மக்களைத் திரட்டி பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் நிலை தந்தை பெரியார் மண்ணுக்கே உண்டு!
ஆசிரியர் அவர்களே, தந்தை பெரியாருக்குப் பின் இந்த சமுதாயத்திற்கு நீங்கள் அதிகம் தேவைப்படுகிறீர்கள்!
திருச்சி, ஜன.12 மக்களைத் திரட்டி பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்புரை செய்யும் நிலை தந்தை பெரியார் மண்ணுக்கே உண்டு! ஆசிரியர் அவர்களே, தந்தை பெரியாருக்குப் பின் இந்த சமுதாயத்திற்கு நீங்கள் அதிகம் தேவைப்படுகிறீர்கள் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா.
திருச்சி புத்தூரில் பகுத்தறிவாளர் மாநாடு நிறைவு பொதுக்கூட்டம்
கடந்த 29.12.2024 அன்று மாலை திருச்சி புத்தூர் நான்கு சாலை அருகே இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஒன்றிய மேனாள் அமைச்சர் ஆ.இராசா ஆற்றிய சிறப்புரை வருமாறு:
பெரியோர்களே, தாய்மார்களே, பத்திரிகையாளர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒரு வரலாற்றை உருவாக்கியிருக்கின்ற மண் – இந்த மண்!
ஒரு மாநிலத்தில், ஒரு சமுதாய இயக்கம் – அந்த இயக்கத்தில் பிறந்த ஓர் அரசியல் கட்சி, ஆளுங்கட்சியாக இருக்கின்றபொழுது, அதிலே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொள்கின்ற பகுத்தறிவாளர் மாநாட்டில், இத்தனைப் பெருவெள்ளம் வந்து, அதிலே எல்லோரும் கலந்துகொண்டு பாதுகாப்பாகப் போக முடியும் என்கின்ற ஒரு வரலாற்றை உருவாக்கியிருக்கின்ற மண் – இந்த மண்.
அதுவும் எப்படிப்பட்ட காலத்தில் இந்தப் பகுத்தறி வாளர்கள் மாநாடு என்று உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.
2 ஆயிரம் ஆண்டுகளாக….
இந்தப் போராட்டம், இந்த மண்ணில் 2 ஆயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்ற போராட்டம்.
தந்தை பெரியார் சொன்னார், ‘‘சிந்திக்கின்ற சக்தியும், அந்த சிந்திக்கின்ற சக்தியால் ஏற்படுகின்ற சிந்தனா உணர்ச்சியும்தான் பகுத்தறிவிலே முடியும்’’ என்று.
டார்வின் கண்டுபிடிப்பதற்கு முன்பே....
இதைச் சொல்லிவிட்டு, அதே கட்டுரையில் சொன்னார், என்ன காரணத்தினாலோ தமிழர்கள் அறிவியலை ஒவ்வொரு வகைப்படுத்தினார்கள். தொல்காப்பியத்தில் இருக்கிறது. பரிணாம வளர்ச்சிக் கொள்கையை பின்னாளில் டார்வின் கண்டுபிடிப்பதற்கு முன்னால், தமிழ் இலக்கியம் சொன்னது.
‘‘ஓரறிவு அறிவே, உற்றது அறிவே’’
ஓர் உயிருக்குத் தொட்டுப் பார்க்கின்ற உணர்ச்சிதான் இருக்கும்.
‘‘இரண்டு அறிவு அறிவே – அதனோடு நாக்கே!’’ இரண்டறிவு இருப்பதற்கு நாக்கு மட்டும்தான் இருக்கும்.
‘‘மூன்று அறிவு அறிவே – அதனுடன் மூக்கே.
நான்கு அறிவு அறிவே – அதனுடன் கண்ணே
அய்ந்து அறிவு அறிவே – அதனுடன் செவியே!
ஆறு அறிவு அறிவே – அதனுடன் மனமே!’’
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு அறிவு எது? இரண்டு அறிவு எது? மூன்றாவது அறிவு எது? நான்காவது அறிவு எது? அய்ந்து அறிவு வந்து விட்டால், மனிதன் சிந்திக்கின்றான்.
ஆனால், அந்த சிந்தனை சுயநலத்திற்காக – பொருளீட்ட வேண்டும் என்று; ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று.
‘‘ஜாதியால், மதத்தால் பிரிந்து கிடக்கின்றானே, அப்போதுதான் அவனுடைய பகுத்தறிவு அடிபட்டுப் போகிறது’’ என்று தந்தை பெரியார் சொன்னார்.
‘‘இந்த ஓரறி விலங்கு, பகுத்தறிவு இல்லை. ஆனால், ஜாதி சண்டை இல்லை. ஒருவருடைய வாழ்க்கையை இன்னொருவர் பிடுங்கிக் கொள்ளவில்லை.
புலி, சிங்கம் எல்லாம் அய்ந்தறிவு உள்ள அறிவு. அதற்குள் வர்க்கப் போராட்டம் இல்லை, வர்ணப் போராட்டம் இல்லை, ஜாதிப் போராட்டம் இல்லை.
இன்னொருவருடைய உழைப்பைச் சுரண்ட வேண்டும் என்கிற எண்ணம் – எந்த அய்ந்தறிவு உள்ள மிருகத்திற்கும், நான்கு அறிவு உள்ள பிராணிக்கும், மூன்றறிவு உள்ள ஜந்துக்களுக்கும் இல்லை, இல்லை, இல்லை.
உனக்கு ஏன் ஜாதி, மதம், கடவுள்?
ஆனால், பகுத்தறிவு இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்ற மனிதனே, உனக்கு ஏன் ஜாதி, மதம், கடவுள்? இந்தப் பைத்தியக்காரத்த னத்தைவிட்டு வெளியே வா” என்று சொன்ன வர்தான் தந்தை பெரியார்.
இந்தக் கொள்கையை சொல்வதற்கு இந்தி யாவில் இரண்டே இரண்டு பேர்தான்.
வடக்கே ஒரு அம்பேத்கர் – இங்கே ஒரு பெரியார்!
இந்த இரண்டு பேருடைய போராட்டத்தின் விளைவு – அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இல்லையென்றால், ‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்’’ என்று ஏன் சொல்கிறீர்கள்? பகவான் பெயரைச் சொல்லுங்கள், மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.
சுப.வீரபாண்டியன் அவர்கள்தான் அதிகமாகச் சொல்வார்; ‘‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’’ என்று அண்ணா சொன்னார். ஆனால், கடைசிவரைக்கும் அந்தத் தேவன் யார் என்று சொன்னாரா? என்று கேட்டார்.
எந்த ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாத கொள்கை, பகுத்தறிவாளர்களின் கொள்கை!
இஸ்லாமியர்களுக்காக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்; அவர்கள் அல்லாவை கடவுளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக அல்ல.
இஸ்லாமியர்கள் இங்கே சிறுபான்மை மக்களாக இருக்கின்றவர்கள். அவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வழங்கவேண்டும்.
ஆண், பெண்ணை அடிமைப்படுத்தினாலும் தவறு.
பெரிய ஜாதிக்காரன், சின்ன ஜாதிக்காரனை அடிமைப்படுத்தினாலும் தவறு.
பணக்காரன், ஏழையை அடிமைப்படுத்தினாலும் தவறு.
எந்த ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாத கொள்கை, பகுத்தறிவாளர்களின் கொள்கை – அதுதான் தந்தை பெரியாரின் கொள்கை, அம்பேத்கரின் கொள்கை.
எந்த மதச் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்களுக்காக நாங்கள் போராடுவோம்!
நான் நாடாளுமன்றத்தில் பேசினேன்; அதற்காக இஸ்லாமிய பெருமக்கள் எல்லாம் வெளியில் வந்து எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.
நான், அவர்களிடம் கேட்டேன் ‘‘உங்களுக்காகப் போராடுகிறோம் என்பது எங்களுடைய இலட்சியம். நீங்கள் மட்டுமல்ல, எந்த மொழிச் சிறுபான்மையாக இருந்தாலும், எந்த மதச் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்களுக்காக நாங்கள் போராடுவோம் – நாங்கள் பகுத்தறிவாளர்கள்.
ஆனால், ஒன்றை கவனித்தீர்களா?
இராமர் பிறந்த இடத்தில், 400 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு இஸ்லாமிய படையெடுப்பு வந்து, அங்கே அல்லாவிற்குக் கோவில் கட்டினார்கள்.
உங்கள் மத முறைப்படி, நான் கேட்டேன், ‘‘ராமன் இருந்த கோவிலில், அதை மறைத்துவிட்டு, மசூதி கட்டினால், அந்த இடத்தின் ராமன் தோற்றுவிட்டார்; கடவுள் தோற்றுவிட்டார். மீண்டும் 400 ஆண்டுகள் கழித்து, அந்த மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ராமன் கோவில் கட்டினால், அல்லா தோற்றுவிட்டார்.’’
சிறுபான்மை மக்களுக்கு உரிமை உண்டா? இல்லையா?
இப்பொழுது பிரச்சினை அல்லாவா, இராமனா? என்பதல்ல. பிரச்சினை, சிறுபான்மை மக்களுக்கு உரிமை உண்டா? இல்லையா? என்பதுதான் கேள்வி.
எனவே, ‘‘நாங்கள் அதற்காகப் போராடிக் கொண்டி ருக்கின்றோம்’’ என்று சொன்னோம்.
சயின்டிபிக் டெம்பர் என்று சொன்னார்களே எனக்கு முன்பு உரையாற்றியவர்கள்; இந்தப் பிரச்சினை அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது. பிரதமர் நேரு சந்தித்த மிகப்பெரிய சவால் எல்லாம் அதுதான்.
சியாம் பிரசாத் முகர்ஜி
அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். நேரிடையாக வரவில்லை; காங்கிரசுக்குள்ளேயே இருந்தது. நேருவினுடைய அமைச்சரவையிலேயே சியாம் பிரசாத் முகர்ஜி, ஹிந்து மகா சபையின் சார்பில் இருந்தார்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ‘‘பிராமணர்கள்’’ இருந்தார்கள். அதனால்தான், இந்து திருத்த சட்ட மசோதா வரவில்லை.
அன்றைக்கு நேரு தொடங்கி வைத்த சோமநாதர் ஆலயத்தை அரசாங்க செலவில் கட்ட முடியாது என்று உறுதியாக இருந்தாரே, அந்தப் பகுத்தறிவு உள்ள பிரதமர் இருந்த நாற்காலியில், இன்றைக்கு யார் யாரோ உட்கார்ந்திருக்கிறார்கள். யார் உட்கார்ந்திருக்கிறார்?
10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததாம்!
‘‘பிள்ளையார் படத்தைப் பார்த்தீர்களா? அந்தக் காலத்திலேயே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, நம்முடைய மதத்தில், நம்முடைய கலாச்சாரத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது.’’
இதைச் சொன்னது யார்? ஒரு பிரதமர்.
இன்னொரு ஒன்றிய அமைச்சர் சொல்கிறார், ‘‘அந்தக் காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்தது” என்று.
இப்படி மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் ஒரு முக்கியத்துவம் கொடுத்து, இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், கடவுளுக்கு, கோவிலுக்கு, மத ஆச்சாரங்களுக்குக் கொடுக்கின்ற உரிமையை, மனித உரிமைகளுக்குக் கொடுக்கின்றார்களா? என்றால், மணிப்பூரைப் பாருங்கள்.
அடி கொடுக்கவேண்டும் என்றால்,
யார் யாரையெல்லாம் அடிப்பது?
இங்கே ஒருவர் சாட்டையால் அடித்துக் கொள்கிறார்.
ஒரு பெண்ணுக்கு சாட்டையால் அடித்துக் கொள்கிறாயே, யாரோ ஒரு பையன், யாரோ ஒருத்தன் காட்டுமிராண்டித்தனம் செய்தான் என்பதற்காக சாட்டையால் அடித்துக் கொள்ளும் தம்பி, அய்.பி.எஸ். படித்திருக்கிறாயே, 200 பேர், ஒரு பெண்ணை நிர்வாணமாக அழைத்துச் சென்று, கைப்பேசியில் காட்சிப் பதிவு செய்து, அந்தப் பெண்ணை, யார் கற்பழித்தானோ, அவனிடமே ஒப்படைத்து வருகிறானே காவல்துறை. அதற்கெல்லாம் நாங்கள் அடி கொடுக்கவேண்டும் என்றால், யார் யாரையெல்லாம் அடிப்பது? மணிப்பூர் ஆளுநரை அடிப்பதா? மணிப்பூர் முதலமைச்சரை அடிப்பதா? இதுவரையில் மணிப்பூருக்குச் செல்லாமல் இருக்கிறாரே ஒருவர், அவரை என்ன செய்வது? இதற்கெல்லாம் என்ன காரணம்? பகுத்தறிவு இல்லாததுதான்.
அந்தப் பகுத்தறிவுக் கொள்கையை விதைத்த அய்யா பிறந்த இந்த மண்ணில்தான், இவ்வளவு ஆரோக்கியமான ஒரு மாநாட்டை நம்மால் நடத்த முடியும் என்ற வரலாற்றை நம்முடைய ஆசிரியர் இங்கு நிகழ்த்தியிருக்கிறார்கள்.
சென்ற வாரம் தொலைக்காட்சியில் நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள் – ஒரு முதலமைச்சர் ஒரு நிமிடம் நின்றே விட்டார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், அந்த மேடையில், எதையோ மூடி எடுத்துக்கொண்டு வருகிறார்கள் முதலமைச்சருக்குக் கொடுப்பதற்காக.
முதலமைச்சருக்கு நினைவுப் பரிசாக பெரியாரின் கைத்தடி
அதனுள் வீர வாள், வெள்ளி வாள் இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். திராவிடர் கழகத்தில் தங்க வாள் கொடுக்க முடியாது; கொடுக்கவும் மாட்டோம். ஏனென்றால், பெரியார் சிக்கனமாக இருக்கச் சொல்லியிருக்கிறார்.
என்ன கொடுக்கப் போகிறார்கள் என்று எல்லோரும் ஆவலோடுப் பார்த்தபொழுது, மூடியிருந்த அந்தத் துணியை எடுத்தால், பெரியாரின் கைத்தடி இருந்தது.
அதை வாங்கிக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், ‘‘என் வாழ்வில் எத்தனையோ பதவியைப் பார்த்திருக்கிறேன்; எத்தனையோ பரிசுகளைப் பார்த்திருக்கிறேன்; இது போதும்” என்று சொல்லிவிட்டு, ஒரு நிமிடம் நிறுத்தினார்.
பகுத்தறிவோடு கூடிய ஓர் அரசாங்கம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது!
அங்கேதான் பகுத்தறிவு வாழ்கிறது. எனவேதான் சொல்கிறேன், பகுத்தறிவோடு கூடிய ஓர் அரசாங்கம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது; இப்போது மட்டுமல்ல, அண்ணா காலத்தில், கலைஞர் காலத்தில்.
எத்தனை பேருக்கு அந்தத் துணிச்சல் வரும்?
ராமனுக்காக மிகப்பெரிய அளவில் அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், ‘‘ராமன் எந்தக் கல்லூரியில் எஞ்ஜினியரிங் படித்தார்?” என்று கேட்கின்ற ஒரு தலைவனை இனிமேல் பார்க்க முடியுமா?
இப்படிச் சொல்கின்ற துணிச்சல் யாருக்காவது வருமா?
எத்தனை பேரது எதிர்ப்பு வந்தாலும், இது ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் – எனக்கு வழிகாட்டி திராவிடர் கழகம் – திடலில் ஆசிரியர் இருக்கிறார்; அவர்தான் என்னை வழிநடத்துகிறார் அரசியலில்” என்று சொல்லக்கூடிய துணிச்சல் யாருக்காவது வருமா?
அந்தத் துணிச்சலோடு நாடாளுமன்றத்திற்குப் போகிறோமே, நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுந்து நிற்கிறோமே, எங்களைப் பார்த்துப் பயப்படுகிறார்களே – வெறும் 20 பேரை பார்த்து, 300 பேர் பயப்படுகிறார்களே, அதற்கு என்ன காரணம்? எங்களைப் பார்த்தா? இராசாவைப் பார்த்தா? எங்களுக்குப் பின்னால் இருக்கின்ற பெரியார், அம்பேத்கர் ஊட்டிய அந்தப் பகுத்தறிவு உணர்வு இருக்கின்ற காரணத்தினால் பயப்படுகிறார்கள்.
பகுத்தறிவு இல்லை என்றால்…
எனவே, எப்போதையும்விட இன்றைக்குப் பகுத்தறி வாளர்களின் எண்ணிக்கை நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.
பகுத்தறிவு இல்லை என்றால்,
அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முடியாது. பகுத்தறிவு இல்லை என்றால், இந்தத் தேசத்தைக் காப்பாற்ற முடியாது – மதச்சார்பின்மையைக் காப்பாற்ற முடியாது.
எனவே, எல்லாவற்றிற்கும் அடிநாதமாக இருப்பது – அது பாலின சமத்துவமாக இருந்தாலும், ஜாதி ஒழிப்பாக இருந்தாலும்; நான்தான் சொல்வேன், எல்லா மாநிலங்களிலும் சமூகநீதிக்குத் தலைவர்கள் வந்திருக்கிறார்கள் – வி.பி.சிங் உள்பட. அய்யோ, அந்த ஜாதி பாவம்; பிற்படுத்தப்பட்ட ஜாதி – கல்வி இல்லை, வேலை வாய்ப்பில்லை; பொருளாதாரம் இல்லை – அவர்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற நினைப்பு நல்லதுதான் – அது சமூகநீதி.
ஜாதி ஒழிப்பை சொல்கிற இயக்கம்தான் திராவிட இயக்கம்!
ஆனால், இந்தியாவில் ஒரே ஒரு இயக்கம் மட்டும்தான் – சமூகநீதி மட்டுமல்ல – ஜாதி ஒழிப்புதான் எங்கள் கொள்கை என்று சொல்வதற்கு ஓர் இயக்கம் இருக்கிறது என்றால், அது திராவிட இயக்கம்தான்.
அந்த வழியிலே தன்னை சிறிதும் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொண்டிருக்கின்ற தலைமுறைதான் – கலைஞராக இருந்தாலும், அண்ணாவாக இருந்தா லும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக இருந்தா லும், அதற்குப் பின்னால் வருகின்ற உதயநிதி ஸ்டாலி னாக இருந்தாலும், எங்களுக்கு எந்தத் தகுதியும் தேவை யில்லை.
கேட்பார்கள், உதயநிதி ஸ்டாலின், அண்ணாவைப் போன்று எழுதுவாரா? கலைஞரை கேட்டார்கள்; கலைஞர் வந்தபொழுது, அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் பேசுவாரே? எட்டாம் வகுப்பு படித்த ஒருவரை எப்படி முதலமைச்சராக ஏற்க முடியும்? என்று எள்ளி நகை யாடினார்கள்.
என் இதயத்தில் பெரியாரும், அண்ணாவும் இருக்கின்ற வரையில் எனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது!
கலைஞர் சொன்னார், ‘‘நான் எத்தனையாவது படித்திருக்கிறேன் என்பது முக்கியமல்ல; என் இதயத்தில் பெரியாரும், அண்ணாவும் இருக்கின்ற வரையில் எனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது” என்று சொன்னார்.
என்ன காரணம்? பகுத்தறிவு.
கலைஞர் அவர்கள் மறைந்தபொழுது, தமிழ்நாட்டில் வெற்றிடம் வந்துவிட்டது என்று சொன்னார்கள்.
கலைஞரைப் போல் எழுதத் தெரியுமா? இலக்கியம் பேசத் தெரியுமா? கலைஞரின் ராஜதந்திரம் எங்கே? என்று தளபதியைப் பார்த்துச் சொன்னார்கள்.
இவர் சொன்னார், ‘‘என் தந்தையைப் போல் பேசத் தெரியாது; எழுதத் தெரியாது; படிக்கத் தெரியாது. ஆனால், என் தந்தை கொண்டிருந்த பெரியார் வழியை, அண்ணா வழியை கட்டிக் காக்கின்ற அந்தத் தன்மை இருக்கிறது; அந்த உறுதி இருக்கிறது. அதுபோதும்” என்று.
இப்போது திரும்பவும் ஆரம்பித்துவிட்டார்கள். உதயநிதி ஜெயிலுக்குப் போனாரா? மற்றவர்கள் எல்லாம் தி.மு.க.வில் இல்லையா? துரைமுருகன் எல்லாம் இல்லையா? அவர் இல்லையா? இவர் இல்லையா? என்றார்கள்.
ஜாதி ஒழிக என்று சொல்லக்கூடிய
ஒரே தகுதி போதும்!
எல்லோரும் இருக்கிறோம். ஜாதி ஒழிக என்று சொல்லக்கூடிய ஒரே தகுதி அவருக்கு இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஜாதி ஒழிக என்று எப்போது சொல்ல முடியும்? பகுத்தறிவு இருக்கிறபோதுதான் சொல்ல முடியும்.
பகுத்தறிவு இல்லை என்றால், ஜாதியை விட்டு வெளியே வர முடியாது. நான் பல பேரை பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த நண்பர்கள் குடும்பத்தில்கூட, காதல் திருமணம் செய்த பெண்கள் எல்லாம் வந்திருக்கின்றார்கள்.
மாப்பிள்ளை வேறு ஜாதி. பெண்ணைவிட, அழகாக வும், வசதியாகவும், அறிவாளியாகவும் இருக்கிறார்.
‘‘எல்லாம் சரிங்க, எம் பெண்ணை அவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தால், என் ஜாதிக்காரங்ககிட்டே போய் நான் எப்படி முழிக்கிறது?”
அங்கேதான் பகுத்தறிவு வருகிறது. அந்தப் பகுத்தறிவு இருந்தால், மனப் பொருத்தமும், மற்ற எல்லாப் பொருத்தமும் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை துணை நலத்தில் எல்லா அம்சங்களும் வரக்கூடும் என்றால், அந்த ஜாதியைத் தூக்கி எறியக்கூடிய மன வலிமை எப்பொழுது வரும் என்றால், பகுத்தறிவு இருந்தால் வரும்.
அந்தப் பகுத்தறிவு, கோபாலபுரக் குடும்பத்திற்கு இருந்தால், உனக்கு ஏன் கோபம்? அதுதான் பிரச்சினை அவர்களுக்கு.
எனவேதான் சொல்கிறேன், இதை மிக நுட்பமாகக் கண்டுபிடிக்கிறார்கள்.
அம்பேத்கரை ஏற்றுக்கொள்வோம்; பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
என்ன காரணம் என்றால், அது ஓர் அரசியல். அம்பேத்கருக்கு நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று சொல்கிறார்கள். அம்பேத்கர் சொன்னதை ஏற்றுக் கொள்வார்களா, அவர்கள்? அம்பேத்கர் சொன்னாரே, ‘‘ஹிந்து ராஜ்ஜியம் வந்தால், அதைவிட இந்தியாவிற்கு அழிவு வேறு கிடையாது. அதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும்” என்று சொன்னார். ஒப்புக் கொள்கிறீர்களா? அம்பேத்கரை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு என்ன காரணம் என்றால், அவர் புத்த மதத்தைத் தழுவிய காரணத்தால், புத்த மதத்தை, 10 அவதாரங்களில், ராமனை ஓர் அவதாரமாக மாற்றி, அவர்கள் சுவீகரித்துக் கொண்டார்கள். எனவே, அம்பேத்கர் எங்களுடைய ஆள் என்று சொல்வார்கள்.
உங்களால் பொட்டலம் கட்ட முடியாத நெருப்பு ஒன்று உண்டு!
நான் ஒரு மேடையில் சொன்னேன், ‘‘நீங்கள் என்னதான் சூழ்ச்சி செய்தாலும், தந்திரம் செய்தாலும், அம்பேத்கரை நாங்கள் படித்திருக்கிறோம்; உங்களிடம் வரமாட்டார். ஆனால், நீங்கள் இழுத்துப் பார்த்தால்கூட, உங்களால் பொட்டலம் கட்ட முடியாத நெருப்பு ஒன்று உண்டு என்று சொன்னால், அது ஈரோட்டு தந்தை பெரியார்.
அதனால்தான் நீங்கள் பயப்படுகிறீர்கள்” என்றேன்.
எனவே, அப்படிப்பட்ட நெருப்பை நாம் கைகளில் வைத்திருக்கின்றோம். அந்த நெருப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பற்றிப் பரவி, இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நாசக்கார ஒன்றிய அரசை தூக்கி எறிகின்ற அந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்கவேண்டும் என்று இந்த நேரத்தில் நாம் முடிவெடுக்கவேண்டும்.
தந்தை பெரியாரின் 92 ஆவது வயது பிறந்த நாள் கூட்டத்தில்…
ஆசிரியர் அவர்களைப் பார்க்கின்றபொழுது எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது. இதே திருச்சி யில்தான், பெரியார் அவர்கள் 92 ஆவது வயது பிறந்த நாள் கூட்டத்திற்கு, இதே உறையூரில், பெரியார் மாளிகையிலிருந்துதான் வந்தார்.
உங்களுக்கு வயதாகிவிட்டது, நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் கலைஞர்!
எல்லாம் பேசி முடித்துவிட்டார்கள்; ஒரு திராவிட இயக்கத் தோழர் சொன்னார், ‘‘அய்யா, நீங்கள் கண்ட கனவெல்லாம் நினைவாகிவிட்டது. கலைஞர் முதல மைச்சராகி விட்டார். சுயமரியாதைத் திரு மணத்திற்குச் சட்ட வடிவம் வந்துவிட்டது. நீங்கள் என்னவெல்லாம் சொன்னீர்களே, அதையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் அவர்கள். உங்களுக்கு வயதாகிவிட்டது, நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்றார் நல்ல எண்ணத்தில் அவர்.
சூத்திரப் பட்டத்தைத் தூக்கி எறியும்வரை
நான் ஓயமாட்டேன், எனக்கு ஓய்வில்லை:
தந்தை பெரியார்!
அதைக் கேட்டவுடன் அய்யாவிற்குக் கோபம் வந்து விட்டது. ‘‘என்னைப் போய் ஓய்வு எடுத்துக் கொள் என்கிறார்கள். நான் காலையில் இரண்டு இட்லி சாப்பிடு கிறேன்; 11 மணிக்கு ஒரு டீ குடிக்கிறேன். மதியம் கொஞ்சம் புலால் உணவு சாப்பிடுகிறேன். ராத்திரி இரண்டு சப்பாத்தி சாப்பிடுகிறேன். இவற்றையெல்லாம் எனக்கு வழங்குவதற்கு, எங்கோ ஓர் உழவன், தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன், சூத்திரப் பட்டத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறான். அவ னுக்காக சூத்திரப் பட்டத்தைத் தூக்கி எறியும்வரை நான் ஓயமாட்டேன், எனக்கு ஓய்வில்லை” என்று சொன்னார்.
92 வயதில் பெரியார் சொன்னார். 92 வயதில் சொல்ல முடியாத அளவிற்கு இவர் அமர்ந்திருக்கிறார்.
இவரைப் போய் ஓய்வெடுங்கள் என்று சொல்ல முடியுமா? படி ஏறி வரும்பொழுது அவர் வேகமாக ஏறுகிறார்; எனக்கு மூச்சு வாங்குகிறது.
எனவேதான் சொல்லுகிறேன், பெரியாரைத் தாண்டி, இன்றைக்கு இந்த சமூகத்திற்கு நீங்கள் தேவைப்படு கிறீர்கள். இந்தப் பகுத்தறிவாளர் சங்கங்களின் சார்பாக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, பெரியாரைவிட, அதிக நாள்கள் ஆயுள் மட்டுமல்ல, கொள்கை வீரியத்தோடு எங்களை நீங்கள் வழிநடத்தவேண்டும்.
எங்களை வழிநடத்தக்கூடிய தகுதி, பெரியார் திடலுக்குத்தான் உண்டே தவிர, சங்கரமடத்திற்கு அல்ல!
எங்களை மட்டுமல்ல, முதலமைச்சர் சொல்லுகிறாரே, எங்களை வழிநடத்தக்கூடிய தகுதி, பெரியார் திட லுக்குத்தான் உண்டே தவிர, சங்கரமடத்திற்கு அல்ல என்று. அந்த வழியை நீங்கள் எங்களுக்குத் தொடர்ந்து காட்டவேண்டும்.
நீடூழி வாழவேண்டும் என்று உங்களை வாழ்த்தி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்.