இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையினை வாசிக்க வந்த ஆளுநர் ரவி, சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் நாட்டுப்பண் இசைக்கப்படவில்லை என்ற உப்புச் சப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். ஆளு நரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தமிழர் திருவிழாவான பொங்கலுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில் வட இந்திய விழாக்களை பட்டியலிட்டு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘லோஹ்ரி, மகர சங்கராந்தி, போகலி பிஹு மற்றும் உத்தராயணத்தின் விசேஷமிக்க நாளில் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! அறுவடை காலத்தைக் குறிக்கும் இந்தப் பண்டிகைகள், அன்னை பூமிக்கான நமது ஆழ்ந்த நன்றியுணர்வைப் பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான வளமான மரபுகள், சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள், ஒரே தேசமாக நம்மை ஒன்றிணைக்கும் கலாசார துடிப்பு மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த கொண்டாட்டங்கள் அன்பு, இரக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்த்து, அனைவருக்கும் அதிக மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளத்தை வழங்கட்டும்”என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்ெகனவே ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த நிலையில், தற்போது நேரிடையாக வடநாட்டு பண்டிகைகளை (குறிப்பாக ஆரிய வர்த்தம் என்று சொல்லப்படும் பகுதிகளில்) முன்னிறுத்தி வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்.
பொங்கல் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது தமிழ் மீதும், தமிழ் பாரம்பரியத்தின் மீதும் அவருக்கு இருக்கும் அவமரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளதாக பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களின் பொங்கல் விழாவை மகர சங்கராந்தி (மகாராட்டிராவில் இப்படி வழங்கு வதுண்டு) என்று ஆரிய புராண வண்ணத்தைப் பூசி, தமது ஹிந்துத்துவா, காவிக் குணத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.
காவி வண்ணம் பூசிய திருவள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகையில் வைத்து, நம் மொழிக்கும், இனத்திற்கும், பண்பாட்டுக்கும் சவால் விடுகிறார் என்றால் இதன் பொருள் என்ன, நோக்கம் என்ன?
நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே என்று தந்தை பெரியார் கூறியது இப்பாழுது விளங்கவில்லையா?
ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக வந்தவர், அந்த மாநிலத்தின் பண்பாட்டை, மக்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இருக்க வேண்டாமா?
திருப்பாவையில் ஆண்டாள் பாடிய ‘தீக்குறளைச் சென்றோதோம்’ என்ற வரிக்கு மறைந்த காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் தீய திருக்குறளை ஓத மாட்டோம். என்று பொருள் சொன்னதற்காக வாங்கிக் கட்டிக் கொள்ள வில்லையா? குறள் என்பதற்கு கோள் சொல்லுதல் என்ற பொருள் உண்டு என்பதைக்கூட அறிந்திராத ஒருவர் ஜெகத் குருவாம் – மகா பெரிய வாளாம் – மண்ணாங் கட்டியாம்!
பார்ப்பனர்கள் எந்த மூலையில் இருந்தாலும், பெரிய பதவிகளில் இருந்தாலும், அவர்களின் உணர்வு என்பது – திராவிடத்தை – அவர்களின் பண்பாட்டை இழிவுபடுத்துவதும், திசை மாற்றுவதும்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்.
‘திராவிட மாடல்’ அரசு நாடெங்கும் சமத்துவப் பொங்கலை கொண்டாடுவது வரவேற்கத்தக்கது.
ஆரியத்தை அடையாளம் காண்பீர்!
பொங்கட்டும் திராவிடப் புத்துணர்வு!