்கு முறை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது எனவும், இதில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் பங்கேற்பர் எனவும் ப்ரியரஞ்சன் வழங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. இருப்பினும், வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தல்லேவால் நிறைவு செய்ய மாட்டார் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனா்.முன்னதாக, ஒன்றிய குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ‘டில்லி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு பிப்ரவரி 9-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். எனவே, பேச்சுவார்த்தையை பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்திக்கொள்ளலாம் என ஒன்றிய குழு தெரிவித்தது’ என்றனர்.

அரியானா – பஞ்சாப் மாநில விவசாயிகள் நடத்திய போராட்டம் வரலாறு காணாத ஒன்று. குடும்பம் குடும்பமாக பனியிலும், கோடையிலும் பெரும் அவதிக்கும், அல்லலுக்கும் ஆளாயினர். உயிரிழந்தோர் எண்ணற்றோர்!
வேறு வழியின்றி ஒன்றிய பிஜேபி அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
ஆனால் சொன்னபடி ஒன்றிய பிஜேபி அரசு நடந்து கொள்ளவில்லை; வழக்கம்போல ஒன்றிய பிஜேபி அரசு விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பேச்சு வார்த்தைக்கு இப்பொழுது அழைத்துள்ளது.
நம்ப முடியுமா? உனக்கும் ‘பேப்பே’.. உங்கப்பனுக்கும் ‘பேப்பே’ என்று சொல்லுவதில் ஒன்றிய பிஜேபி அரசு கில்லாடியாயிற்றே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *