சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் – வைகோ கண்டனம்
சென்னை ஜன 12- பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.
ஆணவப் பேச்சு
தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர்வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வதும் நடந்து வருகின்றன.
சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக்கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வன்மையான கண்டனம்
பொது இடத்தில் அமைதியை குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனைப் பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம்பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய ‘தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணிதிரள வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.
தரம் தாழ்ந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம் – முத்தரசன் கண்டனம்
“ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியாரையும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து, மூடப்பழக்க வழக்கங்களுக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபடும் சீமானின் தரம் தாழ்ந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
“பகுத்தறிவு இயக்கத் தலைவர் பெரியார் ஈவெராவை, ‘நாம் தமிழர்’ கட்சி சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி அவமதித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த 08.01.2025 ஆம் தேதி ஊடக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தனிப் பெரும் தலைவர் பெரியார் ஈவெரா மீது எழுத முடியாத, திரும்பவும் எடுத்துச் சொல்ல முடியாத ஆபாசக் குப்பைகளை அள்ளிக் கொட்டி இழிவுபடுத்தியுள்ளார்.
அறிவுத்தீ மூட்டிய…
இது ஏதோ முதல்முறை அல்ல, தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும் வாழ்நாள் முழுவதும் இடைவிடாது இயங்கி வந்த பெரியார் ஈவெரா, சமூக மேலாதிக்க சக்திகளும், புல்லுருவித்தன்மையில் உருவாக்கப்பட்ட மனுதர்ம, சனாதன நடைமுறைகளும், கடவுள் அவதாரப் புராணங்களும் கற்பித்து வரும் மூடப்பழக்க வழக்கக் குப்பைகளை அறிவுத் தீ மூட்டி எரித்து விழிப்புணர்வூட்டும் சுயமரியாதை இயக்கம் கண்டவர். இன்றும் சமூக தளங்களில் கருத்தியல் ரீதியாக இயங்கி வருபவர்.
சிந்தனை சிற்பி
சிந்தனை சிற்பி சிங்கார வேலர் மீது பெரும் நம்பிக்கை வைத்து, சமதர்ம, அறிவியல் கருத்துகளை குடிஅரசு இதழில் வெளியிட்டு அவருடன் தோழமை உறவை வளர்த்து கொண்டவர்.
இடஒதுக்கீடு உரிமை
ஜாதிய அடுக்குமுறை சமூக அமைப்பில் சமூக நீதி ஜனநாயக கொள்கையை முன்மொழிந்து, மக்களின் பேராதரவைத் திரட்டி இடஒதுக்கீடு பெறும் உரிமையை சட்டபூர்வமாக ஏற்கச் செய்தவர். ஸநாதன மூடக் கருத்துக்களை பண்பாட்டு தளத்தில் இருந்து வெளியேற்றி, அரசியல் தளத்தை அண்டா நெருப்பாக கட்டமைத்ததில் சிங்காரவேலர், பெரியார், பேராசான் ஜீவானந்தம், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோர் வெற்றி கண்டுள்ளனர்.
மதவெறியை விசிறி விட்டு
இந்த நிலையில் நாடு முழுவதும் மதவெறியை விசிறி விட்டு, வெறுப்பு அரசியலை முன்னெடுத்து, சமூக ஆதிக்க சக்திகளின் அடி வருடிகளாக செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியார் ஈவெராவையும், தமிழுக்கும், தமிழர் நலனுக்கும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து, மூடப்பழக்க வழக்கங்களுக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபடும் சீமானின் தரம் தாழ்ந்த செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தளங்களிலும் பெரும் பங்களித்தவர் தந்தை பெரியார் – பெ.சண்முகம்
தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வெறுப்பரசியல்
சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, ஜாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர். அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் பரிவார வெறுப்பரசியல் கூட்டமும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது அதே பாதையில், மிக மோசமான அவதூறுகளை வெளிப்படுத்தியிருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தந்தை பெரியாரின் வாழ்க்கையும், அவருடைய பேச்சுக்களும் வரலாற்று ஏடுகளில் பதிவானவை. ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டும், ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் வரக்கூடியவை. அவருடைய கருத்துக்களின் தொகுப்பு இந்தியாவில் நிலவும் ஜாதிப் படிநிலைச் சுரண்டலுக்கு எதிரானவை என்பதுடன், சமுதாயத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை ஒழித்து, முற்போக்குத் திசையில் பயணிக்க உதவக்கூடியவை.
பிற்போக்கு சக்திகள்
அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரோடு உடன்பட்டும், முரண்பட்டும் பயணித்துள்ள பொதுவுடைமை இயக்கமோ அல்லது வேறு பல இயக்கங்களோ கருத்துக்களை விமர்சித்துள்ளோமே அன்றி ஒரு போதும் அவதூறு, இழிவான தாக்குதல்களை செய்ததில்லை. ஆனால், பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறு பொய்களை இட்டுக்கட்டியும், அல்லது குறிப்பிட்ட கருத்துக்கள் பேசப்பட்ட பின்னணியை மறைத்தும், திரித்தும் அவதூறுகளை முன்வைக்கின்றனர். அதன் மூலம் பெரியாரின் கருத்துக்களை முற்றாக வீழ்த்துவதுடன் தமிழ்நாட்டை பின் நோக்கி இழுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதுவரை சங்பரிவாரத்தால் செய்யப்பட்டு வந்த அவதூறுகளை இப்போது சீமானும் முன்னெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.
சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.அய்(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சரித்திரத்தைப் படைத்தவர் பெரியார்!
வாய் இருக்கிறது என்பதற்காக எதையும் பேசக்கூடாது – பிரேமலதா கண்டனம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, சீமான் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பெரியார் என்பவர் யார் என்று உலகத்திற்கு தெரியும் தமிழக மக்களுக்கும் தெரியும். அவர் வாழ்ந்து அவருடைய சரித்திரத்தை நிரூபித்து இறந்துவிட்டார். இறந்து போனவர்களை பற்றி ஏன் இப்போது பேசி அரசியல் ஆக்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர் இருந்த காலங்களில் சரித்திரங்கள் படைத்துவிட்டு சென்றார். அதனை இல்லை என்று யாரவது சொல்லமுடியுமா?
நமக்கு வாய் இருக்கிறது என்று ஏதேதோ பேசக்கூடாது, கொச்சையாகவும் பேசக்கூடாது என்றார்.
பெரியார் குறித்து அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – இ.பி.எஸ்.
தந்தை பெரியார் குறித்து சீமான் அநாகரீகமாக பேசியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், “இது வருத்தத்திற்கு உரியது. இறந்த பெருந்தலைவரை பற்றி அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களுக்கு அவரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம். அந்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரியாரால் ஏற்றம் பெற்றனர். அதை எல்லாம் நாம் மறந்து விட கூடாது. யாராக இருந்ததாலும் பெரியாரை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு பேசுவது சரியல்ல” என்று தெரிவித்தார்.
ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று பெரியார் மீது அவதூறு பேசுபவர்களை பார்த்தால் கோபம் கூட வரவில்லை
பரிதாபமாக இருக்கிறது – சத்யராஜ்
”தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூகநீதி கோட்பாட்டை பொது மேடைகளில் விளக்கி சொல்லி, அதன் உண்மையான விளக்கத்தை கூறி, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று புதிதாக பேசுபவர்களை பார்த்து கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசுகிறார்கள். ஒரே ஆள் பேச முடியாது என்பதால் புது முகங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த முது முகங்களை பார்த்து பரிதாபம் தானே பட முடியும்?
சமூகநீதி கோட்பாட்டையும், திராவிட கருத்தியலையும் நாட்டின் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்டுவிட்டன. காங்கிரஸ், கம்யூனிட்ஸ்ட் போன்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலேயே பேசி இருக்கிறார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வைக்கம் வீரர் பெரியாருக்கு மிகப்பெரிய விழாவை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி இருக்கிறார்.
திராவிடம் என்ற பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்திருப்பவர்கள் நிச்சயம் பெரியாரை ஆதரிப்பார்கள். திக, திமுக, மதிமுக, தபெதிக, திஇதபே, அதிமுக, தேமுதிக என்று இத்தனை கட்சிகளின் பெயர்களிலேயே திராவிடம் உள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையும் சூப்பர். அந்த அற்புதமான அறிக்கையை பொதுக்கூட்ட மேடையில் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். விஜய் தவெகவின் கொள்கைத் தலைவராக பெரியாரை பிரகடனபடுத்தி இருக்கிறார். திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என தெரிவித்துள்ளார். இவ்வளவு பேர் பெரியாரை ஏற்ற பின் திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசுபவர்களை பார்த்தால், அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. பெரியாரின் கருத்தியல் மீது விமர்சனம் வைக்காமல், தனிமனித விமர்சனம் மட்டுமே வைக்கப்படுகிறது. பெரியார் குறித்து புலம்பும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று சத்யராஜ் விமர்சித்துள்ளார்.
திருமுருகன் காந்தி
சீமானுக்கு எதிராக மதுரையில் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ” தந்தை பெரியார் குறித்து உண்மைக்கு மாறாக பொய்யான அவதூறுகளை தொடர்ச்சியாக பேசி வருகின்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து பல போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். வருகின்ற 20-ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு ஜனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து சீமான் இல்லத்தை முற்றுகையிட உள்ளோம்.
மேலும், தற்பொழுது சீமான் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அழைப்பு வந்ததும் பாஜகவுடன் இணைய தயாராக இருக்கிறார். இதனை அம்பலப்படுத்தும் விதமாக திமுகவிற்கும், பெரியாருக்கும் எதிராக தொடர்ச்சியாக பேசி வருகிறார். குறிப்பாக சங்கிகள் எனது நண்பர்கள் என கூறிய சீமான் சங்கிகளின் பானமாக இருக்கக்கூடிய கோமியத்தை சீமானுக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன். அதனை அவர் குடித்து இந்துத்துவ சார்பு கருத்துக்களை பரப்புவதற்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், அதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து கோமியத்தை சீமானுக்கு அனுப்பி வைக்கும் நூதன போராட்டம் நடைபெற உள்ளது” என திருமுருகன் காந்தி கூறினார்.