கேள்வி 1: தந்தை பெரியார் – பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருவரின் கொள்கைப் பயணம் எவ்வாறு இருந்தது?
– இரா.சு. மணி, காட்பாடி
பதில் 1: இருவரும் இறுதிவரை ஒரே இயக்கப் பாதையில் பயணித்தவர்கள். பாதைகள் சற்று அவ்வப்போது மாறியிருக்கலாம். எதிர்நீச்சலில் சளைக்காதவர்கள். தன்மானம், இனமானம் தழைக்க தங்களது வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள்.
– – – – –
கேள்வி 2: பள்ளி மாணவர்கள் தங்கள் ஜாதியை பறைசாற்றும் வகையில் கைகளில் பட்டைகள், கயிறுகள் கட்டிக்கொள்வதை தடுக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமா?
– கு.கணேஷ், கடப்பாக்கம்
பதில் 2: ஏற்படுத்தியாக வேண்டும். அப்படிப்பட்ட அடையாளங்களுடன் வருகிற மாணவர்களுக்கு முதலில் அறிவுரை, அடுத்து எச்சரிக்கை, மூன்றாவது தண்டனை – எந்தப் பள்ளியிலும் படிக்கச் சேர முடியாத வகையில் சான்றிதழில் தகுதி நீக்கம் – போன்றவைகளுடன் கடுமையான கண்டிப்புக் காட்டப்பட வேண்டும். எதிர்ப்புக்கிணங்கி, இதில் அரசு சமரசம் செய்யக் கூடாது.
– – – – –
கேள்வி 3: கைவல்யம் அவர்களை சுவாமி கைவல்யம் என்று அழைப்பது ஏன்?
– கனிமொழி, காஞ்சிபுரம்
பதில் 3: கைவல்யம் அல்லது கலைக்கியானம் நூல் விளக்கத்தில் அவர் கைதேர்ந்தவர்; எல்லா இடங்கள், ஊர்களில் சுற்றி அறிவு போதித்தவர், தனக்கென எதையும் பெறாது தனிப்பட்ட சுயநலம் துறந்தவர் – அக்கால வழக்குப்படி அவ்வாறு அழைத்திருக்கக் கூடும்.
– – – – –
கேள்வி 4: “கவர்னர் (ஆளுநர்) வேலை சோம்பேறிகளுக்கு வெகுமானம் கொடுக்கப்படும் வேலையாகும். சட்டப் பேரவையில் உண்மையைப் பேச முடியாது. அதனால்தான் நாங்கள் சட்டமன்றத்துக்கு செல்வதில்லை.” இது எப்படி இப்போதுள்ள நிகழ்வுகள்படி பொருந்தக் கூடியது?
– எஸ்.நல்லபெருமாள், வடசேரி
பதில் 4: சட்டமன்றத் தேர்தல் மூலம் வந்தவர்கள் அக்கடமையை ஒழுங்காகச் செய்யத் தவறுவது ஒழுங்கீன முறை, கடமை தவறல்.
ஆளுநர் பதவி, நியமனங்கள் பற்றி நீங்கள் அறிந்தவற்றோடு, தேர்தலில் நின்று தோற்றுப் போனவர்களுக்குக் கொடுக்கும் ஆறுதல் பரிசு என்றும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
– – – – –
கேள்வி 5: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தமிழ்நாட்டைச் சேர்ந்த மேனாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், முதன்மை விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, ந.வளர்மதி, கே.சிவன், வனிதா முத்தையா, நிகர் வாஷி, பி.வீரமுத்துவேல், தற்போது, இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்றுள்ள வி.நாராயணன் போன்றவர்கள் மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்து விண்வெளி ஆராய்ச்சியில் உலக சாதனைகளை நிகழ்த்தி வருவது உள்ளங்கையில் நெல்லிக்கனிப் போல் இருக்கையில் ஒன்றிய அரசு புதிய கல்வித் திட்டத்தை புகுத்துவதும், இதனை பின்பற்றும் மாநிலங்களுக்குதான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என நிர்ப்பந்தம் செய்வதும் எவ்விதத்தில் சரி?
– மன்னை சித்து , மன்னார்குடி – 1.
பதில் 5: எவ்விதத்திலும் சரியல்ல. உங்கள் கேள்வியிலேயே விளக்கமும் வந்துள்ளதே!
– – – – –
கேள்வி 6: ராமன் கோவில் கட்டப்பட்ட நாள்தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர நாள் என்கிறாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர்?
– ஆ.மெய்யறிவு, மதுரை
பதில் 6: இதுதான் அவர்களது ‘உண்மைக் குரல்!’ தேசபக்தி வேஷத்தைக் கலைத்துப் பேசிவிட்டார். நாடு சொல்லட்டும் உண்மையான தேசபக்தி, இப்படிப்பட்ட நடவடிக்கையா? ஒரு நினைவுச் சின்னத்தை இடித்துத் தகர்த்தது வரலாற்றுப் பிழை என்பதையும், மக்களுக்கு அவர்களை அடையாளம் காட்டிடவும் ஒரு நல்ல வாய்ப்பைத் தந்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர். நன்றி, பகவத்(ஜி)!
– – – – –
கேள்வி 7: மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் குறித்து ‘திராவிட மாடல்’ அரசுக்கெதிராக ஒன்றிய அமைச்சரே தவறான தகவலைக் கூறியுள்ளாரே – இது திட்டமிட்ட செயலா?
– ம.கந்தவேலன், விழுப்புரம்
பதில் 7: பொய்யை அரசியலாக்கி நடத்தும் ஆட்சி என்பதற்கு நல்ல சான்றாவணம். அதற்குப் பின், அதை சமாளிக்க அவர் அளித்த விளக்கங்கள் அபத்தம்! அபத்தம்!!
– – – – –
கேள்வி 8: தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளிடம் – குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கட்சிப் பொறுப்பாளர்களாக நியமிக்கும் போக்கு – அதிகரித்துக் காணப்படுகிறதே?
– தே.வீரபாண்டியன், திருச்சி
பதில் 8: அவர்களை அடையாளம் கண்டு தோற்கடித்து அரசியலை விட்டு விரட்டுவது வாக்காளர் கடமையாகும்.
– – – – –
கேள்வி 9: தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் இனவுணர்வுத் திருவிழாவில் விருதுகள் பெற்ற பேராளர்கள் குறித்து?
– சா.ஏகலைவன், வந்தவாசி
பதில் 9: அறிவு, ஆற்றல், துணிவு, தெளிவு உள்ளவர்களே பாராட்டப்பட்டவர்கள். பகுத்தறிவாளர்கள் என்பதற்கான சரித்திரச் சான்று!
– – – – –
கேள்வி 10: ‘திராவிட மாடல்’ அரசின் பன்னாட்டு புத்தகத் திருவிழா தமிழ் இலக்கிய உலகில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
– வே.வேங்கைமுத்து, வியாசர்பாடி
பதில் 10: நிச்சயம் ஏற்படுத்தும் – ஏற்படுத்தியும் வருகின்றனரே!