அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, ஜன. 13- சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பேசுகையில், “ஒன்றிய அரசு எப்பொழுதெல்லாம் டி.ஏ. உயர்வை வழங்கினாலும் அன்றைக்கே அதனைத் தமிழ்நாட்டிற்கும் வழங்கக்கூடிய ஒரு நல்ல திட்டத்தை நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.
இப்போது ஒன்றிய அரசு பணிக்காலத்தின் நிறைவு நேரத்தின் போது வருகிற ஊதியத்தின் அடிப்படையில் 50 சதவிகிதத்தைக் கணக்கெடுத்து, அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையிலே ஓய்வூதியத்தைக் கணக்கெடுக்கலாம் என்று அவர்கள் திட்டம் அறிவித்துள்ளது.
அரசு கவனத்தில்கொண்டு அதை நிறைவேற்ற முன்வருமா? என்றார்.
இதற்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “ஒன்றிய அரசு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் இரண்டிற்கும் மாற்றாக புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டமானது அரசுப் பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தைப் பெறுவதை அடிப்படை நோக்கமாக கொண்டிருக்கக்கூடிய ஒரு திட்டம். இருந்தாலும்கூட இந்தத் திட்டத்தை செயலாக்கத்திற்கு உரிய வழிகாட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை இன்னும் ஒன்றிய அரசு அதிலே வெளியிடவில்லை.
மிக விரைவில் அந்த வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அது வெளியான உடனேயே நம்முடைய மாநிலத்தில் தக்கதொறு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒரு புதிய குழுவினை முதலமைச்சரோடு கலந்தாலோசித்து குழு அமைக்கப்படும்.
அந்தக் குழுவினுடைய வழிகாட்டுதலின்படி அந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்து வதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்” என்றார்.