சென்னை, ஜன.19 ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ மூலம் ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள் என்றும், பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக சட்டத்துறை 3 ஆவது மாநில மாநாடு, சென்னை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நேற்று (18.1.2024) நடந்தது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசியதாவது:
சட்டத்துறையா- சாதனைத் துறையா!
இது சட்டத்துறையா-இல்லை, சாதனைத் துறையா என்று வியப்படையும் வகையில், ஏராளமான சட்டப்பூர்வ சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள். கட்சிக்காக மட்டுமல்ல, மக்களின் நலனுக்காகவும் ஏராளமான பணிகளைச் செய்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சி முடக்க நினைத்த சமச்சீர் கல்வியைக் காப்பாற்றினோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.
நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கை தடுத்தோம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதன்முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தடை வாங்கினோம். கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா இருக்கும் இடத்தை தனியாரிடம் இருந்து மீட்கக் காரணமாக இருந்தோம். இது அனைத்துக்கும் மேல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததும் இந்த வழக்குரைஞர் படைதான். மருத்துவம் மற்றும் மருத்துவ உயர் கல்வியில் இன்றைக்கு ஆண்டுதோறும் 5 ஆயிரத்து 500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கிறது என்றால், இந்தச் சமூகநீதி சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சாத்தியப்படுத்தியது நம்முடைய சட்டத்துறைதான். இந்தச் சாதனைப் பயணம் தொடர, இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
சமூகநீதி
சட்டத்துறைக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு கம்பீரம் இருக்கிறது. அறிவு முகம் இருக்கிறது. நம்முடைய சட்டத்துறையில் இருந்துதான், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் போன்றவர்கள் உருவானார்கள். நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றபட உரையாடல்களை நீங்கள் தொடங்க வேண்டும். அடுத்து, நம்முடைய என்.ஆர்.இளங்கோ ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினர் ஒன்றிய மேனாள் அமைச்சர் கபில் சிபல், மேனாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரு நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடலில் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.
ஒற்றைப் பண்பாடா?
ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வை பொறுத்தவரைக்கும், ‘‘ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே பண்பாடு – ஒரே உடை – ஒரே உணவு’’ என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ‘ஒரே தேர்தல்’ என்று கிளம்பியிருக்கிறார்கள். ‘ஒரே அரசு’ என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.
பா.ஜ.வைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும். இது, பா.ஜ. என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல.
சர்வாதிகாரி
இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பா.ஜ.வும் – பா.ஜ.வுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பா.ஜ. ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், மேனாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி. “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பா.ஜ. தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி சரியாகச் சொன்னார். நம்மை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி.
மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது!
எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர்! இருந்தாலும் ஒன்றிய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேச பேசத்தான் பா.ஜ அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது. மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய தோழர்கள் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான்.
வெற்றிப் பயணம் தொடரவேண்டும்!
இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும்! தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது. பாராட்டுக்குரியது. இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன். 2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026 இலும் தொடர வேண்டும். 2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது! திமுக ஆட்சி மீண்டும் அமைய-இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க- திமுக சட்டத்துறை சளைக்காமல், – சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும். திமுகவின் காவல் அரணாக விளங்கும் சட்டத்துறை சார்பில், திமுக வழக்குரைஞர்கள் நலனுக்காக இன்றைக்கு அய்ந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அதை ஆக்கப்பூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோவை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்