கோமியம் விவகாரம் அய்அய்டி இயக்குநருக்கு அமைச்சர் க.பொன்முடி கண்டனம்!

viduthalai
2 Min Read

விழுப்புரம், ஜன.20- கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பங்கேற்று பேசிய சென்னை அய்அய்டி இயக்குநர் காமகோடி, “எனது தந்தைக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்துவரை கூப்பிடலாம் என்று சொன்னார்.
அப்போது வந்த ஒரு சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசு கோமியத்தை குடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். உடனே பசுவின் கோமியத்தை குடித்தார். குடித்த 15 நிமிடங்களில் காய்ச்சல் போய்விட்டது.

பசு கோமியம் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்சினைகளை எதிர்க்க சிறந்த மருந்தாக இருப்பதால் அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

அய்அய்டி இயக்குநர் பேசிய காட்சிப் பதிவு தற்போது வலை தளங்களில் பரவலாகி வெளியானது.

தற்போதைய நவீன மருத்துவ உலகில், இதுபோன்ற மூட நம்பிக்கைகளை ஒரு அய்அய்டி இயக்குநர் பொதுவெளியில் கூறியிருப்பதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

எந்த அறிவியலும் பசு கோமியத்தை குடிக்க சொன்ன தில்லை. அறிவியலுக்கு எதிரான, அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை அய்அய்டி இயக்குநர் கூறியிருப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணவர் கழகத்தினர், அரசியல் தலைவர்கள், இணையவாசிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அய்அய்டி இயக்குநர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் க.பொன்முடி, இந்த மூட நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் விழுப்புரம் ஊடக வியலாளா்கள் சங்கம் இணைந்து நடத்திய பத்திரிகையாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நேற்று (19.1.2025) நடைபெற்றது.

ஆட்சியா் சி.பழனி தலைமையில் நடைபெற்ற இம்முகாமை தமிழ்நாடு வனத்துறை அமைச்சா்
க.பொன்முடி தொடக்கி வைத்தாா்.

பின்னர் அவர் செய்தியாளர் களுடன் பேசியதாவது:

நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்து வரும் காலத்தில், நவீன மருத்துவ வசதிகள் எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கம். இதுபோன்ற தவறான கருத்துகளை கூறி மக்களை திசை திருப்பக் கூடாது. கோமியத்தை அந்த காலத்தில் இருந்து தெளித்துக் கொள்வதுதான் வழக்கம். அதை அய்அய்டி இயக்குநர் குடிக்க கூறுகிறார்.

ஒரு அய்அய்டி இயக்குநர் இதுபோன்ற கருத்தை கூறுவது ஏற்க கூடியதல்ல. இது போன்ற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிய பத்திரிகையாளர்கள் பத்திரிகை மூலமாக வெளிக் கொண்டு வர வேண்டும் என்றார்.

கார்த்தி சிதம்பரம் கண்டனம்

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அய்அய்டி இயக்குநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில், சென்னை அய்அய்டி இயக்குநரே போலி அறிவியலை பரப்புவது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *