ஈரோடு, ஜன.18 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவ தற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் (17.1.2025) முடிந்த நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீது இன்று (18.1.2025) பரிசீலனை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. காலி யானதாக உள்ள சட்டமன்ற தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறி வித்தது.
இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகளும் அமலாகின. 10 ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான 10-ஆம் தேதி சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ஆம் தேதி விடுமுறை தினம் ஆகும்.
அதைத்தொடர்ந்து 13-ஆம் தேதி 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் பொங்கல் விழாவையொட்டி 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. நேற்று (17.1.2025) தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால், நேற்று பலரும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. 58 பேர் வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளனர்.